வாகரை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவானவர் சற்று நேரத்தில் கைது

மட்டக்களப்பு, கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையின் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய சற்று நேரத்தில், அதன் தலைவரும் மற்றொரு உறுப்பினரும் கைது செய்யப்பட்டுள்ளனரென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் சம்பவமொன்று தொடர்பாகவே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனரெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வாகரைப் பிரதேச சபையின் தலைவர் சிவஞானம் கோணலிங்கமும் உறுப்பினரான தெய்வேந்திரன் சத்தியநாதன் என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும், வாழைச்சேனை நீதிமன்றில் உடனடியாக ஆஜர் செய்யப்பட்டபோது, எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே கதிரவெளி கிராம சேவகர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.