மியான்மாரை ஆதரிக்கிறது சீனா

றோகிஞ்சா முஸ்லிம் ஆயுததாரிகள் மீது மேற்கொண்டு வருவதாக, மியான்மார் அரசாங்கம் தெரிவிக்கும் இராணுவ நடவடிக்கைக்கான தனது ஆதரவை, சீனா வெளியிட்டுள்ளது. ஓகஸ்ட் 25ஆம் திகதி, பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாகவே, 400,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ராக்கைனிலிருந்து பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அத்தோடு, பல நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

எனினும், மியான்மாரின் உயர்நிலை அரச அதிகாரிகளிடம் கருத்துத் தெரிவித்த, மியான்மாருக்கான சீனத் தூதுவர் ஹொங் லியாங், “ராக்கைனிலுள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான சீனாவின் நிலைப்பாடு, தெளிவாகக் காணப்படுகிறது. இது, வெறுமனே உள்விவகாரம் ஆகும்” என்று குறிப்பிட்டார்.

“பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிரான, மியான்மார் பாதுகாப்புப் படையினரின் எதிர்த் தாக்குதல்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கான அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும், மிகவும் வரவேற்கப்படுகின்றன” என அவர் தெரிவித்தார்.

மியான்மாரின் இந்த நடவடிக்கைகள் காரணமாகவே, பொதுமக்கள் பாதிக்கப்படுகின்ற போதிலும், சீனாவின் நிலைப்பாடு, அதைப் பற்றிக் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

ஆனால், சீனாவின் இந்த நிலைப்பாடு, புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது என, நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இராணுவ ஆட்சியிலிருந்து மாற்றமடைந்து, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கமொன்று ஆட்சியில் காணப்படும் நிலையில், மியான்மார் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டியில், ஐக்கிய அமெரிக்காவும் சீனாவும் காணப்படுகின்றன.

மியான்மார் மீதான கண்டனங்களை, ஐ.அமெரிக்கா ஏற்கெனவே வெளிப்படையாக வழங்கியுள்ள நிலையில், இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, மியான்மாருடனான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு, சீனா முயல்கிறது எனக் கருதப்படுகிறது.