மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் மனோகணேசன்…சிவாஜிலிங்கம் காட்டம்

தேசிய சுகவாழ்வு, நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் பொதுபலசேனாவோடு தன்னை இணைத்து பேசியதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் அமைச்சர் மனோகணேசன் நாகரிகமான முறையில் பேசுவதற்கு பழகிகொள்ள வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் மனோகணேசன் பொதுபாலசேனாவின் ஞானராச தேரருடனான கருத்து மோதலின் போது சிவாஜிலிங்கம், ஞானராச தேரருடனான போன்றோர் எல்லாம் ஒரே மாதிரி செயல்படுபவர்கள் என்ற கருத்தில் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அமைச்சர் மனோ கணேசனுக்கு என்னுடைய செயற்பாடுகள் தொடர்பில் விமர்சிப்பதற்கு கருத்து, சுதந்திரம் உண்டு அதற்காக என்னை பொதுபால சேனாவோடு ஒப்பிட்டு பேசுவதற்கு அமைச்சர் மனோ கணேசனுக்கு அருகதை கிடையாது.

ஞானராச தேரருடன் கருத்து மோதல் என்றால் அவருடன் அமைச்சர் பேச வேண்டும். அதனை விடுத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது. அமைச்சர் மனோகணேசன் மலையக மக்களுடைய தலைவராக உள்ளார். அவர் அந்த மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றார்.

அவரை நான் மதிக்கின்றேன். இனியாவது அவர் தனது கருத்துக்களை நிதானித்து வெளியிட வேண்டும் – என அவர் மேலும் தெரிவித்தார்.