மோடியின் தாக்குதலால் பிணத்தை அடக்கம் செய்ய முடியவில்லை

“எங்கள் சொந்த பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு அதை திரும்ப கேட்கும்போது எங்களால் எடுக்க முடியவில்லை. நாங்கள் சண்டையிட்டால் வங்கி அதிகாரிகள் அதை எங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது அதனால் எதுவும் செய்ய முடியவில்லை”

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மனைவியின் பிணத்தை அடக்கம் செய்ய முடியாமல் மூன்று நாள் தவித்துள்ளார் ஒரு கூலித்தொழிலாளி.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த முன்னி லால் என்ற கூலித்தொழிலாளி டெல்லி நொய்டாவில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி பூஹ்லாவதி புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 28-11-2016 அன்று பகல் 2 மணி அளவில் இறந்துவிட்டார். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் முன்னி லாலினால் மனைவியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்று இறுதி சடங்கு செய்ய முடியவில்லை. தனது தற்காலிக பிளாஸ்டிக் கூடாரத்தில் கோணி போட்டு உடலை மூடி வைத்து மூன்று நாள் பணத்திற்காக காத்திருந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

“காலை 9 மணி அளவில் தர்மசில்லா மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன். அங்கிருந்து வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு போக சொன்னார்கள். அங்கு 2 மணி அளவில் மனைவி இறந்துவிட்டார். ஊசி, உணவு, மருந்து போன்ற செலவுகளுக்காக கைவசம் இருந்த ரூ600-700-ஐ செலவு செய்யவேண்டியிருந்தது.”

”எனது மகன் வங்கி கணக்கில் ரூ 16,000 இருக்கிறது. அதை எடுக்க வங்கிக்கு சென்றேன். பல மணிநேர காத்திருப்புக்கு பிறகு வங்கியில் பணம் இல்லை என கைவிரித்து விட்டார்கள். எனது நிலையை எடுத்து சொல்லியும் யாரும் புரிந்து கொள்ளவில்லை.”

இச்செய்தி கேள்விபட்ட முன்னிலாலின் அண்டை வீட்டார்கள் வங்கியை அணுகியிருக்கிறார்கள். “நாங்கள் 10 மணிக்கு சென்றோம். இன்னும் சற்று நேரத்தில் பணம் வந்துவிடும் என்றார்கள். மீண்டும் சென்ற கேட்டபோது பணம் தீர்ந்துவிட்டதாக கூறிவிட்டார்கள்” என்கிறார் லாலின் அண்டை வீட்டுக்கார் அப்துல்.

இது செவ்வாய்கிழமையும் தொடர்ந்திருக்கிறது. ஒரு அரசியல்வாதியும், போலீஸ்காரரும் பண உதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள். அதை மறுத்துவிட்ட லால் “ அடுத்தவரிடம் பணம் வாங்கி தன் இறுதி சடங்கு செய்யப்படுவதை என் மனைவி விரும்பமாட்டாள்” என மறுத்திருக்கிறார்.

லாலின் மகன் ஜனார்தன் பிரசாத் கூறும்போது “எங்கள் சொந்த பணத்தை வங்கியில் செலுத்திவிட்டு அதை திரும்ப கேட்கும்போது எங்களால் எடுக்க முடியவில்லை. நாங்கள் சண்டையிட்டால் வங்கி அதிகாரிகள் அதை எங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள். எங்களுக்கு பயமாக இருந்தது அதனால் எதுவும் செய்ய முடியவில்லை” என்கிறார். இவரும் நொய்டாவில் கூலித் தொழிலாளியாக வேலை செய்கிறார்.

”சண்டையிடும் அளவிற்கு எங்களுடைய சமூகத் தகுதி இல்லை. நாங்கள் இறைஞ்சுவதையும் அவர்கள் கண்டு கொள்ளல்லை. நாங்கள் என்ன செய்வது?” என்று கையறு நிலையில் கேட்கிறார் லால். ஆனால் ஆண்டிராய்ட் செயலி(app) வழியாக தாங்கள் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியதாகவும் அமோகமாக மக்கள் மோடியை ஆதரிக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.க-வினர். நாட்டின் அனைத்து கிராமங்களும் மக்கள் மோடி ஆப்(செயலியை) டவுன்லோட் செய்து வைத்துகொண்டு எந்நேரமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதை தான் நேரில் பார்ப்பதாவும் என்று தந்தி டி.வி விவதத்தில் கூச்சமில்லால் பேசுகிறார் பா.ஜ.க-வின் போக்கிரியான ஆச்சாரி.

இறுதியாக 30-11-2016 அன்று அவருக்கு வங்கியிலிருந்து பணம் எடுக்க முடிந்திருக்கிறது. மூன்று நாட்கள் காத்திருப்புக்கு பிறகு 1-12-2016 காலை இறுதி சடங்கு செய்கிறோம் என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார் லால்.

லால் 22-ஆண்டுகளுக்கு முன்னர் நொய்டாவிற்கு கூலி வேலை செய்ய வந்திருக்கிறார். புதிய பொருளாதார கொள்கையின் வளர்ச்சிகளில் குறியீடாக காட்டப்படும் நகரம் நொய்டா. அவ்வளர்ச்சி லாலுக்கு செய்திருப்பது என்ன? அவரது 22 ஆண்டுகால உழைப்பையும் உறுஞ்சி, இவரை போன்றவர்கள் வங்கியில் சேமித்துவைத்திருந்த சொற்ப தொகையையும் முதலாளிகளுக்கு வாராக்கடனாக கொடுத்துவிட்டு, முதலாளிகளின் அகோரபசிக்காக தொடுத்திருக்கும் தாக்குதலுக்கு பலியாக்கப்பட்டிருக்கிறார்.

கருப்புபண எதிர்ப்பு துல்லிய தாக்குதலில் ஏற்பட்டிருக்கும் இணைச்சேதம் (collateral damage) என்று இச்செய்திகளை கடந்து செல்ல சிலர் முயற்சிக்கலாம். ஆனால் சேதம் ஏற்பட்டிருப்பது முழுக்க முழுக்க உழைக்கும் மக்களுக்குதான் எனும் போது தாக்குதலின் இலக்கே உழைக்கு மக்கள் தான். இது ஏழைகளின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் துல்லியத் தாக்குதல்.

இந்த அரச கட்டமைப்பு உழைக்கும் மக்கள் பால் எவ்வளவு கொடூரமானது, இரக்கமற்றது என்பதை தான் இச்செயல்கள் நிரூபித்து வருகின்றது.