முதல்வருக்கு உறுப்பினர்களின் ஆட்சேபனை கடிதம்!

இன்று [30-01-2016] அவசரமாக கூடிய வடமாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், முதல்வருக்கு தமது ஆட்சேபனை கடிதத்தை அனுப்பிவைத்துள்ளனர். அக்கடிதம் பின்வருமாறு.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே!

“அரசியல் தீர்வு திட்டம்” தொடர்பிலான வடக்கு மாகாணசபை ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கூட்டான நிலைப்பாடு:

கடந்த 20-01-2016 அன்று மாண்பிமிகு முதலமைச்சர், கௌரவ பேரவைத்தலைவர், கௌரவ அமைச்சர்கள், கௌரவ உறுப்பினர்கள் [வடக்கு மாகாணசபை ஆளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு] உடனான விசேட சந்திப்பின்போது மூன்றுவிடயங்கள் குறித்து பேசப்பட்டது.

* வினைத்திறன் மிக்க மாகாணசபையாக செயற்படுதல்

* தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயற்படுதல்

* அரசியலமைப்பு விடயத்தில் வடக்கு மாகாணசபையின் பங்குபற்றுதல்.

என்பனவே அவையாகும்:

அதன்போது உறுப்பினர்கள் ஏகோபித்த குரலில் அரசியலமைப்பு விடயத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பாக மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட எந்தவோவொரு பிரதிநிதியும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வெளியில் அரசியல் தீர்வு முன்மொழிவுகள் விடயத்தில் செயற்படுவது, அக்கறைமுரண்பாடான நிலைமையை தோற்றுவிக்கும் என்பதை வலியுறுத்தி நின்றார்கள்.

இந்நிலையில் 21-01-2016 அன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கான விசேட சந்திப்பிலும், மேட்படி விடயம் வலியுறுத்தப்பட்டது. தாங்களும் தங்களுடைய உரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை முற்றாக ஏற்றுக்கொண்டதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீர்வு திட்டத்தை நோக்கிய முன்னெடுப்புகளில், எமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும், தமிழ்மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையிலான தீர்வுத்திட்டம் எமதுமக்களுக்கு கிடைப்பதற்கு, நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் அரசியல் அடையாளத்தோடு, ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா சம்மந்தன் அவர்கள், மிகத்தெளிவான வார்த்தைகளில் பின்வரும் விடயங்கள் குறித்து குறிப்பிட்டிருந்தார். இம்முறை முன்வைக்கப்படும் தீர்வு திட்டத்தை நாம் மக்களின் முன்வைப்போம். அவர்கள் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே அதனை நாம் ஏற்றுக்கொள்வோம். சமஸ்டி என்பதை தவிர வேறு எந்த தெரிவும், எமக்கு முன்னால் கிடையாது. மக்களின் கருத்துக்களை அறிவதற்கு நாம் முழுமையான விருப்பத்தோடு இருக்கின்றோம். மக்கள் தமது கருத்துக்களை, அவை முன்வைக்கப்பட வேண்டிய சபைகளில் முன்வைக்கலாம். அதற்கான முயற்சிகள் அனைத்தையும் நாம் மேற்கொள்ளவேண்டும். என்று மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஏகோபித்து ஏற்றுக்கொண்டார்கள். மக்களின் கருத்துக்களை அறியும் எல்லா முயற்சிகளையும் நாம் வரவேற்கிறோம். அதில் எமக்கு எவ்வித மாற்றுக்கருத்துகளும் கிடையாது. இவாறான சூழலில் வடக்கு மாகாணசபையின் கௌரவ உறுப்பினர்கள் அடங்கிய, விசேட குழு அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் வடக்கு மாகாணசபையின் முன்மொழிவுகளை மேற்கொள்வதற்கென, மாண்புமிகு முதலமைச்ர் தலைமையில் அமைக்கப்பட வேண்டும் என பிரேரிக்கப்பட்டு, கடந்த 26-01-2016 பேரவையில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

மேற்படி எல்லா சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தப்பட்ட முக்கிய விடயமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடையாளத்தோடு, கொள்கைகளோடு மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட பிரதிநிதிகள் எவரும் அந்த ஆணையை வேறு அரங்கங்களிலோ, அல்லது வேறு நோக்கங்களுக்காகவோ பயன்படுத்தகூடாது. வேறு தளங்களில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களை உள்வாங்கி, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற மக்கள் ஆணையைப் பெரும்பான்மையாக பெற்றிருக்கின்ற எமது கட்சி, கருத்து வேற்றுமைகளை அங்கீகரிக்கின்ற உயர்பண்பை கொண்டிருக்கின்றது, மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் ஜனநாயகத் தன்மையை எமது கட்சியின் பலவீனமாக கருதுவதும், அல்லது கட்சிக்குள் பாரிய பிளவுகள் இருப்பதாக வெளிக்காட்டும் விதத்தில் செயல்படுவதும் வரவேற்கத்தக்க நடவடிக்கைகள் அல்ல.

அந்தவகையில் எதிர்வரும் 31-01-2016 அன்று “தமிழ் மக்கள் பேரவை “ என்னும் ஓர் அமைப்பு “அரசியல் தீர்வு திட்ட முன்வரைவு “ ஒன்றினை பொதுமக்கள் முன்னிலையில் வெளிவிடும் ஆரம்ப நிகழ்வு ஒன்றினை, தங்களுடைய தலைமையில் நடாத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக, ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். மேற்படி செயற்பாட்டினை முன்னெடுக்கும் முழுமையான உரித்தும்,, பொறுப்பும் மேற்குறித்த அமைப்பிற்கு, அல்லது அவைபோன்ற இன்னும் பல அமைப்புகளுக்கும் இருப்பதை, நாம் முழுமையாக அங்கீகரிக்கின்றோம். அவர்களது முயற்சிகளை வரவேற்கின்றோம். அதில் எம்மிடையே எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் அத்தகைய செயற்பாட்டின் தலைமைப்பொறுப்பை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடையாளத்தோடு மக்கள் ஆணையை பெற்றுக்கொண்ட, வடக்கு மாகாணசபை முதலமைச்சராகிய தாங்கள் ஏற்றிருப்பதை, எக்காரணம் கொண்டும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும், அது அரசியல்ரீதியான அக்கறைமுரண்பாடுகளை தோற்றுவிப்பதோடு, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்கின்ற தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அரசியல் பலத்தை மலினப்படுத்தும் செயற்பாடாகவே இருக்கும். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அடிப்படையில், தங்களுடைய மேற்படி செயற்பாடுகளுடன் எம்மால் ஒத்துழைக்க முடியாது என்பதையும், அதனை நாம் முழுமையாக ஆட்சேபிக்கின்றோம் என்பதையும், இத்தால் தங்களின் கவனத்துக்கு பணிவுடன் கொண்டுவருகின்றோம்.

நன்றி

இவ்வண்ணம்

உறுப்பினர்கள் வ.மா.ச