மக்களின் கருத்தறியும் குழு சம்பந்தனுடன் சந்திப்பு ; இறுதி அறிக்கை விரைவில் அரசிடம்

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவினர் நேற்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றி நாடு முழுவதிலும் மக்களிடம் பெற்ற கருத்துக்கள் அடங்கிய இறுதி அறிக்கையை விரைவில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவிருப்பதாக அக்குழுவினர் தன்னிடம் உறுதியளித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தலைமையில் உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். புதிய அரசியல்சாசனமொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர் என்ற விடயத்தை எடுத்துக்கூறிய இக்குழுவினர், மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிப்போம் எனக் கூறியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

பிரச்சினைகளை அரசியலமைப்பு ஊடாக தீர்த்துக் கொள்வது நாம் கருதியது போன்று அவ்வளவு சிரமமாக இருக்காது என்பது எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பின் போது தெரியவந்தாக லால் விஜயநாயக்க கூறினார். பிரச்சினைகளை மிகவும் நியாய பூர்வமான வழியில் தீர்த்துக் கொள்ள முடியும். இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து விசேடமான யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஆக்கபூர்வமான கருத்துக்களை அவர் முன்வைத்திருந்தார். கடந்த காலங்களில் அரசியலமைப்பின் கீழ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்திருக்கவில்லை.

அரசு ஜனநாயகத்தை ஏற்படுத்தும் மிகவும் பலமான அதேபோல், இனங்களுக்கு இடையில் அந்நியோன்யத்தை ஏற்படுத்தி தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் அரசியலமைப்பொன்றையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதைத் தான் தாமும் எதிர்பார்ப்பதாக லால் விஜயநாயக்க கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பின் பின்னர் நாளை (இன்று வியாழக்கிழமை) பிரதமரைச் சந்திக்கவிருப்பதாகவும், எதிர்வரும் 15ஆம் திகதி ஜனாதிபதியையும் சந்திக்கவிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். இறுதி அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல்மாத இறுதியில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். இம்மாத இறுதியில் அபிப்பிராயங்களை சேகரிக்கும் பணிகளை நிறைவு செய்யவிருப்பதுடன், அதன் பின்னர் அறிக்கை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.

மக்களிடம் பெறப்பட்ட அபிப்பிராயங்களை உள்ளடக்கி தமது பரிந்துரைகளும் முன்வைக்கப்படும் எனச் சுட்டிக்காட்டிய லால் விஜயநாயக்க, அரசியலமைப்பு பிரச்சினையை விடவும் மக்கள் மத்தியில் ஆழமான பிரச்சினைகள் இருப்பதை மக்களிடம் கருத்தறிய செல்லும் போது எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது என்றும் கூறினார். எனவே இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் எவ்வளவு சிறந்த அரசியலமைப்பை உருவாக்கியும் சில நேரங்களில் அதனால் மக்களுக்கு பலன்கிடைக்காது என்பதை எம்மால் உணர முடிந்தது என்றார்.

அதேநேரம், நாடு முழுவதிலும் நடத்திய அமர்வுகளில் சுமார் 2 ஆயிரம் பேர் தமது குழுவின் முன்னிலையில் அபிப்பிராயங்களை முன்வைத்ததாகவும், இவர்களில் பெரும்பாலானவர்கள் தனிநபர்களாக அன்றி அமைப்புக்களாகவே கருத்துக்களை சமர்ப்பித்துள்ளனர். இதனைவிட எழுத்துமூலம் சுமார் ஆயிரம் பரிந்துரைகளும் கிடைத்துள்ளன. மொத்தமாக சுமார் 5 ஆயிரம் பரிந்துரைகள் கிடைத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.