வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணி இன்னமும் இராணுவத்திடம்

வலிகாமம் வடக்கு, குரும்பசிட்டிப் பகுதியில் உள்ள கூட்டுறவுச் சங்கக் காணி விடுவிக்கப்பட்டதாக, எழுத்துமூலமாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளரிடம் தெரிவித்த இராணுவத்தினர், தொடர்ந்தும் அக்காணியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, காணியின் நில அளவை வரைபடத்தைக் கோருவதாகவும், கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

வலி. வடக்கு பிரதேசமானது, கடந்த 28 ஆண்டுகளாக உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரின் பாவனைக்கு உட்பட்டிருந்தது. ஆட்சிமாற்றத்தின் பின்னர், இப்பகுதிகள் பிரிவு பிரிவாக மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 6ஆம் திகதி, குரும்பசிட்டி ஜே/243 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 8 பரப்புக் காணி விடுவிக்கப்பட்டது. இதில் 6 பரப்புக் காணி, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கும், 2 பரப்புக் காணி கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கும் சொந்தமானதாகும்.

இராணுவத்தினரால் காணிகள் விடுவிக்கப்படும் போது, உத்தியோகபூர்வமான கடிதம், மாவட்ட செயலாளரிடம் வழங்கப்படும். இவ்வாறு மேற்படி காணி விடுவிக்கப்பட்ட தினத்தில், யாழ். மாவட்ட செயலாளர் நா.வேதநாயகனிடம், இராணுவ அதிகாரியால் வழங்கப்பட்ட கடிதத்தில், மேற்படி காணி விடுவிக்கப்பட்டதென்றும், காணி தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் விடுவிக்கப்பட்டதெனத் தெரிவிக்கப்பட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் காணிக்குள் உள்நுழையாதவாறு, இராணுவத்தினரின் முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன. குறித்த காணிக்குள் நுழைவதற்கு, சங்கத்தினர் பலமுறை முயன்றபோதும், அதற்கான அனுமதியை இராணுவத்தினர் வழங்கவில்லை. இது தொடர்பில், குரும்பசிட்டி கிழக்கு ஜி.என் பிரிவு இராணுவ மேலதிகாரியுடன் தொடர்புகொண்ட போது, குறித்த காணிக்குரிய நில அளவை வரைபடத்தைத் தருமாறும், அதன் பின்னர் காணிக்குள் உள்நுழைய முடியும் எனவும், அவர் தெரிவித்தாரென, பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், காணிக்குள் உள்நுழையாமல், புதிய நில அளவையை எவ்வாறு மேற்கொள்ளமுடியும் என, கூட்டுறவு சங்க நிர்வாத்தினரின் கேள்வியெழுப்புகின்றனர். இது தொடர்பில், இராணுவ மேலதிகாரி, யாழ். மாவட்ட செயலாளர், வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளதாகவும், கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில், காணியின் நில அளவை வரைபடம் கோரப்பட்டு ஒரு மாதகாலம் நிறைவடையும் தருணம் ஆகியும், அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாமல், அசட்டையீனமாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தினர் செயற்படுகின்றனர் என, இங்கு மக்களால் குற்றசாட்டு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.