மின்சாரக் கதிரையும் இல்லை ஹைபிரிட்டும் இல்லை – ஜனாதிபதி

யுத்த வெற்றி நாயகர்களை மின்சாரக் கதிரையில் உட்கார வைக்கப்போவதாகக் கூறினார்கள். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. அதேபோல் ஹைபிரிட் நீதிமன்ற முறைமையும் இருக்காது. எமது சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே அனைத்து விசாரணைகளும் நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் ஜெனீவாவுக்கான விஜயத்தினை முடித்துக்கொண்டு நாடுதிரும்பி ஜனாதிபதி, தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் முகமாக ஜனாதிபதி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை – ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே மேற்படி கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில், “எம்மீது சர்வதேசம் கொண்டிருந்த கொடுங்கோபத்தினை எமது இராஜதந்திர நகர்வுகளினூடாக தணியவைத்திருக்கிறோம். இது எமது நல்லாட்சிக்கான அரசாங்கத்துக்குக் கிடைத்த பெரு வெற்றி. கடந்த காலத்தில் அரசாட்சியாளராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, இலகுவாக சர்வதேசத்தினைப் பகைத்துக்கொண்டார். உலகின் பல நாடுகளை ஒன்றுதிரட்டி சக்திவாய்ந்த அமைப்பான ஐக்கிய நாடுகள் சபைக்கெதிரா அரசியல்வாதியொருவர் உண்ணாவிரதமிருந்தபோது அவருக்கு இளநீர்கொடுத்து, சர்வதேசத்தின் பகையினை மஹிந்த அதிகரிக்கச் செய்தார். அதேபோல், உலகின் பகையாளியாகப் பார்க்கப்பட்ட கடாபியுடன் தோளில் கைபோட்டுக்கொண்டதனூடாக மேற்குலகின் பகையினை மேலும் வளர்த்துக்கொண்டார். இவ்வாறான நிலைமைகளினால்தான் சர்வதேசத்தின் கடும்போக்கு, எமது நாட்டினை வாட்டி வதைத்தது.

ஆனால், எமது அரசாங்கம் சரியான முறையில் சர்வதேசத்தை அணுகி, அவர்களின் கோபத்தினைத் தணித்திருக்கிறோம். இது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றியினைச் சகிக்க முடியாதவர்கள் தேவையற்ற விதத்தில் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். ஆகையினால், அவர்களுக்கும் எமது நியாயத்தினைத் தெளிவுபடுத்தவேண்டும். எனவே, வெகுவிரைவில் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் வழங்கக் காத்திருக்கிறோம்.

அதேபோல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தங்களை மின்சாரக் கதிரைக்கு அனுப்பிவிடுவோம் என மக்கள் மத்தியில் பொய்ப் பிரசாரம் செய்த முன்னாள் ஆட்சியாளர்கள் இனிமேல் பயப்பிடத்தேவையில்லை. ஏனெனில் அவ்வாறானதொரு நிலைமை அவர்களுக்கு ஏற்படாது. அதேபோல், சர்வதேச கலப்பு நீதிமன்றம் அமையவுள்ளதாகக் கூறுவதிலும் உண்மையில்லை. எமது நாட்டின் உயர்நீதிமன்ற சட்டதிட்டங்களுக்கு அமையவே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இந்த விசாரணையின் போது குற்றச்சாட்டுக்குள்ளான அனைத்துத் தரப்பினரும் தமது நியாயங்களை வெளிப்படுத்த முடியும். அது புலிகளாக இருந்தாலும் பரவாயில்லை, இராணுவத்தினராக இருந்தாலும் பரவாயில்லை.

நாட்டு மக்கள் ஒரு விடயத்தினைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சர்வதேசம் எமக்கு யோசனைகளைத்தான் முன்வைத்திருக்கிறார்கள். அவைகளைக் கட்டளைகளாகப் பார்க்கக்கூடாது. ஆகையினால், எமது நடத்தைகளின் பிரகாரமே சர்வதேசத்தின் மேலதிக ஆதரவினையும் பெற்றுக்கொள்ள முடியும். இறுதி யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள் நேரடியாக உதவியிருந்தன. ஆகையினால் அவர்களுக்கு இந்த யுத்த வெற்றியின் நிலைமை நன்கு தெரியும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையும் நன்கு தெரியும். எனவேதான் இந்தப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே, நாட்டின் நலனுக்காக அனைத்துத் தரப்பினரும், அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.