வீரவன்சவின் போராட்டமே மகிந்தவின் சரிவின் ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்திற்கு எதிரில் விமல் வீரவன்ச நடத்திய உண்ணவிரதப் போராட்டமே மிகவும் பலமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் சரிவின் ஆரம்பமாக அமைந்தது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பை விமல் வீரவன்ச, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளாக எண்ணினார்.

அந்த அமைப்பிற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதால், சர்வதேசம் இலங்கையுடன் கோபம் கொண்டது. உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வீரவன்சவுக்கு இளநீர் பருக கொடுத்து மகிந்த ராஜபக்ச தவறிழைத்தார். இதனால், பல ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டிய சந்தர்ப்பத்தை மகிந்த இழந்தார். அத்துடன் குடும்ப அரசியல் குறித்து விமல் வீரவன்ச வே முதலில் கூறினார். வீரவன்சவின் இந்த கருத்தை ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்பன தமது போராட்ட கோஷமாக எடுத்துக்கொண்டன எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.