36 அகதிகள் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 36 பேர் நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பினர். மேற்படி 36 பேரையும், யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு, இரண்டு விமானங்களின் மூலம், சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு, நேற்று பிற்கல் அழைத்து வந்தது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள், மும்பை மற்றும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்ததாக அவ்வமைப்பு மேலும் கூறியது.

மும்பையில் இருந்து 9 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும் தமிழ்நாட்டில் இருந்து 11 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேருமாக 36 பேர், நாடு திரும்பியுள்ளனர். யுத்தம் காரணமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பலர், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள், தமது சொந்த நிலங்களில் மீண்டும் குடியேறவிருப்பம் தெரிவித்த நிலையில், இவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு ஈடுபட்டுவருகின்றது.