வடக்கு கிழக்கு இணைந்ததாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்!

எமது மக்களின் அபிலாசைகளை தீர்க்காத எந்தவொரு தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அது வடக்கு கிழக்கு இணைந்தாகவும் ஆனால் தமிழ் மக்களை பிரிக்காததாகவும் அமைய வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மத்தியில் சமகால நிலைமைகள் பற்றி அவர் நேற்று திங்கட்கிழமை மாலை விளக்கமளிக்கையிலேயே மேற்படி கருத்தை அவர் வெளியிட்டார். அவர் இங்கு தொடர்ந்து பேசுகையில்,

இன்று மக்கள் மத்தியில் ஒரு துணிவு இருக்கின்றது. தாங்கள் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது ஒரு நல்ல விடயம். எமது நாட்டில் இன்று எமது மக்களோ அல்லது வேறு எந்த மக்களோ பயந்து வாழ்கின்ற சூழல் இல்லை. அவர்கள் சுதந்திரமாக சிந்தித்து செயற்படுகின்றார்கள். சுதந்திரமாக பேசுகின்றார்கள். இந்த நாட்டில் சட்டம் மதிக்கப்படும். மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் சட்ட ஆட்சி முறை நிலவும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருக்கின்றது.

இந்த நாட்டில் இன்று இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றாக செயற்பட்டு அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும் பகுதியும் ஐ.தே. கட்சியும் இணைந்து ஒரு ஆட்சியை அமைத்திருக்கினறன. எங்களுடைய உதவியுடன் மூன்றில் இரண்டு பெரும் பான்மை பலத்தை பாராளுமன்றில் பெறக்கூடிய நிலைமை இருக்கின்றது. அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் அந்த அரசியல் தீர்வு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

அவ்வாறு பெரும்பான்மையை பெறக்கூடிய சூழல் பாராளுமன்றில் நிலவுவதாகவே நான் கருதுகின்றேன். ஒருகாலகட்டத்தில் கடந்த ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் இவ்வாறான முயற்சியை செய்தார். அந்தக் காலம் தமிழீழ விடுதலைப் புலிகளும் செயற்பட்ட காலம். அவர்களின் சம்மதத்தையும் பெற வேண்டி இருந்திருக்கும். ஆனால் அப்போது இவ்வாறான பெரும்பான்மை பலத்தை பெறும் சூழல் பாராளுமன்றில் அவருக்கு இருக்கவில்லை.

அவர் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க விரும்பினாலும் கூட அந்த தீர்வை நிறைவேற்றும் வல்லமை அவருக்கு இருக்கவில்லை.. ஆனால் தற்போது இருக்கும் அரசாங்கத்திற்கு அந்த வல்லமை இருப்பதாகவே நான் கருதுகின்றேன். அரசியல் சீர்திருத்தங்கள் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மட்டும் பெற்றால் போதாது. அது அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டுமாகவிருந்தால் அந்த திருத்தங்கள் மக்களுடைய சர்வஜன வாக்கெடுப்பாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

பொதுவான கருத்து என்ன வென்றால் ஒரு அரசியல் திருத்தம் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டால் அது மக்களின் சர்வஜன வாக்கெடுப்பிலும் வெற்றி பெறும் என்று கருத்து உண்டு. அவ்வாறு அங்கீகரிக்கப்படும் எனபது பொதுவான அபிபிராயம். தற்பொழுது மக்களின் கருத்தறியும் ஒரு குழு செயற்பட்டு வருகின்றது. அவர்கள் திருகோணமலைக்கும் வந்து மக்களின் கருத்துக்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.

அந்தக் குழுவைச் சார்ந்த சிலரை நான் சந்தித்து பேசியிருக்கின்றேன். அரசியல் தீர்வை எதிர்க்கின்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்ற நிலையை அவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டைப் பிரிக்காமல் ஒருமித்த நாட்டிற்க்குள் ஒரு அரசியல் தீர்வுக்கு சாத்தியமான நிலப்பாடுள்ளது. ஆனபடியினால் எமக்கு சந்தர்ப்பம் தான் உள்ளது. அந்தச் சந்தர்பம் நிறைவேறுவதாக இருந்தால் அரசியல் தீர்வு என்ன விதமாக அமைய வேண்டும்.

ஆட்சி முறை ஆட்சி அலகு ஆட்சி அதிகாரங்கள் அதிகாரங்களை நிறைவேற்றக் கூடிய பலத்தை ஒழுங்குபடுத்தக்கூடிய ஒழுங்குகள். அதிகாரங்கள் மிகவும் கூடுதலாக இருக்கவேண்டும். சில வற்றை தவிர்த்து ஏனையவை மாநிலத்திற்கு அல்லது மாகாணங்களுக்கு இருத்தல் வேண்டும். தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரிதியாக வாழ்ந்து வந்த பகுதிகள் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும்.

வடகிழக்கு என்ன விதமாக இருந்ததோ? அவ்விதமாக வடகிழக்கு இணைந்திருக்க வேண்டும். நாட்டைப் பிரிக்கும் படியாக நாங்கள் கேட்கவில்லை. ஆனால் தமிழர்களைப் பிரிக்கக்கூடாது. பிரிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலைமை இருக்க வேண்டும். அவ்விதமான தீர்வைத்தான் நாங்கள் எற்றுக்கொள்ள முடியும். அதனை நாங்கள் தெளிவாக கூறுகின்றோம். நான் ஏலவே குறிப்பிட்டது போன்று இவ்வாறானதொரு தீர்வு இந்த ஆண்டிற்குள் வரும் என நான் நம்புகின்றேன்.

தற்சமயம் ஐ.நா. வின் மனித உரிமைகள் குழுவின் 31 வது கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அரசும் அதன் பிரதிநிதியான வெளிநாட்டமைச்சரும் அச்சபையில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் .அதனை நிறைவேற்ற உறுதியளித்துள்ளனர். 33 வது அமர்வில் எழுத்துமூல அறிக்கையையும் இவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே அந்த ஐ.நா.வின் மனித உரிமைகள் தீர்மானம் அரசாங்கத்தின் சார்பான உறுதி மொழிகளை அவர்கள் மதித்து நடக்க வேண்டும். அதனைச் செய்வார்கள் என்று நாம் நம்பகின்றோம்.என்றார்.