‘வியாழேந்திரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், புதிய அரசாங்கத்தில் பிரதியமைச்சர் பதவியை ஏற்றுள்ளமைக்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், நேற்று (02) பிற்பகல் நடைபெற்றது. இது தொடர்பில் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், அமைச்சுப் பதவிகளையும் பணத்தையும் இலஞ்சமாகக் கொடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்துக்கு முறைகேடாக இழுத்தெடுத்து, நாடாளுமன்ற பெரும்பான்மையை கபடமாகப் பெறுவதற்கு புதிய அரசாங்கம் முயல்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஜனநாயக விரோத செயலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதோடு, தனது எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இந்தச் சதி முயற்சிக்குப் பலியானதை குறித்து, தமது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுவதாகவும் அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை, உடனடியாக எடுக்கப்படுமென்றும் த.தே.கூ தெரிவித்துள்ளது.