ஆர் எஸ் எஸ் – சிவ சேனை – சைவ மகா சபை

‘ பக்கத்து வீட்டில் பேயாய் இருப்பது நம் வீட்டில் தேவதையாக மாறாது ‘

அண்மைக்காலமாக இந்த அமைப்புகள் பற்றியும் இந்துத்துவ கருத்தியலின் செயல்பாடுகள் பற்றியும் முகநூலில் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவை பற்றியும் இன்ன பிற மத அமைப்புகள் பற்றியும் ஆழமான உரையாடல் தேவை. அதற்கான சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு முன் சில அடிப்படையான புரிதல்களை இந்த விவாதத்தின் போது கொண்டிருக்க வேண்டிய அவசியமிருக்கின்றது.

1 – எந்த ஒரு சமூக, மதம் சார் உரையாடல்களுக்கும் விவாதங்களுக்கும் கருத்துக்களை உள்ளெடுக்கும் போதும் முன் வைக்கும் போதும், அந்த அந்தச் சூழலில் அவற்றின் வரலாறு, தாக்கம், நம்பிக்கை, நடைமுறைகள் பற்றிய ஆழமான அவதானிப்புகள் தேவை. நமது சூழலில் பெரும்பாலான விவாதங்கள், எந்த அடிப்படையான தரவுகளுமற்று பிறர் மீதுள்ள வெறுப்பிலும் கேலியிலும் நிகழ்கின்றன. இதுவொரு ஆபத்தான போக்கு. வெறுப்பினால் உண்டாகும் எதுவும் பிறரையும் தன்னையும் அழிக்கும் என்று வரலாறு மறுபடியும் மறுபடியும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

2 – இந்த விவாதங்களுக்கு இரண்டு தளங்கள் உள்ளன. ஒன்று, நடைமுறை சார்ந்து மனிதர்கள் மத்தியில் இந்தக் கருத்துக்கள் எப்படி உற்பத்தியாகின்றன. இரண்டு கருத்தியல் ரீதியில் இவை எவ்வாறு இயங்குகின்றன. உதாரணத்திற்கு, முஸ்லிம்கள் மீது ஏராளமான வெறுப்பு தமிழர்களிடையில் வளர்ந்து வருகிறது. எல்லா இடங்களிலும் இதனை அவதானிக்க முடியும். அதை நடைமுறையில் உள்ள கருத்துகளாக நாம் பார்க்க முடியும். அதை, ஆர் எஸ் எஸ் இலங்கையில் வேண்டும் என்று சொல்கின்ற தரப்பு கருத்தியலாக மாற்றி ‘இந்துத்துவம்’ இதற்கு மாற்றான ஒன்று என்று வலிமைப்படுத்தும். இங்கு நடைமுறையில் நிகழும் செயல்கள் மூலம் உருவாகும் வெறுப்பினை திரண்ட சக்தியாக மாற்ற கருத்தியல் முயலும். இந்தப் போக்குகளை நாம் நிச்சயம் கவனத்திலெடுக்க வேண்டும்.

3 – எந்தவொரு மதம், சமூகம் சார் உரையாடல்களுக்கும் எதிர்த்தன்மையை மட்டுமே வைத்து ஆதரிக்கும் தரப்பும் எதிர்க்கும் தரப்பும் உரையாடலை நிகழ்த்த முடியாது. மேலும் உரையாடல் என்பது நம்பிக்கை சார்ந்த ஒன்று. திறந்த மனத்துடன் உரையாடல் நிகழாமல், ஒருவரை ஒருவர் ஏசியும் கேலி செய்துமே அது நகருமாயிருந்தால் அது மேலும் மேலும் விலகலையே உண்டு செய்யும்.

4 – எந்த ஒரு கருத்தியலையும் சமூகத்திற்கு பயின்று ( practice ) பார்க்க முன் மொழிபவர்கள் மிகவும் நிதானமாகவும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும். நமது எல்லைக்குட்பட்ட அறிவுடன் தான் எல்லோரும் இயங்குகிறோம். ஆகவே இது தான் சரியென்று தாம் நம்புகின்ற தரப்பை நோக்கி மந்தையாடுகள் போல் மனிதர்களை சாய்த்துச் செல்லும் வாதங்களை தொடர்ந்து செய்வது அறமல்ல. குறிப்பாக எந்த அடிப்படை வரலாற்று உணர்வுமற்று இஷ்ட்டத்துக்கு, இது தான் வரலாறு என்று எழுதுவதால் யாருக்கு என்ன லாபம். எல்லா உரையாடல்களுமே நாம் வாழும் காலத்தின் மீதான ஆழமான அன்பினாலேயே உருவாக வேண்டியவை, நாமோ வெறுப்பை எங்களின் முதல் நம்பிக்கையாக கொண்டியங்குகிறோம்.

5 – சமூக இயக்கத்தை மதிப்பிடுபவர்கள் கவனமின்றி மதிப்பீடுகளை முன்வைப்பது நீண்ட கால நோக்கில் தவறானது. உதாரணமாக சைவமகாசபை பார்ப்பதற்கு வேடிக்கையான அமைப்பென்று சொல்பவர்களைப் பார்க்கிறேன், யாழ்ப்பாணத்தில் வேள்வியைத் தடை செய்தது அந்த அமைப்பின் வழக்குத்தான். நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே. இது உதாரணம் தான். ஆரம்பம் தான். இன்னும் நிறுவனமயப்படுத்தப்பட்டு இந்த அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தீவிரமாக இயங்க ஆரம்பித்தால் அது பெரியளவிற்கான குழப்பங்களை உருவாக்கும். ஆகவே ஒவ்வொரு அமைப்பும் அதன் ஆதாரமான கருத்தியலை எப்படி நடைமுறைப்படுத்துகின்றன என்பது தொடர்பில் இன்னும் அக்கறையாக நாம் கவனித்து, கருத்துக்களைச் சொல்ல வேண்டும்.

மற்றவர்களுடைய கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன். இது போன்ற நிலமைகளில் கூட்டு உரையாடல்களே முக்கியமானவை.

(Kirisanth Sivasubramaniyam)