மீண்டும் பஸ் சேவையை ஆரம்பிக்குமாறு கோரிக்கை

முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை இடம்பெற்ற பஸ் சேவையினை மீண்டும் ஆரம்பிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆறாண்டுகளாக குறித்த பஸ் சேவை இடம்பெறாமையால் மக்கள் பல்வேறு அ​சௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் ஸ்கந்தபுரம் கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் பஸ் சேவைகள் நடைபெற்ற நிலையில் அக்கராயனில் துணுக்காய் பஸ் தரிக்கக் கூடாது என கிளிநொச்சி தனியார் பஸ் சங்கத்தினர் அறிவித்த நிலையில் பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக இடம் பெறவில்லை.

இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு குறித்த கிராமங்களின் பொது அமைப்புகள் மனுக்கள் கையளித்த போதிலும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்ட போதிலும் பஸ் போக்குவரத்து இடம்பெறவில்லை.

இந்நிலையில் வடமாகாண போக்குவரத்து அமைச்சு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.