அஞ்சலி: சமூகப் போராளி செ. கணேசலிங்கன்

இடதுசாரிக் கருத்தியலும் முழுவீச்சில் இந்த ஈழ விடுதலை அமைப்புகளிடையே எழுந்து வர முயற்சித்த காலம். போராளிகள் பலரும் சர்வதேச விடுதலை அமைப்புகளின் இலக்கியங்களை… வரலாற்றைத் தேடிப் படித்த காலகட்டம்.

அவை அதிகமாக சோவியத் யூனியனின் புரட்சி சம்மந்தமானவையாகவும், லத்தீன் அமெரிக்க, சீன, வியட்நாம் புரட்சி சம்மந்தமானவை ஜேர்மன் நாஜிகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்களின் போராட்ட வரலாற்றை அடிப்படையாக வெளிவந்த முற்போக்கு இலக்கியம் எனப் பலவாகவும் அமைந்தன.

இவை பலவும் தமிழில் மொழி பெயர்த்து வந்திருந்தன. ஆனாலும் இவை ஆசிய…. ஈழத்து சூழலுக்கு அண்மையாக அமையாது அந்நியப்பட்டிருந்த ஒரு தன்மை அதில் இருக்கத்தான் செய்தன. அது இயல்பானதுதான்.

இவ்வேளையில்தான் எம் சூழலுக்கு ஏற்ப முற்போக்கு இலக்கியங்களை கம்யூனிச சித்தாந்தங்களை புரியும் படியான எளிய நடையில் தனது படைப்புகளை படைத்தவர் கணேசலிங்கன். இன்னும் சிலருடன் இவரும் இதில் முக்கிய பங்காற்றினார்.

ஈழ விடுதலைப் போராளிகளில் பலரும் சம உடமை சித்தாந்தத்தை இலக்கியங்கள் ஊடாக கற்றிய முனைந்த போது பலரும் விரும்பி தெரிவு செய்த படைப்பாக கணேசலிங்கனின் படைப்புகள் அது கட்டுரைகளாக…. சிறுகதைகளாக…. கடிதங்களாக…. வெவ்வேறு வடிவங்களில் வெளிவந்தன. அத்தனையும் ஒரு சதாரண மனிதன் வாசித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிய நடைமுறையில் அமைந்திருந்தன என்பது அவரின் படைப்பில் இருந்து பிரத்தியேகச் சிறப்பு.

ஒரு படைப்பாளி அதனை வெளியிடுபவராகவும் ஒரு பதிப்பகத்தை தொடர்ந்து நடாத்துவது என்பது எவ்வளவு வெற்றிகளை கருத்தியல் ரீதியாக ஏற்படுத்தும் என்பது அவரின் குமரன் பதிப்பகம் கூறி நிற்கும் செய்தியாகும். படைபாளிகளுக்கு அதுவும் விளிம்பு நிலை மக்களுக்கான படைப்புகளை உருவாக்குபவர்களுக்கு இந்த பதிப்பகம் ஒரு செய்தியையும் இங்கு கூறி நிற்கின்றது. அதனை செயற்பாட்டில் காட்டியவர் தோழர் கணேசலிங்கன். அந்த வகையில் பதிப்பகம் என்பதற்கு ஒரு வழிகாட்டியாகவும் அவர் எங்களுக்கு திகழ்கின்றார்.

அது 1960 களில் இருந்து பல்வேறு முற்போக்கு எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களை உருவாக்கத்திற்கும் மக்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனையை வளர்ப்பதற்கும் பாரிய பங்களிப்பை செய்திருக்கின்றது என்பது வரலாற்றை நாம் புரட்டிப் பார்த்தால் அறிய முடியும்.

இந்த வரலாற்றுப் பங்களிப்பை தனது இறுதி செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு முன்பு நிறுத்தி நேற்று முழுமையான சிந்தனையை நிறுத்தும் வரை தொடர்ந்தார் தோழர் செ. கணேசலிங்கன் என்பது மகத்தான் சமூக சேவையாகும்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின் தளமாக ஈழவிடுதலை அமைப்புகள் தமிழகத்தை தெரிவு செய்து செயற்பட்டனர். இந்த அமைப்புகளின் போராளிகள் பலரும் செ. கணேசலிங்கனை சந்திக்காதவர் என்று இருக்கமாட்டதார்கள். எமது ஈழ மக்கள் செய்தித் தொடர்பு நிலையத்திலும் அவருடனான சந்திப்புகள் பலதில் கலந்து கொண்ட அனுபவங்கள் எனக்கும் உண்டு. அந்த அனுபவங்களில் அவர் எவ்வளவு எளிமையானவர் இனிமையானவர் என்பதை அறியும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டதுண்டு.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கு அதற்கான கால அவகாசம் என்பனவற்றை சரியாக மதிப்பீடு செய்து தனது வாழ்விடத்திற்கான பின் தளமாக அல்லாது முன் தளமாக கொழும்பில் இருந்து தமிழகத்திற்கு அவர் இடம்பெயர்ந்ததையும் இன்றுவரை அங்கு வாழ்ந்து வந்ததையும் என்னால் மதிப்பீடு செய்ய முடிகின்றது

இச் செய்பாடு வரலாறு பற்றிய செ. கணேசலிங்கன் அவர்களின் ஒரு தூர நோக்கு பார்வையை காட்டுவதாக நான் உணர்கின்றேன்.

அதன் அடிப்படையில் தமிழகத்தது பத்திரிகைகள், சினிமா, கலை இலக்கிய வட்டம், எழுத்தாளர் வட்டம், முற்போக்க சக்திகளுடான தொடர்பு என்று அவரின் பாதையாக பலதையும் நாம் காணமுடியும்.

இத் தொடர்புகளை தனது தொழில் முறையாகவும் வாழ்வியலாகவும் இணைத்துப் பிணைத்துக் கொண்ட அவரின் வாழ்வு அர்த்தமுள்ள 94 வயதாக அமைந்தது இங்கு சிறப்பாகும்.

அவரின் மகள் குந்தவியுடன், நான் வாழ்ந்த திருநெல்வேலி ‘சிவமயம்’ வீட்டில் ஏற்பட்ட அறிமுகம், என்றும் எனக்கு பிடித்தமான ஊர்களில் ஒன்றாக அமைந்த உரும்பிராய் அவர்களின் பிறப்பிடமும் எனக்கு அவர்களிடம் ஓர் ஈர்பை ஏற்படுதியிருப்பதும் நாம் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பி பார்க்க வைத்திருப்பதும் உண்மைதான்.

அந்த அனுபவங்களில் தோழர் கணேசலிங்கன் தனது மகளுக்கு எவ்வளவு சுதந்திரமான செயற்பாட்டிற்கான இடைவெளியை யாழ்ப்பாணத்துப் பெண்ணாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு வழங்கியிருந்தார் என்பதையும் உணர முடிந்தது.

கூடவே குமரனுக்கும் குந்தவிக்கும் கடிதங்கள் என்ற எழுத்துகள் தனது பிள்ளைகளுக்க கருத்து, செயற்பாட்டுச் சுதந்தரங்களை முற்போக்கு அறிவியலை வளர்ப்பனவாக அமைந்ததை அந்த படைப்பை வாசித்தவர்கள் உணர முடியும். ஒரு சிறப்பான தந்தையாக எவ்வாறு நாம் செயற்படலாம் என்பதற்கான வழி காட்டிகளாக அந்த படைப்புகள் அமைந்தன.

தமிழ் சமூகத்தில் வர்க்கப் போராட்டம், சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமும் இணைந்து இரு குழல் துப்பாக்கி போல் செயற்பட வேண்டும் என்ற பார்வையை அவர் கொண்டிருப்பதாக நான் உணர்கின்றேன். அவரின் பெயர் ‘ம்” முடியாமல் ‘ன்” இல் முடியும் தோழர் நீர்வை பொன்னையனின் செயற்பாட்டுச் சிந்தனையையும் அவரிடம் நான் காண்கின்றேன்.

அவர் எழுதி வெளியிட்டுள்ள வெளியீடுகளை பார்க்கும் போது வருடம் ஒன்றிற்கு ஒரு புத்தகம் என்றளவிற்கு தொடர்ச்சியாக எழுத்துலகில் அவரின் பயணத்தை இருந்திருப்பதை நிறுவி நிற்கின்றது. தமிழக அரசின் சிறந்த படைபாளிக்கான விருதும் இலங்கையன் சாகித்திய அக்கடமி பரிசும் அவரின் எழுத்துகளுக்கு கிடைத்த குறைவான பரிசுகளாக உணரப்படுகின்றது.

சமூக முனனேற்றத்திற்காக எழுத்திலும் அதுவும் விளிம்பு நிலை மக்களின் விடிவிற்காக ஓயாது எழுதியும் பதித்து வெளியீடு செய்த தோழர் செ. கணேசலிங்கனுக்கு எனது மரியாதை கலந்த அஞ்சல் வணக்கங்கள்.

தங்கள் எழுத்துகளும் உருவாக்கப்பட்ட படைபாளிகளுக்கான பதிப்பகமும் தாங்கள் விட்டுச் சென்ற கருமங்களை… இலட்சியங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.