மஹிந்த பதுக்கிய பணத்தைக் கண்டறிய அமெரிக்க உதவி!?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பில்லியன் கணக்கான பணம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள அமெரிக்காவின் உதவியை அரசு நாடியுள்ளது. வங்கிக் கணக்குகளுடன் தொடர்புடைய விவரங்களை இலங்கையிடம் வழங்குமாறு சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச வர்த்தகத்துறை இராஜங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே இராஜாங்க அமைச்சர் சுஜீவ இந்தத் தகவலை வெளியிட்டார்.

டுபாய் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் மஹிந்த ராஜபக்‌ஷஅரசால் பெருந்தொகையான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசால் குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில், இது தொடர்பில் அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று ஊடகவியளார் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, “கடந்த அரசின் ஆட்சியில் டுபாய் உள்ளிட்ட வெளிநாடுகளின் வங்கிகளில் பெருந்தொகையான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. டுபாய் வங்கியில் பெருந்தொகையான பணம் உள்ளது. அதேபோல் லிபியாவில் 70 பில்லியன், எகிப்தில் 80 பில்லியன் என வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான தகவல்கள் இருந்தால்தான் நாம் நடவடிக்கை எடுக்க முடியும்.

தமது நாட்டு வங்கிகளிலுள்ள கணக்குகள் தொடர்பாக இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு தகவல் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள் உட்படவில்லை. எனவே, அமெரிக்கா போன்ற பலம்மிக்க நாடுகளின் அழுத்தம் இந்த விடயத்தில் தேவை. வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும். அப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டால் வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை அந்த நாடுகள் எமக்கும் வழங்கும்” என்றார். வங்கிக் கணக்குகளுடன் சம்பந்தப்பட்ட நாடுகள் இலங்கைக்கு தகவல்களை வழங்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்காவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், “அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் இதற்கான் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன” என்றார்.