வலதுசாரிகள் பக்கம் செல்கிறது பிரேஸில்

பிரேஸில் றியோ டி ஜெனீரோவின் மேயராக, சீர்திருத்த சபையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் தெரிவாகியுள்ளார். கத்தோலிக்கர்களை ஒரு முறை, “அரக்கர்கள்” என்றழைத்த இவரின் தெரிவு, பிரேஸிலின் அரசியல், வலதுசாரிகள் பக்கமாகச் செல்வதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

1980ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரேஸில் தொழிலாளர் கட்சி, 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, நாட்டின் பிரதான கட்சியாக மாறியது. இரண்டு ஜனாதிபதிகளையும் தொடர்ச்சியாகக் கொண்டிருந்த அக்கட்சி, டில்மா றூசெப், மோசடிக் குற்றச்சாட்டுகளின் காரணமாக அவரது பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சந்தித்துவரும் இழப்பை இது காட்டுவதாக அமைந்துள்ளது.

இதன்படி, 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற மேயர் தேர்தல்களில் அக்கட்சி வென்ற மேயர் பதவிகளில் மூன்றிலிரண்டு பங்கை, இம்முறை தேர்தலில் இழந்துள்ளது. அதில், றியோ டி ஜெனீரோவில் அக்கட்சி இழந்துள்ள மேயர் பதவியும் அமைந்துள்ளது.

தனது சனத்தொகையில் ஏறத்தாழ மூன்றிலிரண்டு பங்கை கத்தோலிக்கர்களாகக் கொண்டுள்ள பிரேஸிலில், கத்தோலிக்கர்கள் மீது வசைபாடிய ஒருவரையே, அந்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான றியோ டி ஜெனீரோவின் மேயராக, அப்பகுதி மக்கள் தெரிந்துள்ளமையும், இதில் முக்கியமானதாக அமைகிறது. அத்தோடு, நாடு முழுவதிலும் கூட, சீர்திருத்த சபையைச் சேர்ந்த அரசியல்வாதிகள், முன்னேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.