மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக, கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒழுக்கவிதிகளை மீறிய மாணவர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைப்பீடம் தவிர்ந்த, ஏனைய கலைப்பீட மாணவர்களது கற்றல் நடவடிக்கைகள் யாவும், காலவரையற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளன” என்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.   மேலும், “விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும், விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்” எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.   வெள்ளிக்கிழமை (10) இரவு, பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவர்களுக்கிடையில் குழப்பநிலை ஏற்பட்டது. இதையடுத்து, சனிக்கிழமை (11) இடம்பெறவிருந்த கலைத்துறை மாணவர்களின் வரவேற்பு நிகழ்வைக் கொண்டாட வேண்டாம் என, பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

எனினும், அறிவித்தலைப் புறக்கணித்து, வரவேற்பு நிகழ்வை மாணவர்கள் கொண்டாடினர்.   இதையடுத்து, பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைப்பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட மாணவர்களது கற்றல் நடவடிக்கைகள் காலவரையற்று நிறுத்தப்பட்டுள்ளன எனவும், விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் விடுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.