மலேரியா அற்ற நாடு இலங்கை : மகிழ்ச்சி! டெங்கு நிறைந்த நாடு இலங்கை : துக்கம்!

(எஸ். ஹமீத்)

மலேரியா அற்ற நாடாக நான்காவது முறையாகவும் இலங்கை தெரிவாகி இருப்பதானது வரலாற்றிலேயே முதன்முறை என்றும், இலங்கையின் சுகாதார வளர்ச்சியில் இது ஒரு மைல்கல் வெற்றி என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். மலேரியா நோய் பற்றிய விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு ஒன்று இன்று கொழும்பில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்சொன்ன செய்தியைத் தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டிய விடயம்தான். ஆனால், தற்போது, விஞ்ஞானம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்து நிற்கும் இந்தக் காலத்தில் கூட இலங்கையில் டெங்கு நோய் கோலோச்சி மக்களைக் கொன்று குவிப்பதைப் பற்றியும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். வயது வித்தியாசமின்றி, பால் வேறுபாடின்றி அண்மைக் காலங்களில் இலங்கையில் டெங்கு நோய்க்குப் பலியாகிக் கொண்டிருப்பவர்கள் அதிகமாகிக் கொண்டிருப்பது சம்பந்தமாக அரசாங்கமும் சுகாதார அமைச்சும் கரிசனையோடு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மலேரியா அற்ற நாடாக இலங்கையை மாற்றியது போல, டெங்கு இல்லாத தேசமாகவும் நமது நாடு மாற்றமடைய வேண்டும். அதனை நோக்கிய அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். இதுவே மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு!