வெனிசுவேலா அவசரகாலநிலைப் பிரகடனத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

அழுத்தத்துக்குள்ளாகியுள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ, கடந்த வெள்ளிக்கிழமையன்று அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளால் அதற்கு, கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. வெனிசுவேலாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அதற்குக் காரணமென எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டும் ஜனாதிபதியை, அவரது பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையிலேயே, இந்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

 

வெனிசுவேலாவுக்கு உள்ளேயிருந்தும் ஐக்கிய அமெரிக்காவாலும், தன்னைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்திருந்த அவர், 60 நாட்களுக்கு இதைப் பிரகடனப்படுத்தியிருந்தார்.

இதற்கே எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜனநாயக ஒற்றுமைக் கூட்டணியின் தலைவர் ஜேசுஸ் டொரியல்பா, ‘சட்டரீதியிலும் அரசியலமைப்புரீதியிலும், தன்னை விளிம்புநிலையில் நிறுத்தியுள்ள வெறிகொண்ட ஜனாதிபதி பற்றி நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கிறோம். தேசிய சபையிடம் கலந்தாலோசிக்காமல் இந்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்குமாயின், நாங்கள் உண்மையின் சுய-அரசியற்புரட்சி பற்றிக் கதைக்கிறோம் என்று தான் அர்த்தம்” எனத் தெரிவித்த அவர், ‘அவர் வீழப் போகிறார்” எனவும் தெரிவித்தார்.