மனந்திறந்தார் டொனி பிளையர்

ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான ஈராக் போரின் போது இடம்பெற்ற தவறுகளுக்கு, தான் வருந்துவதாகத் தெரிவித்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளையர், ஆனால், சதாம் ஹூஸைனை வீழ்த்தியமை குறித்து வருத்தமேதும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார். ஈராக்கில், சதாம் ஹூஸைன் தலைமையிலான அரசாங்கத்திடம் மாபெரும் அழிவை உண்டாக்கக்கூடிய ஆயுதங்கள் காணப்படுவதாகவும் இரசாயன ஆயுதங்கள் காணப்படுவதாகவும் கூறியே, ஈராக் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அங்கு அப்படியான எவையும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், தற்போது கருத்துத் தெரிவித்துள்ள டொனி பிளையர், ‘எங்களுக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் தவறானவை என்பதால் நான் மன்னிப்புக் கோருகிறேன் என நான் தெரிவிக்கலாம், ஏனெனில், தனது மக்களுக்கெதிராகவும் ஏனையோருக்கெதிராகவும் அவர் இரசாயன ஆயுதங்களை அதிகளவில் பயன்படுத்தியிருந்த போதிலும், நாம் நினைத்த விதத்தில் அது காணப்பட்டிருக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

‘புலனாய்வுத் தகவலில் காணப்பட்ட தவறு தவிர, திட்டமிடலில் காணப்பட்ட சில தவறுகள், ஓர் அரசாங்கமொன்றை நீக்கிய பின்னர் என்ன நடைபெறும் என்ற எமது புரிந்துணர்வில் காணப்பட்ட தவறுகளுக்காகவும் நான் மன்னிப்புக் கோருகிறேன்” எனத் தெரிவித்த அவர், எனினும், அப்போருக்காக முழுமையான மன்னிப்பைக் கோர முடியாது எனத் தெரிவித்தார்.

‘சதாமை நீக்கியமைக்காக மன்னிப்புக் கோருவதற்கு நான் கடினமாக உணர்கின்றேன். 2015ஆம் ஆண்டில் இப்போதும் கூட, அவர் இங்கே இருப்பதை விட இல்லாமலிருப்பது சிறப்பானது என நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.