போராட்டங்களின் பின்னால் தமிழ் கடும்போக்கு சக்திகள்: மைத்திரி

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ள போதிலும் அதனை வடக்கிலுள்ள தமிழ் கடும்போக்குவாதிகள் குழப்பி வருவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனை இன்று சந்தித்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி இராணுவத்தினர் வசமிருக்கும் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டங்களையும் வடக்கிலுள்ள தமிழ் கடும்போக்குவாதிகளே தூண்டி வருவதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றார்.கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனுக்கும் – ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் மோசமான இயற்கை அனர்த்தங்கள் மற்றும் வடக்கிலும்இ தெற்கிலும் உள்ள கடும்போக்குவாதிகளின் அரசியல் ரீதியான தடைகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் ஸ்ரீலங்கா அரசாங்கம் பல துறைகளில் முன்னேற்றத்தை காண்பித்துள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நா துணைச் செயலாளர் அதற்காக ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வடக்கிலுள்ள கடும்போக்குவாதிகள் போரினால் இடம்பெயர்ந்து வாழும் அப்பாவித் தமிழ் மக்களை பயனபடுத்தி அரசாங்கம் வழங்கும் காணிகளையும் வீடமைப்புத் திட்டங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்க வைத்துள்ளதுடன் அவர்களைக் கொண்டு சர்ச்சைக்குறிய பகுதிகளிலுள்ள அவர்களின் பூர்வீகக் காணிகளை கோரி ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தென் பகுதியில் உள்ள சில கடும்போக்கு சிங்கள சக்திகளும் அரசாங்கத்தின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தமது அரசாங்கம் நல்லிணக்க செயற்பாடுகளையும் அபிவிருத்திப் பணிகளையும் தடையின்றி முன்னெடுத்து வருவதில் உறுதியாக இருப்பதாகவும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஐ.நா அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனநாயகக் கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மக்களுடன் விரிவான கலந்தரையாடல்களை மேற்கொண்ட வண்ணம் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைகளை மதித்து செயற்பட முன்வந்துள்ளது குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாக கூறியுள்ள ஐ.நா துணைச் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் ஸ்ரீலங்காவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஐக்கிய நாடுகள் சபை பெற்றுக்கொடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையணிக்கு வழங்கிவரும் பங்களிப்பும் மகத்தானது என்றும் ஐ.நா அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்போது ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணிக்கு அதிகளவில் ஸ்ரீலங்கா படையினரை இணைத்துக் கொள்ள ந்டவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை திருகோணமலைக்கு தான் மேற்கொண்ட விஜயத்தின் போது கிழக்கு மாகாணம் வரட்சி காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை நேரில் கண்டதாகத் தெரிவித்துள்ள ஐ.நா அதிகாரி வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி தான் இன்று கந்தளாய் என்ற சிங்கள பிரதேசத்திற்கு விஜயம் செய்ததாகவும் அங்கு கடந்த ஒரு வருடகாலமாக மழை பெய்யாததால் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயமும் அழிவடைந்துள்ளதாகவும் ஐ.நா அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

கடும் வரட்சி கிழக்கு மாகாணத்திற்க மாத்திரமன்றி நாடு முழுவதையும் மோசமாக பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித பாரபட்சமும் இன்றி தாங்கள் உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்