வீடியோ கான்பரன்சிங் மூலம் கொலை வழக்கு விசாரணை!

கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை செசன்சு கோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது. தமிழக நீதித்துறை வரலாற்றில் வெளிநாட்டில் உள்ள நபரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணி இயக்கத்தின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா. இவர், 1986ம் ஆண்டு சென்னை சூளை மேட்டில் தன் இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் தங்கியிருந்தார். அந்த ஆண்டு நவம்பர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அப்பகுதி மக்கள் வெடி வெடித்தனர்.

இதற்கு டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், டக்ளஸ் தேவானந்தா ஆட்கள் பொதுமக்களை நோக்கி எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் திருநாவுகரசு என்ற வாலிபர் மரணம் அடைந்தார். குருமூர்த்தி உட்பட பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து டக்ளஸ் தேவானந்தா உட்பட 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை 4வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதன்பின்னர் இந்த 10 பேரும் இலங்கைக்கு சென்று விட்டனர். இதில் டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருக்கும்போது, சிறு தொழில்துறை மந்திரியாக பதவி வகித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தா மட்டும் அடையாளம் தெரிந்தது. அவர் மீதான வழக்கை விசாரிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது. இதையடுத்து, டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதற்கிடையில் குண்டு காயம் பட்ட குருமூர்த்தி உட்பட 4 பேர் இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனர். அவர்கள், தங்கள் மீது எந்திர துப்பாக்கியால் சுட்டது ஆனந்தன் என்ற இலங்கை தமிழர் என்று கூறினார்கள்.

இதனால், குற்றவாளியை அடையாளம் காட்டி அவர்கள் சாட்சியம் அளிக்க வேண்டியது இருந்தது. இதுகுறித்து 4வது கூடுதல் கோர்ட்டு நீதிபதி எம்.சாந்தி, சென்னை மாவட்ட முதன்மை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். இதற்கிடையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு பதிவாளர் எஸ்.பி. ரிஷிரோஷன், நீதிமன்ற அதிகாரி எஸ்.சுந்தரபாண்டியன் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கை விசாரிக்க நடவடிக்கை எடுத்தனர்.

தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.) மூலம் இலங்கையில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. முன்னோட்டமாக நேற்று மாலை வீடியோ கான்பரன்சிங் சேவையை இயக்கி, பரிசோதிக்கப்பட்டன. இதன்படி, இன்று காலை சரியாக 10 மணிக்கு, இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்துக்கு டக்ளஸ் தேவானந்தா ஆஜரானார். அவரை அங்குள்ள வீடியோ கேமிரா முன்பு நாற்காலி போட்டு அங்குள்ளவர்கள் அமர வைத்தனர். அதேபோல, வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சி குருமூர்த்தி உள்ளிட்ட 4 பேர் சென்னை 4வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் சாட்சியம் அளிக்க ஆஜரானார்கள்.

சரியாக காலை 10.35 மணிக்கு டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அவர் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் ஆர்.ராஜன், ஏ.டி.நாகேந்திரன் ஆகியோர் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், இந்த வழக்கில் போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையிலும் சரி, சாட்சிகள் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்திலும் சரி, டக்ளஸ் தேவானந்தா துப்பாக்கியால் சுட்டார் என்று ஒரு இடத்தில் கூட கூறப்படவில்லை. அதனால் கொலை குற்றச்சாட்டு டக்ளஸ் தேவானந்தா மீது இல்லை. ஆனால், அவர் தங்கியிருந்த வீட்டில் எந்திர துப்பாக்கி உள்ளிட்ட வெடி மருந்து பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே, அவரை இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக போலீசார் சேர்த்துள்ளனர். தற்போது சாட்சியம் அளித்த குருமூர்த்தி தங்கள் மீது ஆனந்தன் என்பவர் துப்பாக்கியால் சுட்டார் என்று கூறியுள்ளார். இப்போது வீடியோ கான்பரன்சிங்கில் டக்ளஸ் தேவானந்தா ஆஜராகியுள்ளார். அவர்தான் ஆனந்தன் என்று குரு மூர்த்தி அடையாளம் காட்டினால், கொலை குற்றச்சாட்டு சிக்காத என் கட்சிக்காரருக்கு பாதிப்பு ஏற்படும்’ என்று கூறியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு வக்கீல் எம்.பிரபாவதி மனு தாக்கல் செய்தார். இதுவரை கோர்ட்டில் பத்திரிகையாளர் உட்பட பலர் இருந்தனர். இதை பார்த்த நீதிபதி, இந்த வழக்கு ரகசிய விசாரணை அடிப்படையில் விசாரிக்கப்பட உள்ளதால், வழக்கில் தொடர்பில்லாதவர்கள் அனைவரும் கோர்ட்டு அறையில் இருந்து வெளியில் செல்லவேண்டும்’ என்று கூறினார். அனைவரும் வெளியில் சென்ற பின்னர், கோர்ட்டு கதவுகளை மூடி, ரகசிய விசாரணை தொடங்கியது.

டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தப்பட்டன. அப்போது போலீஸ் தரப்பு சாட்சிகள் குருமூர்த்தி, பன்னீர் செல்வம், மணி, வீரமுத்து ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் பிரத்யேகமாக மிகப்பெரிய திரை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த திரையில் தெரிந்த டக்ளஸ் தேவானந்தாவை, போலீஸ் தரப்பு சாட்சிகள் குருமூர்த்தி, வீரமுத்து ஆகியோர் அடையாளம் காட்டினார்கள்.

திருநாவுகரசு உள்ளிட்டோர் மீது துப்பாக்கியால் சுட்டவர் இவர்தான் என்று அடையாளம் காட்டினார்கள். இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 15ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி எம்.சாந்தி உத்தரவிட்டார். டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பது தமிழக நீதித்துறையில் முதல் முறையாகும். இதற்கு முன்பு முத்திரைத்தாள் மோசடி வழக்கில் சிக்கிய அப்துல்கரீம் தெல்கியிடம், சென்னை சி.பி.ஐ. செசன்சு கோர்ட்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கை விசாரித்தது. ஆனால், அப்போது தெல்கி மும்பையில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது வெளிநாட்டில் உள்ள குற்றவாளியிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பது தமிழக நீதித்துறை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஹெட்லி அமெரிக்காவில் உள்ள சிறையில் உள்ளார். அவரிடம், குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையை மும்பை நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்தது. இந்திய நீதித்துறை வரலாற்றில் வெளிநாட்டில் உள்ளவரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்த முதல் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பார்க்கும் போது, இந்திய நீதித்துறை வரலாற்றில் டக்ளஸ் தேவானந்தாவிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பது இரண்டாவது வழக்கு ஆகும்.

இதுகுறித்து நீதித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கை வீடியோ கான்ரபன்சிங் மூலம் விசாரிப்பதால் பல நன்மைகள் உள்ளன. அவர் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்தால், பணம் செலவு ஆகும். அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும். கோர்ட்டு வளாகமே பரபரப்பாகும். இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாமல், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பது மிகவும் எளிமையாக உள்ளது’ என்று கூறினார்

– தமிழ்வின் இணையம் –