5 மாணவர்கள் படுகொலை வழக்கு; 2 சாட்சிகளுக்கு அழைப்பாணை

திருகோணமலைக் கடற்கரையில் வைத்து 2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதியன்று, இலங்கை சிறப்பு இராணுவப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்கள் படுகொலை வழக்கில், வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள சாட்சியாளர்கள் இருவருக்கு சர்வதேச அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

இந்தப் படுகொலை வழக்கு, சுருக்க முறையற்ற விசாரணைக்காக, 28ஆம் திகதியன்று எடுத்துகொள்ளப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில், வழக்குத் தொடுநர் தரப்பில், 04ஆவது மற்றும் 08ஆவது சாட்சிகள் மன்றுக்கு சமூகமளித்திருக்கவில்லை.

இந்நிலையில், அவ்விரு சாட்சியாளர்களுக்கும் அழைப்பாணை பிறப்பித்து, சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கு மற்றுமொரு தவணையை வழங்குமாறு, மனுதாரர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க கோரி நின்றார்.

இதேவேளை வெளிநாடு சென்றுள்ள, இந்த வழக்குடன் தொடர்புடைய இரண்டு சாட்சிகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட தூதரங்களுடன் தொடர்பு கொண்டு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச அழைப்பாணையைப் பிறப்பித்து, ஒகஸ்ட் மாதத்துக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எழுதிவிட்டு, பல்கலைக்கழகத் தெரிவுக்காக காத்திருந்த மனோகரன் ரகீஹார், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரொஹான், தங்கத்துரை சிவானந்தா மற்றும் சண்முகராஜ் கஜேந்திரன் ஆகிய ஐவரும் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதியன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, பொலிஸ் அதிரடிப்படை அதிகாரி உட்பட 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்தாகும்.