‘விஜயகாந்தை வளைத்தது இப்படித்தான்…!’ கடைசி நிமிட காட்சிகள்

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பாடாய்ப்படுத்தும் சென்டிமெண்ட்டுக்கு மக்கள் நலக் கூட்டணியும் தப்பவில்லை. பங்குனி உத்திரத்தின் நல்லநேரத்தில் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் விஜயகாந்த். இதனால், தி.மு.கவின் கடைசி நிமிட நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது.

‘மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேருவார்’ என வைகோ பகிரங்கமாக மேடையில் பேசினாலும், தே.மு.தி.க தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வராததால் தி.மு.க, பா.ஜ.க தரப்பில் கொஞ்சம் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். ‘ நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்’ என கருணாநிதி அழுத்தமாக தனது வார்த்தைகளை முன்வைத்தார். பா.ஜ.கவின் கடைசிநிமிட முயற்சிகள் பலனிக்காமல் போன கோபத்தில், ” தனித்துப் போட்டியிட்டு தனித்துவமான அணியாக நாங்கள் இருப்போம்” என பேட்டியளித்தார் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை.

‘விஜயகாந்த்தை வளைத்தது எப்படி?’ என்ற கேள்வியை மக்கள் நலக் கூட்டணியின் முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டேன். ” தொடக்கத்தில் இருந்தே தே.மு.தி.கவிடம் நடந்த பேச்சுவார்த்தைகளை சொல்வதுதான் சரியாக இருக்கும். முதன்முதலாக, நடந்த பேச்சுவார்த்தையில், ‘மக்கள் நலக் கூட்டணியில் சேர்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால், தேர்தல் செலவுகளுக்கு பா.ஜ.க அல்லது காங்கிரஸ் கட்சியை உள்ளே கொண்டு வர வேண்டும்’ என்ற கோரிக்கையை விஜயகாந்த் முன்வைத்தார். ‘தேசியக் கட்சி இரண்டோடும் கூட்டணி சேர்வதில்லை’ என்ற முடிவை ம.ந.கூட்டணி உறுதியாக முன்வைத்தது. காங்கிரஸ் ஊழல் கட்சி, பா.ஜ.க மதவாத கட்சி என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு, தி.மு.கவினரும் விஜயகாந்த்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். தி.மு.கவின் வலிமையைக் குறைக்கும் வகையில், கூட்டணி ஆட்சி, அதிக இடங்கள் என பேச்சுவார்த்தையை கொண்டு போனார் விஜயகாந்த். தங்கள் வலிமையைக் குறைக்கும் கேப்டனின் முடிவை தி.மு.க தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை. தவிரவும், ‘ வலிமையில்லாத பா.ஜ.கவோடு சேர்ந்து தோல்வியை தழுவுவதைவிட, மக்கள் நலக் கூட்டணியோடு சேர்ந்து மாற்றை முன்வைத்து மக்களைச் சந்திப்பதே கூடுதல் வலிமையைத் தரும்’ என பிரேமலதா உறுதியாக நம்பினார். எனவே, கேப்டன் முன்பிருந்த ஒரே ஆப்ஷன் மக்கள் நலக் கூட்டணி மட்டும்தான். கடந்த பத்து நாட்களாக, இதற்காக வைகோ மேற்கொண்ட முயற்சிகள் சினிமா சேஸிங்கை மிஞ்சும்விதமாக இருந்தது. அனைத்தையும் பிரேமலதாவோடு பேசி இறுதி வடிவத்திற்கு கூட்டணியைக் கொண்டு வந்தார் வைகோ.

‘தேர்தலை சந்திப்பதற்கு பணத்திற்கு எங்கே போவது?’ என்ற கேள்வியை தே.மு.தி.க தலைமை முன்வைத்தபோது, ‘ இப்படியொரு வலிமையான கூட்டணி உருவானால், தொழிலதிபர்கள் பலர் நமக்கான நிதி உதவியைச் செய்வார்கள். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம்’ என உறுதியளித்தார் வைகோ. இதன்பிறகு, சி.எம் வேட்பாளர், 124 தொகுதிகள் என நேற்று மாலையே முடிவாகிவிட்டது. நாளை காலை பத்து மணிக்கு அறிவிப்போம். எல்லோரும் வாருங்கள்’ என அழைப்புவிடுத்தார் பிரேமலதா” என விவரித்தார் அந்த நிர்வாகி.

” முதல்வர் வேட்பாளர் என்பதெல்லாம் எங்கள் அணியில் கிடையாது என்று சொன்னீர்கள். விஜயகாந்த்தை மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்?” என்ற கேள்வியை மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டேன். ” நாங்கள் நான்கு பேர் இணைந்து கூட்டணியை முடிவு செய்தோம். குறைந்தபட்ச செயல்திட்டத்தையும் முன்வைத்து மக்களை சந்தித்து வந்தோம். இப்போது கூட்டணிக்குள் ஐந்தாவதாக ஒருவர் வருகிறார். சட்டசபையில் 29 எம்.எல்.ஏக்களை வைத்திருந்தவர். மக்கள் செல்வாக்கு மிகுந்தவர் என்ற அடிப்படையில் அவரைக் கூட்டணிக்குள் கொண்டு வந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பா.ஜ.க, காங்கிரஸ் வேண்டாம் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். எனவே, முதல்வர் வேட்பாளர், அதிக இடங்கள் என்ற அவரது கோரிக்கையை ஏற்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது” என்றார் விளக்கமாக.

” பங்குனி உத்திர நாளில் நல்லநேரம் பார்த்து கூட்டணியில் சேர்ந்துவிட்டீர்கள். சென்டிமெண்ட் கலாசாரம் கம்யூனிஸ்டுகளையும் விடவில்லையே?” என சி.பி.ஐ கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் லெனினிடம் கேட்டோம். ” கம்யூனிஸ்டுகள் எந்த சென்டிமெண்ட்டுக்கும் ஆளாகக் கூடியவர்கள் அல்ல. மக்களுக்கு எது தேவையோ அதை நோக்கியே பயணப்படுவோம். இப்போது அமைந்துள்ள கூட்டணி மாற்றுக்கான பாதை. மாற்று அரசியலுக்கான காலத்தின் தேவை” என்றார் நெகிழ்ச்சியோடு.

” குருஷேத்திரப் போரில் இந்த பஞ்ச பாண்டவர்கள், எங்களுக்கு எதிராக நிற்கும் கௌரவர்களை வீழ்த்துவோம்” என விஜயகாந்தை வைத்துக் கொண்டு கொந்தளித்தார் சி.பி.எம் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன்.

சரிதான். மக்கள் நலக் கூட்டணியின் பாஞ்ச ஜன்ய சங்கு ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. வெற்றி யாருக்கு என்பதை மே 19 தீர்மானிக்கும்.

(ஆ.விஜயானந்த்)