யாழ் ஒருங்கிணைப்பு குழு கட்டத்தை ஈ.பி.டி.பி புறக்கணிப்பா ?

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 13 மாதங்களுக்கு பின்னர் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இக் கூட்டத்திற்கு ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா , வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா உள்ளிட்ட அக் கட்சியை சேர்ந்தவர்கள் சமூகமளிக்கவில்லை. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ம் திகதி நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு அக்கால பகுதியில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா இணைத்தலைவராக இருந்தார்.

அதன் போது அவர் கூறிய கருத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்க்கருத்து கூற முற்பட்ட வேளை கூட்டத்தில் அமளி ஏற்பட்டு கைக்கலப்பு ஏற்பட்டு தண்ணீர் போத்தல் உள்ளிட்ட பொருட்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அத் தாக்குதலில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்து இருந்தனர். அதன் பின்னர் இன்றைய தினமே யாழில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறுகின்றது.