வடமாகாண அமைச்சர்களுக்கு பாரிய நெருக்கடி

வடமாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக, பொதுமக்களால் பல குற்றச்சாட்டுகள், முதலமைச்சரிடம் ஆதாரங்களுடன் கையளிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, குறித்த அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு, இளைப்பாறிய நீதிபதிகளைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், மாகாண சபை அமர்வில் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பொது நூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின்; ஐந்தாவது கூட்டத் தொடரின் பின்னர், ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

‘வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக பொது மக்களினால் பல்வேறான முறைப்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அமைச்சர்களை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றதால், குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் செய்ய இரண்டு இளைப்பாறிய நீதிபதிகள் மற்றும் இளைப்பாறிய அரசாங்க அதிபர் உட்பட 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள வடமாகாண சபை அமர்வின் போது, இது தொடர்பில் பிரேரணையொன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர்களின் தகைமைகள் மற்றும் பின்னணியினைப் ஆராய்ந்து பார்த்தே 2013ஆம் ஆண்டு, வடமாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

அந்தவகையில் இவர்களை வெளியேற்றுவது என்பது நினைத்தவுடன் செய்வது தவறானது. பொதுமக்கள் தங்களுடைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்கள். அந்தக் குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலை முதலில் தெரியவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்கள் கடந்த பின்னர் இந்த குற்றச்சாட்டுக்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது எந்தவகையில் சாத்தியமானது? என கேட்டக் கேள்விக்கு பதிலளித்த அவர், முதலில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் போது சாட்சியங்கள் தரப்படவில்லை. அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தது.

குற்றச்சாட்டுகள் தற்போது ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டிருப்பதனால் உண்மைத்தன்மையினை விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தாமதமாக இருந்தாலும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகளை மேற்கொள்ளாமல் விடுவதனை விடவும் தாமதாக செய்வதும் சிறந்ததாக அமையும் என்றே னைக்கின்றேன்’ என்றார்.