வடக்கும் கிழக்கும் இணைவது

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா நீதிமன்றத்துக்கு, நேற்றுப் புதன்கிழமை சென்றிருந்த சுமந்திரன் எம்.பியிடம், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,“வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது, 1957ஆம் ஆண்டு பண்டா- செல்வா ஒப்பந்தத்தில் இருந்து வருகின்ற ஒரு நிலைப்பாடாகும்.

அந்த ஒப்பந்தத்தில் கூட, மாகாண எல்லைகளுக்கு அப்பால் பிராந்திய சபைகள் ஒன்று சேரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்குக் காரணம், வடக்கு, கிழக்கு இணைக்கப்பட முடியும் என்பதற்காகத் தான். இலங்கை – இந்திய ஒப்பந்தத்திலும் தெட்டத் தெளிவாக கூறப்பட்டு அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்காரணமாகத் தான், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திலும் மாகாணசபை சட்டத்திலும், அதற்கான ஏற்பாடுகள் இருந்தன. தற்காலிகமாக இணைக்கப்பட்டும் இருந்தது. வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு, ஒரு நிர்வாக அலகாக இருக்க வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

2010ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் முன்வைத்து வருகின்ற எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களில், வடக்கு – கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று தெட்டத் தெளிவாக சொல்லுவதுடன், அந்த இணைப்பு, கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் பூரண சம்மந்ததுடன் இடம்பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றோம்.

அதற்கும் அடிப்படையான சில காரணங்கள் உண்டு. இலங்கை தமிழரசுக் கட்சி 1949 டிசெம்பர் 19ஆம் திகதி உருவாக்கப்பட்ட யாப்பிலேயே, முஸ்லிம் மக்களும் ஒரு தேசத்துக்கு உரியவர்கள். அவர்களுக்கும் அந்த அடிப்படையில் சுயநிர்ணய உரித்து உண்டு என்பது எங்களாலே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம்.

ஆகையினாலேயே, வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும். மொழி வாரியான ஒரு அலகு உருவாக்கப்பட வேண்டும். தமிழ் பேசுகின்ற மக்களின் பிரதேசம் என்கின்ற ரீதியில் அது செய்யப்பட வேண்டும். ஆனால், அப்படி செய்யப்படுகின்ற போது தங்களுக்கு என்று ஒரு தனித்துவம் கொண்ட முஸ்லிம் மக்களினுடைய சம்மதத்தோடும் சேர்ந்து தான் அது செய்யப்பட வேண்டும்” என்றார்.

இதன்போது, “வடக்கு – கிழக்கை இணைக்க அனுமதிக்கமாட்டோம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளாரே” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “முஸ்லிம் மக்களினுடைய நிலைப்பாடு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூற்றினாலே வருவதல்ல. ஜனாப் மஹ்ருப் அஷ்ரப் உயிருடன் இருந்த காலத்திலேயே வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் எழுத்து மூல ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த இணக்கப்பாடு, இன்றும் செல்லும் என்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக எங்களுக்கு வலியுறுத்தி வருகிறது. அந்த இணக்கப்பாடுகளின் அடிப்படையிலேயே நாங்கள் என்னவிதமாக இந்த இணைப்பை முன்கொண்டு செல்லலாம் என்பதை ஆராய்ந்து வருகின்றோம்.

கடந்த 25 வருடமாக ஏற்பட்ட கசப்பான சில சம்பவங்களால் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். ஆனால், நாங்கள் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்குரிய வேலைகளை செய்து வருகின்றோம். அதற்காக வடக்கு, கிழக்கு இணைப்பு ஒருநாளிலே இரவோடு இரவாக ஏற்படுத்தக் கூடியது அல்ல. ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பு இடம்பெற வேண்டும் என்பதில் உறுதியாக செயற்படுகின்றோம்” என சுமந்திரன் எம்.பி மேலும் கூறினார்.