வீடு திரும்பினார் பேரறிவாளன்! வரவேற்ற மக்கள் கூட்டம்! பொலிஸார் குவிப்பு! நிபந்தனைகள் விதிப்பு,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி கடந்த 26 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் இன்று பரோலில் விடுவிக்கப்பட்டு வீடு திரும்பினார். ஜோலார்ப்பேட்டையில் பேரறிவாளன் வீடு உள்ளது. வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் பலத்த பாதுகாப்புடன் ஜோலார்ப்பேட்டை அழைத்து வரப்பட்டார்.இதனையடுத்து இரவு 9 மணியளவில் பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். பலத்த  பொலிஸ் பாதுகாப்புடன் அவர் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஜோலார் பேட்டை எல்லையில் மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். 26 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது சொந்த ஊரான ஜோலார் பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார் பேரறிவாளன்.

பரோலில் வெளிவந்துள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்புதம்மாள், தந்தை குயில்தாசன், சகோதரி உறவினர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

26 ஆண்டுகாலம் சிறையில் கழித்த மகன் முதன் முறையாக பரோலில் வந்ததை அடுத்து உணர்ச்சி பெருக்கோடு காணப்பட்டார் அற்புதம்மாள்.

பேரறிவாளனுக்கு உறவினர்கள் ஆரத்தி எடுத்து உச்சி மோர்ந்து வரவேற்றனார்.

பேரறிவாளன் வருகையைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

தந்தை உடல்நலம் கவனித்துக் கொள்ள பேரறிவாளனுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஒரு மாத காலம் பரோல் அளிக்கப்பட்டுள்ளது.

ஜோலார் பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் பேரறிவாளன் தினசரியும் கையெழுத்து போட வேண்டும்.

வேலூர் சிறையில் அளித்துள்ள முகவரியில்தான் பேரறிவாளன் தங்க வேண்டும்.

மேலும் வீட்டை விட்டு வெளியே செல்ல தடையுள்ளது.

இந்த 30 நாட்களில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது.

மேலும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு பேட்டி தரக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் பேரறிவாளனை தலைவர்கள் சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

20 வயதில் சிறைக்கு சென்ற பேரறிவாளன் 26 ஆண்டுகள் கழித்து 46 வயதில் வெளியே அதுவும் பரோலில் வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.