ஸ்டெர்லைட் போராட்டம்: கள நிலவரம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று (22.05.2018) நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்க டில் 9 பேர் உயி ரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 போலீஸார் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தூத்துக்குடி நகரமே கலவர காடாக மாறியது. பதற்றம் நீடிப்பதால் பெருமளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நிகழ் நேரப் பதிவு:
4.45 PM: தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவில் போலீஸ் – பொதுமக்கள் இடையே மீண்டும் மோதல். காவல்துறையினரை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் மீண்டும் பதற்றம்

4.30 PM: ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற உறுதியை முதல்வர் அளிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், ”தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்துக் கொண்டிருக்கும்போதே இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மக்களைத் தாக்கும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன்

நடந்த சம்பங்களை வேதனையோடு மக்கள் என்னிடம் விளக்கிக் கூறினார்கள்தூத்துக்குடி நகரமே சோக சம்பவத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற உறுதியை முதல்வர் அளிக்க வேண்டும்” என்றார்.

4.05 PM: போலீஸார் துப்பாக்கிச் சூட்டைப் பரிசாகக் கொடுத்தபோதும் போராட்டக்காரர்கள் காயம்பட்ட போலீஸாருக்கு மனிதநேயத்துடன் உதவிய நெகிழ்ச்சி நிகழ்வு வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது. விரிவாக வாசிக்க: தூத்துக்குடி போராட்டக்காரர்களின் மனித நேயம்: காயம்பட்டு மயக்க நிலைக்குச் சென்ற போலீஸாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நெகிழ்ச்சி நிகழ்வு

3.45 PM: போராட்டத்தில் ஈடுபட்ட சொந்த மக்களையே கொன்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. முதுகெலும்பு இல்லாத அரசு. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் அழுகுரல் கேட்கவில்லையா? என்று பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். விரிவான செய்திக்கு: “முதுகெலும்பு இல்லாத தமிழக அரசு” – பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு

3.30 PM: பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் கடிதம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை தேவை. தமிழகத்தில் மக்கள் நலனுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருவதைக் கண்டிக்கிறோம் .

3.20 PM: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் பேரணி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வரும், காவல்துறை டிஜிபியும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். விரிவாக வாசிக்க: துப்பாக்கிச் சூடு விவகாரம்; முதல்வரும் டிஜிபியும் ராஜினாமா செய்ய வேண்டும்: ஸ்டாலின்

3.10 PM: ‘அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடும் அராஜகங்களை செய்யக்கூடாது’ என தூத்துக்குடி சம்பவம் குறித்து கார்த்தி தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க: “அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடும் அராஜகங்களை செய்யக்கூடாது” – கார்த்தி

3.00 PM : தூத்துக்குடியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழகம் கேட்டால் மத்திய படைகளை அனுப்பத் தயார் – மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கெளபா.

2.45 PM : ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனத்தையும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. விரிவாக வாசிக்க: ‘ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும்’: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

2.35 PM: தூத்துக்குடி பிரைன் நகரில் போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு. காவல்துறையினர் – ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் பொதுமக்கள் கல்வீச்சை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் (22) என்பவர் பலியானார்.

2.30 PM: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஜினி அரசின் அலட்சியம், காவல்துறையின் மிருகத்தனமான செயல் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலிக் காட்சி ஒன்றைப் பதிவிட்டு கண்டித்துள்ளார். விரிவாக வாசிக்க: துப்பாக்கிச் சூடு; உளவுத்துறையின் தோல்வி, அரசின் அலட்சியம், காவல்துறையின் மிருகத்தனமான செயல்: ரஜினி கண்டனம்

2.00 PM: முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்கும் தூத்துக்குடியில் தமிழக அரசு நடத்தியுள்ள இந்தப் படுகொலைக்கும் என்ன வேறுபாடு? காலத்தாலும் மன்னிக்க முடியாத இக்கொடுஞ்செயலுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலகுவதுதான் தற்போதைக்கு ஆறுதலளிப்பதாக அமையும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விரிவாக வாசிக்க: இலங்கை அரசின் இனப்படுகொலைக்கும் தூத்துக்குடியில் தமிழக அரசு நடத்திய படுகொலைக்கும் என்ன வேறுபாடு? – திருமாவளவன்

1.40 PM: தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை மீறியதாக கமல் மீது வழக்குப் பதிவு.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் 5 அல்லது அதற்கு மேல் நபர்கள் கூடத் தடைவிதிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடி மருத்துவமனைக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய கமல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1.30 PM: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு தடை விதித்தது போதாது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், அதுதான் நியாயமானது. தூத்துக்குடியில் அமைதி ஏற்பட அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கமல் தெரிவித்தார்.

1.00 PM: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 2 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு, டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ். விரிவாக வாசிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு

12.50 PM: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தினை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் இதுகுறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் ரஜினி, எ.கண்ணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் ஆகிய நான்கு பேர் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், சுரேஷ் குமார் அமர்வு முன் முறையிட்டனர்.இது தொடர்பாக மனுவாகத் தாக்கல் செய்யும் பட்சத்தில் வரும் 25 ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

12.35 PM: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம். போராட்டத்தில் ஈடுபட்டோரை போலீஸார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர்.

12.30 PM: தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஆறுதல்

‘இழந்த உயிர்களுக்கு ஒரே மாற்று ஆலையை மூடுவது தான் என உறவினர்கள் கூறினர். உடற்கூறு ஆய்வின்போது நடுநிலையான மருத்துவர்கள் உடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்’ என்று கமல் கூறினார்.

12.15 PM: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து மே 25-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இதில் திமுகவின் 8 ஆதரவுக் கட்சிகளும் பங்கேற்கின்றன. விரிவாக வாசிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து வரும் 25-ம் தேதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

12.05 PM: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. விரிவாக வாசிக்க: துப்பாக்கிச் சூடு விவகாரம்; ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்: தமிழக அரசு உத்தரவு
11.30 AM: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது. விரிவான செய்திக்கு: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்குத் தடை: ஓய்வு பெற்ற பேராசிரியை தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

11.15 AM: துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு. தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்புக்குழுவினர் போராட்டம்

11.10 AM: தூத்துக்குடி கலவரம் தொடர்பாக தமிழக அரசிடம் அறிக்கை கோரியது மத்திய உள்துறை அமைச்சகம்

11.05 AM: ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் 2-வது நாளாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை . துணை முதல்வர், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலர் மற்றும் டிஜிபி பங்கேற்பு.

11.00 AM: நெல்லை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து இடிந்தக்கரை, கூத்தன்குழியை உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் போராட்டம்

10.40 AM: தமிழர்கள் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு அடிபணிய மறுப்பதால் படுகொலை செய்யப்படுகின்றனர் என, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். விரிவாக வாசிக்க: ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு அடிபணிய மறுப்பதால் தமிழர்கள் படுகொலை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ராகுல் விமர்சனம்

10.30 AM: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி அளித்தது யார் என கேட்டு சங்கரசுப்பு, பார்வேந்தன், காளிமுத்து உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழு சார்பாக முறையீடு.

10.20 AM: துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியானதாக முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க: உயிரிழந்தோர் எண்ணிக்கையில் குழப்பம்

10.15 AM: தூத்துக்குடி மாவட்டத்திற்கு விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு மே 25 காலை 8 மணி வரை நீட்டிப்பு

10.10 AM: தூத்துக்குடியில் நேற்று நடந்த பயங்கர கலவரத்தை அடுத்து, தென்மாவட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். விரிவாக வாசிக்க: தூத்துக்குடியில் தென்மாவட்ட போலீஸ் குவிப்பு

10.00 AM: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

9.50 AM: சென்னை மெரினா கடற்கரை, டிஜிபி அலுவலகத்திற்கு 3 கூடுதல் ஆணையர் தலைமையில் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

9.45 AM: சென்னை மெரினா கடற்கரை, டிஜிபி அலுவலகத்திற்கு 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக வந்த தகவலை அடுத்து நடவடிக்கை.

9.00 AM: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் கலவரமாக மாறியதற்கு, போதிய எண்ணிக்கையில் போலீஸார் இல்லாததும், போராட்டம் குறித்த உளவுத் துறையினர் சரியான தகவல் தராததே காரணம் எனக் கூறப்படுகிறது. விரிவாக வாசிக்க: உளவுத்துறையினர் தகவல் இல்லாததே கலவரத்துக்கு காரணமா?

8.30 AM: சமீபக் காலத்தில் தமிழகக் காவல் துறை வரலாற்றில் சமூக விரோதிகள் மீதுகூட இவ்வளவு பெரிய துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது இல்லை. ஆனால், தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது காவல் துறை நடத்திய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகக் காவல் துறையின் மீதும் தமிழக அரசின் மீதும் அழியாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விரிவாக வாசிக்க: தீராத களங்கத்தை ஏற்படுத்திய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து வாகனப் போக்குவரத்து முடங்கியதால் முக்கிய நகரங்களில் இருந்து தூத்துக்குடி துண்டிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதியடைந்தனர். விரிவாக வாசிக்க: முக்கிய நகரங்களில் இருந்து தூத்துக்குடிக்கு சாலை போக்குவரத்து துண்டிப்பு

கருணாநிதி ஆட்சியில் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு 1999 ஜூலை 23-ம் தேதி திருநெல்வேலியில் பேரணி நடத்தினர். போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீஸார் தடியடி நடத்தினர். அதிலிருந்து தப்பிக்க சிதறி ஓடி தாமிரபரணி ஆற்றில் குதித்த 17 பேர் நீரில் மூழ்கி பலியாயினர். விரிவாக வாசிக்க: தமிழகத்தில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி, இப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் நடந்துவந்த போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. இதையொட்டி, நேற்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது பின்னர் அது கலவரமாக மாறியது. விரிவாக வாசிக்க: கலவரமாக மாறிய ஸ்டெர்லைட் போராட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தலைமைச் செயலர் அலுவலகத்தில் இயக்குநர் பாரதிராஜா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விரிவாக வாசிக்க: தலைமைச் செயலர் அலுவலகத்தில் வேல்முருகன், பாரதிராஜா உள்ளிருப்பு போராட்டம்

தமிழக அரசின் அலட்சியமே தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என்று ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விரிவாக வாசிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு அரசின் அலட்சியமே காரணம்: ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். விரிவாக வாசிக்க: துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?: தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி

ஜாலியன் வாலாபாக்கில் பிரிட்டிஷ் ராணுவம் உயிர்களை வேட்டையாடியதைப் போல தமிழக காவல்துறையும் மனித உயிர்களைப் பலிவாங்கி உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். விரிவாக வாசிக்க: தூத்துக்குடியில் ஒரு ஜாலியன் வாலாபாக்; காவல்துறையின் அராஜகம்: வைகோ கண்டனம்

தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்த ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை வைத்தார். பிறகு கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவுக்கு செல்ல இருந்ததை ரத்து செய்துவிட்டு தூத்துக்குடி செல்ல இருப்பதாகக் கூறினார். விரிவாக வாசிக்க: தலைமைச் செயலாளருடன் ஸ்டாலின் சந்திப்பு; பெங்களூரு பயணத்தை ரத்து செய்துவிட்டு தூத்துக்குடி செல்வதாக அறிவிப்பு

போராட்டத்தை கையாளத் தெரியாமல் கலவரமாக மாற்றி துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சட்டம் ஒழுங்கை காக்கத்தெரியாத இந்த அரசு கலைக்கப்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு: துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலி; சட்டம் ஒழுங்கை காக்காத அரசு கலைக்கப்பட வேண்டும்: விஜயகாந்த்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சர்வாதிகார பழனிசாமியின் அரசு என டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க: அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: சர்வாதிகார தமிழக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். விரிவாக வாசிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் அமைதி நிலவ அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வேண்டுகோள் விடுத்துள்ளார். விரிவான செய்திக்கு: தமிழகத்தில் அமைதி நிலவ அனைத்து தரப்பு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆளுநர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விரிவான செய்திக்கு: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் தமிழக அரசு சட்டபூர்வமான மேல் நடவடிக்கை எடுக்கும். இதை ஏற்று தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. விரிவான செய்திக்கு: ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்; அமைதி காக்க வேண்டும்: தமிழக அரசு வேண்டுகோள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால், போலீஸாரின் துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க: ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது: அமைச்சர் ஜெயக்குமார்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற அசம்பாவிதத்திற்கு முழு காரணம் தமிழக அரசின் கையாலாகாத்தனமும், உளவுத்துறையின் தோல்வியும் தான் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். விரிவாக வாசிக்க: ஸ்டெர்லைட் போராட்டம்; அசம்பாவிதத்திற்கு முழு காரணம் உளவுத்துறையின் தோல்வி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். விரிவாக வாசிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி அரசு ராஜினாமா செய்ய வேண்டும்: முத்தரசன்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் பேரணி சென்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தி, துப்பாக்கிச் சூடு நடத்தியதை மார்க்சிஸ்ட் கம்ப்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது. விரிவாக வாசிக்க: தூத்துக்குடியில் போராடும் மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு: மார்க்சிஸ்ட் கண்டனம்

தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது, பத்திரிகையாளர்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியதில் ‘தி இந்து’ புகைப்படக் கலைஞர் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். 4 மோட்டார் சைக்கிள்களும் சேதப்படுத்தப்பட்டன. விரிவாக வாசிக்க: கேமராவை பறித்து பதிவுகளை அழித்த கலவரக்காரர்கள்: பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; 4 பேர் காயம், 4 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தூத்துக்குடி மக் கள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. விரிவாக வாசிக்க: ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தால் கலவர காடாக மாறியது தூத்துக்குடி: போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பெண் உட்பட 9 பேர் பலி; காயமடைந்த 77 பேர் மருத்துவமனையில் அனுமதி

செயல்படாத அரசின் அடக்குமுறை இது என தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலை மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார். விரிவான செய்திக்கு: ‘செயல்படாத அரசின் அடக்குமுறை இது’ -தூத்துக்குடி போலீஸ் தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியது அப்பட்டமான அரச பயங்கரவாதம் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. விரிவாக வாசிக்க: ஸ்டெர்லைட் போராட்டம்; காவல்துறையின் துப்பாக்கிச் சூடு அப்பட்டமான அரச பயங்கரவாதம்: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டதில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச பலி என்ற தகவல் வருகிறது. விரிவாக வாசிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி; தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை: இதற்கு முன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். விரிவாக வாசிக்க: ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயன்றதால் அப்பகுதி முழுவதும் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. விரிவான செய்திக்கு: கலவர பூமியானது தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம்; தடியடி – கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முயன்றதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

(நன்றி தி இந்து. விரிவான செய்திகளை தி இந்து இணையத் தளத்தை பார்கவும்)