யுத்தத்தின் போது, இராணுவத்தினருக்கு தமிழர்கள் இலக்கு அல்ல

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, புலிகள் அமைப்பினரால் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டிருந்த பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான மனிதாபிமானப் போரையே படையினர் மேற்கொண்டிருந்தனர். தவிர, பொதுமக்களைக் கொன்றுதான் வெற்றிபெற வேண்டுமென்ற கொள்கையைப் படையினர் கொண்டிருக்கவில்லை என்று அரசாங்கம், நேற்று அறிவித்தது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, 40 ஆயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டதாக, யுத்தத்தின் இறுதி மூன்றாண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளராகவும் இலங்கையின் யுத்தம் பற்றி விபரிக்கும் ‘தி கேஜ்’ எனும் நூலின் ஆசிரியருமான கோர்டன் வைஸே, தனது நூலில் எழுதியிருந்தார்.  இந்நிலையில், 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா கூட சொல்லவில்லை என்று திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சிகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துரைகள் தொடர்பில், கடந்த சில தினங்களாக பரவலான பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன. ஒன்று, இன்னும் ஒன்பது மாதங்களில், சர்வதேச நீதிபதிகள் இலங்கை வந்தடைவர் என்று ஊடமொன்றில் வெளியான தகவல் தொடர்பில், ஜனாதிபதி விளக்கமளித்திருந்தார். அந்த விளக்கத்தின் போது, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு, சர்வதேச நீதிபதிகள் வரவழைக்கப்பட மாட்டார்கள் என்று அவர் தெளிவாகக் கூறியிருந்தார். அத்துடன், அவ்வாறு சர்வதேச நீதிபதிகளை வரவழைப்பதற்கான அனுமதியும் இலங்கை அரசியலமைப்பில் காணப்படவில்லை என்றும் அவ்வாறானதொரு அனுமதியைப் பெற இடமளிக்கப்போவதுமில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இதேவேளை, ஈரான் மற்றும் லிபியாவில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலான மேற்குலக நாடுகளின் தலையீட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிப்பதான செய்தியொன்றையும் ஊடகமொன்று வெளியிட்டிருந்தது.

இருப்பினும், ஜனாதிபதியின் அந்த உரையின் போது, அவ்வாறானதொரு விடயத்தை அவர் சொல்லவில்லை.

அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்ட் தெரிவித்திருந்த கருத்தொன்றையே அவர் அவ்விடத்தில் ஞாபகமூட்டினார். தவிர, ட்ம்ப்ட் கூறிய கருத்தை வியாக்கியானம் செய்யவோ அல்லது அது சரியென்றோ அவர் கூறியிருக்கவில்லை. இவ்வாறான செய்திகள் மூலம், மேற்குலக நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் விரிசலொன்றே தோற்றுவிக்கப்படும்.

குறிப்பிட்டதொரு தரப்பை ஒதுக்கவோ அல்லது புறந்தள்ளிவிட்டுச் செயற்படும் வகையிலோ, இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை அமையவில்லை. அனைத்து நாடுகளுடனும் சுமூகமாகப் பழகி, அவற்றின் ஒத்துழைப்புகளைப் பெற்று நாட்டை அபிவிருத்தியின் பாதையில் இட்டுச்செல்லவே, இந்த அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.

ஜெனீவாவில், இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, எமக்கு ஆதரவளித்த நாடுகளுடனும் நாம் தொடர்ந்து நட்புறவைப் பேணி வருகின்றோம்.

எமது படையினருக்கு எதிரான யுத்த நீதிமன்றம் பற்றிப் பேசுகிறார்கள். எது எவ்வாறாயினும், இலங்கையின் இறைமையில் தலையிட எவரையும் அனுமதிக்கப்போவதில்லை என்பதே எமது அரசாங்கத்தின் தீர்மானமாகும். இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களை இலக்கு வைத்து படையினர் தாக்குதல்களை நடத்தவில்லை. அது அவர்களது கொள்கையாகவும் இருக்கவில்லை. சிலர் தனிப்பட்ட ரீதியில் சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கலாம். அவை தொடர்பில் உள்ளக விசாரணைகள் நடத்தப்படும். அதற்காக, ஒருபோதும் சர்வதேச நீதிபதிகள் வரவழைக்கப்பட மாட்டார்கள். இதுவே ஜனாதிபதியினதும் பிரதமரினதும் தீர்மானமாகும். சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கூறியுள்ளார். அவரே கூறிய பிறகு, அது பற்றி சுமந்திரனோ அல்லது அக்கட்சியின் வேறு தரப்பினரோ பேசுவதால் எந்தப் பயனும் இல்லை’ என்று அமைச்சர் மேலும் கூறினார்.