லாஸ் வெகாஸில் பயங்கரம்; 50 பேர் பலி; 200 பேர் காயம்

ஐக்கிய அமெரிக்காவின் நெவாடா மாநிலத்திலுள்ள லாஸ் வெகாஸ் நகரில், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறைந்தது 50 பேர் பலியானதோடு, 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் பின்னர், குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தாக்குதலை மேற்கொண்ட நபர், லாஸ் வெகாஸைச் சேர்ந்த உள்ளூர் நபர் போன்று காணப்பட்டார் என்று தெரிவித்த பொலிஸார், அவர் தனித்தே செயற்பட்டார் என்றும் குறிப்பிட்டனர். ஆனால், குறித்த நபரோடு வந்த அவரது ஆசியப் பெண் குறித்து, மேலதிக தகவல்களை, பொலிஸார் தேடி வருகின்றனர். லாஸ் வெகாஸில் இடம்பெற்று வந்த இசை நிகழ்ச்சியொன்றில், இலங்கை நேரப்படி நேற்று முற்பகல் 11:15 மணியளவில், இச்சூட்டுச் சம்பவம் ஆரம்பித்தது.