அஷ்ரபும் வடக்கு – கிழக்கு இணைப்பும்

‘எழுக தமிழ்’ பேரணியின் மூலமாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக மற்றொரு சர்ச்சையை உருவாக்கியிருக்கின்றார்.

‘‘வடக்கு, கிழக்கு இணைப்புக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலம்சென்ற எம்.எச்.எம். அஷ்ரப், சம்மதத்தைத் தெரிவித்து இருந்தார்” என்ற சுமந்திரனின் கூற்றே, இந்தச் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டருக்கு எதிராக, வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், தயா மாஸ்டர் சார்பில் ஆஜராகிவிட்டு வெளியேறும் போது, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே, சுமந்திரன் இக்கருத்தை வெளியிட்டு இருந்தார்.

இதற்குப் பதிலளித்து, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் கருத்தொன்று வெளிப்படுத்தப்பட்டிருந்தது. தாம் ஆரம்ப காலம்தொட்டே அஷ்ரபுடன் நெருங்கிப் பழகியவர் என்றும் அந்த வகையில், அஷ்ரப் ஒரு போதும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதை அங்கீகரித்திருக்கவில்லை என்பதை தாம் அறிவதாகவும் ஹிஸ்புல்லாஹ் கூறியிருந்தார்.

பின்னர், தாம் கூறியதை ஹிஸ்புல்லாஹ் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார் என்றும், அஷ்ரப் நிபந்தனையுடனான ஆதரவையே வடக்கு, கிழக்கு இணைப்புக்கு தெரித்தார் என்றே தாம் கூறியதாகவும், முஸ்லிம்களின் விருப்பத்துடனேயே அம்மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் சுமந்திரன் கூறியதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.

அஷ்ரப், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதை ஆதரித்தார் என்பதற்கு ஆவண ரீதியான ஆதாரங்கள் இருப்பதாகவும், வவுனியாவில் கருத்து தெரிவிக்கும் போது சுமந்திரன் கூறியிருந்தார். எனவே, அவர் கூறுவது சரியாக இருக்கும் எனப் பலர் நினைக்கலாம். அதேவேளை, ஹிஸ்புல்லாஹ்வும், அஷ்ரபின் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்குள் சில பிரச்சினைகளை எதிர்நோக்கிய போதிலும், அஷ்ரபின் மறைவு வரை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினராகவே இருந்தார். எனவே, அவர் கூறுவது சரியென வேறு பலர் நினைக்கலாம்.

சுருக்கமாகக் கூறுவதாயின், வடக்கு – கிழக்கு இணைப்பை ஆதரிப்பவர்கள், சுமந்திரன் கூறுவதே சரியாக இருக்க வேண்டும் என விரும்புவர். எனவே, அது சரி என வாதிடவும் முன்வரலாம். அதேபோல், இணைப்பை விரும்பாதவர்கள், ஹிஸ்புல்லாஹ் கூறுவது சரியெனக் கூறலாம். ஆனால், உண்மை அவற்றுக்கு இடைப்பட்டதாகவே இருக்கிறது என்பதை, அஷ்ரபுடனும் அக்காலத்து முஸ்லிம் காங்கி​ரஸுடனும் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும்.

அஷ்ரபின் நிலைப்பாட்டைப் பற்றிய ஆவண ரீதியான ஆதாரங்கள் இருப்பதாக, சுமந்திரன் முன்னர் கூறியதையும் அஷ்ரப், வடக்கு – கிழக்கு இணைப்புக்கு நிபந்தனையுடனான ஆதரவையே வழங்கினார் என்று பின்னர் அவர் கூறியதையும், நோக்கும் போது, அக்கருத்துக்கள் சற்று மயக்கத்தைத் தருகின்றன. ஏனெனில், இணைப்புக்கான அஷ்ரபின் நிபந்தனையுடனான அதரவு என்பது, இரகசியமான விடயமல்ல. அதற்கு ஆவண ரீதியிலான ஆதாரங்கள் தேவையில்லை. முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பித்ததன் பின்னர், நிபந்தனையற்ற வகையில், அவர் இணைப்புக்கு ஆதரவு அளித்தார் என்பதற்கு ஆவண ரீதியிலான ஆதரவு இருந்தால், நிச்சமாக அது அரசியலை கற்போருக்கு நல்ல செய்தியாகவே இருக்கும்.

அஷ்ரப், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதை மட்டுமல்லாது, தமிழீழம் என்ற தனித் தமிழ் நாட்டுக் கொள்கையையே ஒரு காலத்தில் ஏற்றுக்கொண்டு இருந்தார். அவர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கிய காலத்தில், அதுதான் அவரது நிலைப்பாடாகவும் இருந்தது.

1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து களமிறங்கி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்ட ஏ.எம்.சம்சுதீனுக்கு ஆதரவாக அஷ்ரப், பிரசாரம் செய்தார். அதில் ஒரு கூட்டத்தின் போது, “அண்ணன் அமிர்தலிங்கத்தினால் தமிழீழத்தை பெற்றுத்தர முடியாது போனால், தம்பி அஷ்ரப் அதனை பெற்றுத் தருவான்” என, சர்ச்சைக்குரிய கருத்தொன்றை அஷ்ரப், வெளியிட்டு இருந்தார்.

முஸ்லிம்கள் மத்தியில், தமிழீழத்தை நியாயப்படுத்துவதற்காக, அஷ்ரபின் இக்கருத்தை இன்று ஆதாரமாகப் பாவிக்கலாமா? முடியாது. ஏனெனில், அவர் சிறிது காலத்துக்குப் பின்னர், தமிழீழக் கொள்கையை கைவிட்டுவிட்டார்.

அதேபோல் அஷ்ரப், தமிழீழத்தை ஆதரித்த காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பையும் நிச்சயமாக ஆதரித்து இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், தமிழீழம் என்றால், அது வடக்கையும் கிழக்கையும் உள்ளடக்கியதான ஒரு நிலப்பரப்பில் உருவாக்கப்படும் அரசாங்கத்தையே குறிக்கிறது. அந்த அடிப்படையில், அஷ்ரப், வடக்கு – கிழக்கு இணைப்பை ஆதரித்ததினால் அதனை எடுத்துக் கூறி, முஸ்லிம்கள் மத்தியில் மாகாண இணைப்புக்கு ஆதரவு திரட்ட முற்படுவதும் பொருத்தமற்ற செயலாகும்.

ஏனெனில், பிற்காலத்தில் அஷ்ரப், அந்த நிலைப்பாட்டிலிருந்தும் மாறிவிட்டார். அதாவது, தமிழீழத்தை மட்டுமன்றி, வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒட்டுமொத்தமாக இணைப்பதையும் அவர் நிராகரித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வாக அவர், அதன் பின்னர் ஒன்றுக்கு மேற்பட்ட திட்டங்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்வைத்த போதிலும், வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒட்டு மொத்தமாக இணைப்பதை, அவர் ஒருபோதும் முன்வைக்கவோ ஏற்கவோ இல்லை.

இவ்வாறு, அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வது ஏதும் புதிய விடயம் அல்ல. சில நபர்களும் கட்சிகளும், சொந்த நலனுக்காகவும் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கிறார்கள். சொந்த நலனுக்காக அரசியல் நிலைப்பாடுகளை மட்டுமல்லாது, தமது சமயத்தையே இலங்கையில் முதன்மை அரசியல் குடும்பங்கள் மாற்றிக் கொண்டுள்ளன.

வேறு சிலர், அரசியல் நிலைமைகள் மாறுவதன் காரணமாக அதற்கேற்றாற்போல் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர். சிலர், நிர்ப்பந்தத்தின் காரணமாகவும் அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர். வேறு சிலர், அரசியல் மாற்றங்களினால் ஏற்படும் புதிய அனுபவம் மற்றும் அறிவின் காரணமாகவும், தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணி, 1970களின் முற்பகுதியில், தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை, அதாவது தனியாக பிரிந்து சென்று தனி நாடு அமைப்பதற்கான தமிழர்களின் உரிமையை ஏற்றுக்கொண்டு, அது தொடர்பான புத்தகங்களையும் வெளியிட்டு இருந்தது. ஆனால், 1983ஆம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால் அக்கட்சி தடை செய்யப்பட்டதை அடுத்து, அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகிக்கொண்டது. அன்று ஆதரித்தோமே என்பதற்காக, அக்கட்சி இன்று தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிப்பதில்லை.

1990ஆம் ஆண்டு வரையில் புலிகள் இயக்கம், ஏனைய தமிழ் இயக்கங்களையும் கட்சிகளையும், துரோகிகளாகவே வர்ணித்தது. பின்னர் 1990ஆம் ஆண்டில், திடீரென அவற்றில் ஒரு சில கட்சிகளுடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு, அக்கட்சிகளுடன் நல்லுறவுகளைப் பேணியது. அக்கட்சிகளும் திடீரென புலிகளைத் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக பகிரங்காகவே வர்ணித்தன. பின்னர், புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதை அடுத்து, அவற்றில் சில கட்சிகள், தாம் புலிகளை ஒரு போதும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக கருதவில்லை என்றும் கூறத்தொடங்கின.

இதேபோலத்தான், அஷ்ரப் ஒரு காலத்தில் வடக்கு – கிழக்கு உள்ளிட்ட தமிழீழத்தையே ஆதரித்து, பின்னர் அரசியல் நிலைமைகளினதும் சூழலினதும் மாற்றத்தைக் கண்டு, தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றமானது, ஒரு தனி மனிதனின் ஆசையினால் ஏற்பட்டதல்ல. அது ஒரு வரலாற்றுத் தேவையின் வெளிப்பாடாகியது என்பதே உண்மை. தமிழ்த் தலைவர்கள், தனித் தமிழ் நாட்டுக் கோட்பாட்டை வகுத்துக் கொண்டபோது, முஸ்லிம்கள் அதற்கு உடன்படவில்லை. ஆரம்ப காலத்தில், தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் புலிகள் உட்படச் சில தமிழ் ஆயுதக் குழுக்களிலும், ஒரு சில முஸ்லிம்கள் அங்கம் வகித்தாலும், ஒரு சமூகம் என்ற வகையில், அவர்கள் தனி நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை.

இதனை, மரபு ரீதியான தமிழ்க் கட்சிகள் பெரிதாக பொருட்படுத்தாவிட்டாலும், தமிழ் ஆயுதக் குழுக்கள், குறிப்பாகப் புலிகள் இதனை ஒரு பகை நிலைமையாகவே கருதினர். இதனால், தமிழீழத்தின் அங்கமாகத் தாம் கருதிய கிழக்கின் முஸ்லிம் பகுதிகள், தமது நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என அவர்கள் நினைத்தனர். எதற்கும் ஆயுதம் மூலமே தீர்வு தேடிய புலிகள், அந்தப் பிரச்சினைக்கும் ஆயுதத்தின் மூலமாகவே தீர்வு காண முற்பட்டனர்.

இதன் விளைவாக, 1980களின் ஆரம்பத்தில், கிழக்கின் பல பகுதிகளிலிருந்த முஸ்லிம்கள் மீது, புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். 1985ஆம் ஆண்டில், கல்முனை மற்றும் அண்டிய பகுதிகளில், இரண்டு நாட்களில் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம் வீடுகள் புலிகளினால் தீக்கிரையாக்கப்பட்டன. மரபு ரீதியான தமிழ்க் கட்சிகள், இவற்றை விரும்பாவிட்டாலும், அறிக்கை விடுவதைத் தவிர அவர்களால் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது.

அப்போதைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம், தம்மைப் பாதுகாக்கவில்லை என்றே அப்போதைய முஸ்லிம்கள் கருதினர். ஏற்கெனவே, இரு பிரதான கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்திருந்த முஸ்லிம்கள் மத்தியில், தமக்காகக் குரல் கொடுக்க ஒரு சக்தி வேண்டும் என்ற இயற்கையானதோர் விழிப்பு ஏற்பட்டது. அதன் விளைவாகவே, 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதியன்று, மருதானை பாஷா விலாவில், முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் கட்சி உருவாகியது.

அக்காலத்தில், இலங்கை – இந்திய அரசாங்கங்களினால், இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து வந்தன. அந்த நிலையில், கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய முஸ்லிம் மாகாண சபையொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற கோஷத்துடனேயே, முஸ்லிம் காங்கிரஸ் பிறந்தது.

ஆனால், அந்தப் பிரதேசங்கள் தவிர்ந்த கிழக்கில் ஏனைய பகுதிகளை, வட மாகாணத்தோடு இணைப்பதை அஷ்ரப் அப்போது எதிர்க்கவும் இல்லை. இது ஒரு வகையில், அவர் தமிழ்த் தலைவர்களின் தீர்வுத் திட்டத்தை மதிப்பதையும் ஆனால், அத்தீர்வுத் திட்டத்துக்குள் முஸ்லிம்களின் தீர்வு அமையவில்லை என்ற அவரது முடிவையும் எடுத்துக்காட்டியது.

இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்தின் மீதும் புலிகள் மீதும் திணித்த இலங்கை​ – இந்திய ஒப்பந்தத்தின் மூலம், 1987ஆம் ஆண்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போது மு.காவும் அதனை சூழ்நிலையின் நிர்ப்பந்தமாகவே ஏற்றுக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தை ஓர் அடிமைச் சாசனமாக விவரித்த அஷ்ரப், இந்தியா, முஸ்லிம்களின் முதுகில் குத்தியதாக கூறினார். இந்தியா கிழக்கு மக்களின் விருப்பத்தைக் கேளாது, முன்னரே வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்துவிட்டு, பின்னர் கிழக்கு மக்களின் விருப்பத்தை அறியும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஒப்பந்தத்தின் மூலம் விதித்தமையினாலேயே, அவர் அவ்வாறு கூறினார்.

சூழ்நிலை காரணமாக, அப்போது இந்திய அதிகாரிகளோடு இணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்ட போதிலும், 1988ஆம் ஆண்டில் அஷ்ரப், முஸ்லிம்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலத் தொடர்பற்ற மாகாண சபையொன்றை உருவாக்க வேண்டும் என்ற புதிய கருத்தை முன்வைத்தார். அந்த நிலத் தொடரப்பற்ற மாகாண சபைக்கு, கிழக்கில் முன்னர் கூறிய மூன்று பகுதிகளோடு மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை போன்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில், ஏனைய முஸ்லிம் பகுதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

1988ஆம் ஆண்டில், முஸ்லிம் காங்கிரஸும் குமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸும் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, இலங்கையில் இனவாரியான மூன்று பிராந்தியங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று இணக்கம் காணப்பட்டது. அந்த இணக்கத்தின் பிரகாரம், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களுக்காக ஒரு பிராந்திய சபையொன்றும் அம் மாகாணங்களில் ஏனைய பகுதிகளுக்காக தமிழ்ப் பிராந்திய சபையொன்றும், நாட்டில் ஏனைய பகுதிகளுக்காக சிங்களப் பெரும்பான்மை பிராந்திய சபையொன்றும் உருவாக்க வேண்டும். அந்த வகையில், முஸ்லிம் மாகாண சபை என்ற எண்ணக்கருவை ஏற்றுக்கொண்ட முதலாவது தமிழ்த் தலைவர், குமார் பொன்னம்பலமே.

1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக, முஸ்லிம் காங்கிரஸும் தமிழ்க் காங்கிரஸ் உட்பட எட்டு கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கு ஆதரவளிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தின. அக்கூட்டணியின் கொள்கைப் பிரகடனத்தில், அஷ்ரப் – பொன்னம்பலம் உடன்படிக்கையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. பின்னர், வேறு பிரச்சினைகள் காரணமாக, அக்கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியடைந்தது.

1987ஆம் ஆண்டில், இலங்கை ​- இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட கட்சிகளும் 1989ஆம் ஆண்டு நடுப்பகுதி அளவில், அந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைக்குப் பதிலாக, மாற்றுத் தீர்வொன்றை தேடும் முயற்சியில் ஈடுபட்டன. அதன் ஓர் அம்சமாக, அவ்வாண்டு எட்டுத் தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸும் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி, அஷ்ரப் -பொன்னம்பலம் உடன்படிக்கையையே தீர்வாக ஏற்றுக்கொண்டன. ஆனால், தமிழ், முஸ்லிம் மாகாணங்களின் எல்லைகளை நிர்ணயிக்கும் முயற்சியின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அப்பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

1996ஆம் ஆண்டளவில், சந்திரிகா அரசாங்கத்தின் அரசியலமைப்புத்துறை அமைச்சராகவிருந்த பேராசிரியர்
ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு, இனப்பிரச்சினைக்குத் தீர்வு தேடும் காலத்தில், தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸும் பேச்சுவார்த்தை நடத்தி, மீண்டும் அஷ்ரப் -பொன்னம்பலம் தீர்வுக்கே வந்தன. அப்போதும் தமிழ் மற்றும் பிராந்திய சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக அந்தப் பேச்சுவார்த்தைகளும் முறிவடைந்தன.

முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து அஷ்ரப் ஒட்டுமொத்தமாக வடக்கையும் கிழக்கையும் இணைப்பதை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்பதையே இந்த வரலாறு சுட்டிக்காட்டுகிறது. நிபந்தனையுடன் அதாவது முஸ்லிம்களுக்கும் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மட்டுமே மு.காவை ஆரம்பித்ததன் பின்னர், அஷ்ரப் வடக்கு – கிழக்கு மாகாண இணைப்பை ஆதரித்துள்ளார்.

நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டு புதிய அரசியலமைப்பொன்று வர இருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள், மாகாண இணைப்புக்கு முஸ்லிம்களின் ஆதரவை நாடுவது புரிந்துக்கொள்ளக் கூடியதே. ஆனால், அதற்காக வரலாற்றிலிருந்து ஆதாரம் தேடிக் கொள்ள முடியாது.

தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையின் அவசியத்தினாலேயே, 1970களில் வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றிய கோரிக்கை தோற்றம் பெற்றது. இனி, தமிழ் ஈழக் கோரிக்கை எந்தளவு யதார்த்தபூர்வமாகும் என்பதும் கேள்விக்குறியே. அந்த மாகாண இணைப்பினால் தமது அரசியல் செறிவு குறைந்து தாம் பாதிக்கப்படுவோமோ என்ற முஸ்லிம்களின் அச்சத்தினாலேயே, நிலத் தொடர்புள்ள மற்றும் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாண சபைக் கோட்பாடுகள் தோன்றின. இப்போது வரலாற்று நிலைமைகள் மாறியிருக்கின்றன. போரின் முடிவுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நிலைமைகளின் கீழ், இக்கோரிக்கைகளின் யதார்த்த பூர்வத்தன்மையைத் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் மீளாய்வு செய்யவேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
(எம்.எஸ்.எம்.ஐயூப்)