இரு தேசங்களின் அரசியல் போக்கை மாற்றிய கொலைகள்

ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன்பு நடைபெற்ற தோழர் பத்மநாபாவின் கொலைதான் ராஜீவ் காந்தியின் கொலைக்;கான ஒத்திகையாகவும் அமைந்தது.

இது நடைபெற்றது 1990 ஜுன் 19 தமிழ் நாட்டின் கோடம்பாக்கத்தில்.
இந்த கொலையில் 13 பேர் கொல்லப்பட்டனர்

அதில் அன்றைய ஈபிஆர்எல்எவ் இன் முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர் இதில் பெண் போராளிகளும் அடங்குவர்.
இந்த கொலை நிகழ்ச்சி ராஜீவ் காந்தியின் கொலைக்கான ஒரு முன்னோட்டமாக நடைபெற்றதாகவே அரசியல் அவதானிகளால், புலனாய்வு பிரிவினரால் பார்க்கப்படுகின்றது.

இதுதான் உண்மை நிலையும்.

அப்போது தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி தலமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. புலிகளுடன் நல்ல உறவிலும் அந்த அரசு இருந்தது.

புலிகளுடன் நல்ல உறவில் இருந்த ஈரோஸ் முக்கியஸ்தர்களிடம் கருணாநிதி இக்கொலைக்கு முதல் இரவு அவர்களை அழைத்து உதவியாளர்கள் இன்றி ‘பத்மநாபாவை கொலை செய்ய இருப்பதான செய்தியை அறிவித்து அவரை பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறத்தியதாக ஈரோசின் முக்கியஸ்தர் காதர் பொதுவெளியில் கூறி வருவதில் எவ்வளவு ‘நேர்மை’ உண்டு என்பதை தீர்மானிக்க முடியவில்லை.

இவ்விரண்டு கொலைகளிலும் முக்கிய பங்காற்றியவர் தற்போது மரணமடைந்திருக்கின்றார்.

ஒற்றைக் கண் சிவராசனினால் மூளைச் சலவை செய்யப்பட்ட ஒருவராக இந்த சாந்தன் சிலரால் பார்க்கப்பட்டாலும் பகுத்தறிவுள்ள ஒருவரால் இவ்விரு கொலைகளிலும் சுய புத்தியுடன் ஈடுபட்டிருக்க முடியாது என்ற வாதத்திற்கு அப்பால்…

சாந்தன் ஒரு அமைப்பு சார்ந்த செயற்பாட்டாளராகவே இருக்கின்றார் என்பதை அவரின் மரணம் வரையிலான நடவடிக்கைகள் கூறி நிற்கின்றன

தான் சார்ந்த அமைப்பின் கட்டுப்பாட்டின்படி எதிர் தரப்பினரிடம் கைதின் முன்பு சயனைட் எடுத்து தற்கொலை செய்தாக வேண்டும் என்பதை அவர் நிறைவேற்றாமலே உயிருடன் கைது செய்யப்பட்டார்.

ஒற்றைக்கண் சிவராசன், அவர் கூட்டாளிகள் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் சயனைட் எடுத்து தற்கொலை செய்து கொண்டனர் பெங்களுரில் ஒரு வீட்டை புலனாய்வுப் பிரிவினர் சுற்றி வளைத்த போது.
ராஜீவ் காந்தி பத்மநாபா என்ற இரு கொலைகளும் இலங்கை இந்திய அரசியலில் அதிக மாற்றங்களை வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை அரசியல் வரலாற்றை ஆழமாக அவதானிப்பவர்களால் உணர முடியும்

வரலாற்றை மாற்றி இருக்கின்றது என்பதை விட புரட்டிப் போட்டு பல அழிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றது இன்றும் எற்படுத்திக் கொண்டிருக்கின்றது.

முதலாவது கொலைக்கான தகவல் சேகரிப்பில் சாந்தன் ஈடுபட்ட போது பத்மநாபாவின் மனிதாபிமானம், மனித நேயத்தை தனக்கு சாதகாமாக பயன்படுத்தினான்

அது இலங்கை வறிய தமிழ் மாணவனாக தன்னை பத்மநாபாவின் அமைப்பினரிடம் அறிமுகப்படுத்தி இலகுவாக யாரும் அணுகும் நிலையில் உள்ள பத்மநாபாவை நெருங்கினான்.

அவர் மூலம் கல்வியை தொடர்வதற்கான அனுமதி அதற்கான செலவு என்றாக ஆரம்பித்து உயிர் வாழ்வதற்கான உணவு உறைவிடம் என்பதாக உதவிகளையும் பெற்றுக் கொண்டான்.

பத்மநாபாவும் அவரின் தோழர்களும் தங்கும் அவர்கள் இருப்பிடம் என்றாக நன்றாக ‘விருந்தாளியாக’ வீட்டிற்குள் உள் வீட்டுப் பிள்ளையாக உள்ளே சென்று உண்ட வீட்டிற்கே நம்பிக்கைத் துரோகத்தனமான கொலைகளை அரங்கேற்றினான்.

இத்தனைக்கும் பத்மநாபா தலமையிலான விடுதலை அமைப்பினர் எக்காலத்திலும் மூன்று வேளை சாப்பிடும் அளவிற்கான வசதிகளை கொண்டிருந்தவர்கள் அல்லர்.

இந்த வீட்டிற்கு கொலையாளிகளை அழைத்து வந்தவன் இவனே
திருமாக்களும் தி. காந்திகளும் சாந்தனுக்கு செலுத்திய அஞ்சலி என்பது மரணித்த ஒருவருக்கான அஞ்சலி என்பதை விட ஈழத்து தமிழர்களின் போராட்டத்திற்கு சாவு மணியை அடித்த செயற்பாட்டின் முக்கிய சூத்திரதாரியை ஆதரிக்கும் செயற்பாடாகவே பார்க்க முடியும்.

திருமா கட்சியை ஆரம்பிக்கும் போது இளம் இரத்தமாக சிறுத்தைகள் என்று யாரின் பெயரை முன்வைத்து உணர்ச்சி பீறிட அரசியலை ஆரம்பித்து இன்று சமூக நீதி இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர் மொழி மத சிறுபான்மை என்று அம்பேக்கார் பெரியார் என்று தெளிவாக முன்னகர்த்தி வரும் அரசியல் பாதையில் இந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் முறையற்ற அரசியலை அம்பேக்கார் உயிருடன் இருந்தால் ஏற்று இருக்கமாட்டார்.

ஈழ அரசியல் பற்றிய தெளிதல் திருமாவிற்கு தேவையாக உள்ளது. அவர் தெளிவாக இருந்து கொண்டு தெளிவற்ற நிலையில் ஈழ அரசியல் செய்வதாக என்னால் உணர முடிகின்றது.

உங்கள் மீதான மரியாதைக்கு அரசியலுக்கு இன்று இது தேவை இல்லை என்பதை ஆளுர் நவாசிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்
அதுவும் ஈழத்து இடதுசாரி ஈழவிடுதலைத் தலைவர், இந்தியாவின் மதச் சார்பின்மையை முன்னகர்த்திச் சென்றிருக்கக் கூடிய தலைவர், என்றாக நீங்கள் தற்போது அதிகம் பேசும் அரசியலை செய்தவர்கள் என்ற இருவரது கொலைகளிலும் இந்த சாந்தனுக்கு முக்கிய பங்குண்டு என்று இருக்கும் சூழலில், சீமான் செய்யும் அரசியலை நீங்கள் செய்யலாமா…?

அன்று செய்யப்பட்ட இந்த இரு கொலைகளும்தான் 2009 ம் ஆண்டு ஆனந்தபுரத்தில் புலிகளுக்கு…. புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு சமாதி கட்டுவதற்கு ஆரம்ப சுழிகளை ஏற்படுத்தியது எனலாம்.

இந்த புலிகளை அழித்தல் என்பதில் இலங்கை அரசாங்கம், புலிகள் தரப்பு. சர்வதேச அரசியல் சூழல் என்ற முத்தரப்பினருக்கும் சம பங்கு உண்டு.
இதற்கு எல்லாவகையிலும் ஆதரவளித்த அன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இதே அளவு பங்குண்டு.

இன்று சாந்தனுக்கான மருத்துவமனை அஞ்சலியில் திருமாக்கள் அரசியல் ஆதாயம் பெறுகின்றார்கள் என்பதை விட இந்திய மக்களுக்கும் ஈழத்து தமிழர்களுக்கும் பிழையான உதாரணங்களை காட்டியும் நிற்கின்றனர்
சாந்தனின் இறப்பிற்கு பின்னரான அஞ்சலி என்பது காந்தியைக் கொலை செய்த கோட்சேயின் மரணத்தை அஞ்சலி மூலம் மரியாதை செலுத்துவதற்கு சமமானது என்பதை திருமாக்கள் புரிந்து கொண்டாக வேண்டும்

தி காந்தி போன்றவர்களின் அரசியல் பிரபாகரனை வைத்து வாழ்வை கொண்டு போக முற்படும் சீமான் வகை அரசியல்தான், இதனை நாம் புறந்தள்ளிப் போக வேண்டும். அவரின் மருத்துவமனை அஞ்சலியும் சீமானின் அஞ்சலியும் ஒரு வகையானதே.

மருத்துவமனை அஞ்சலிகளில் ஈடுபட்டவர்களின் செயற்பாடுகள் இன்றுவரை காணமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி சில ஆண்டுகளாக வீதியில் நிற்கும் எங்கள் மக்களுக்கும் புது மாத்தளனில் கொல்லப்பட்ட பொது மக்களுக்குமான பொறுப்புக் கூறலை செய்தாகவேண்டிய சூழலுக்குள் அவர்களைத் தள்ளி உள்ளது.

இதே கொலையின் கூத்திரதாரிகளும் இதற்கு தனது திறமையான உளவு, தொடர்பாடல் இணைப்பு தகவல் பரிமாற்றம், காட்டிக் கொடுப்பு என்பதாக ஈடுபட்ட சாந்தன் போன்றவர்களும் புதுமாத்தளன் பொது மக்கள் கொலைக்கான பொறுப்புக் கூறலுக்கு உரியவர்கள்தான்.

நீதிமன்றத் தண்டனை காலத்திலும், மரணிக்கும் வரையும் பகிரங்கமாக இதற்கான வருந்தல்களை தெரிவிக்காத பிள்ளைப் பெற்றதற்;காக ஒரு தாய் மகிழ முடியாது.

பத்மநாபா கொலையின் பின் இலங்கைக்கு தப்பிவந்து, அம்மா கையால் சாப்பிட்டுவிட்டு, அடுத்த கொலைக்கு தயாராகிய கொலைகார மகனைப் பெற்ற அம்மா என்றபோதிலும் தாயாக அவரின் வலியை உணர்கின்றோம். புரிந்து கொள்கின்றோம் மதிக்கின்றோம்.

ஒரு விடுதலைப் போராட்டத்தின் வெற்றி அந்த போராட்டத்தில் ஈடுபடும் தலைவர்கள் கொல்லப்படாமல் உயிர் வாழ்தலிலும் அதிகம் தங்கியிருக்கின்றது.

இதற்கான வரவாற்றுச் சான்றுகளை கியூபா, வியட்நாம், சோவியத் ஏன பல்வேறு நாடுகளின் வரலாற்றில் காண முடியும்.

இதனை நிகரகுவாவிலும் காணமுடியும். அண்மைய சிலியின் தேர்தல் வெற்றி, பிரேசில் வெற்றிகளிலும் காண முடியும்.

இதனைத்தான் ஈழவிடுதலைப் போராட்டத்திலும் நாம் செய்திருக்க வேண்டும்.

கருத்து முரண்பாடுகளை தலைவர்களைக் கொல்லுதல், அந்த அமைப்புகளைத் தடை செய்தல் என்றாக பயணித்து விடுதலைப் போராட்டத்தை நடாத்தி வெற்றி பெற்றதாக உலக வரலாற்றில் எங்கும் நாம் காண முடியாது.

ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கு இங்குதான் சுழிகள் போடப்பட்டன.

விடுதலை அமைப்புகளைத் தடை செய்தல் அதன் தலைவர்களைக் கொலை செய்தல். மாற்றுக் கருத்தாளர்களை, அதன் ஆதரவாளர்களை கொலை செய்தல் என்பது ஈழவிடுதலையின் பிரத்தியேக பண்பு. இதன் பிரதான சூத்திரதாரி புலிகள் அமைப்பினர். பிரபாகரன்.

இலங்கை அரசும் அதனை இயக்கும் மேற்குலகும் இந்த விடுதலை அமைப்புத் தலைவர்களை கொலை செய்வதற்கு 1980 களின் நடுப்பகுதியில் இருந்து அதிகம் முனைப்பில் ஈடுபட்ட போது இதற்கு செயல் வடிவத்தை எமக்குள் இருந்தவாறு செய்த அமைப்பு புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் தான்..

அது உமா மகேஸ்வரனை தவிர்த்து ஏனையோர் பலரையும் நேரடியாகவும், பாலகுமாரை மறைமுகமாகவும் கொன்று குவித்து தானும் சயனைட்டு அருந்தாமல் உடையின்று கொலையுண்டு போன வரலாறு ஈழவிடுதலைப் போராட்டத்தின் அவமானம்.

பத்மநாபாவிடம் இருந்த மனிதாபிமானத்தை தனக்கு சாதகம் ஆக்கியவன் சாந்தன்

இந்த கொலையில் கண்ட ருசிதான் ராஜீவ்காந்தி கொலைக்கு அவனைப் பாவிப்பதற்காக விமான மூலம் தமிழ் நாட்டுக்குள் மீண்டும் கொண்டு வர முனைந்த செயற்பாடு ஆகும்.

ராஜீவ் காந்தியின் கொலைதான் ஈழ மக்கள் ஈழவிடுதலைப் போராட்டதின் முழு ஆதரவு நிலையை சற்று தடுமாற வைத்த ஜேஆரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு, தீர்மானத்தை இந்திய ஆளும் வர்க்கம் முழுயைமாக எடுப்பதற்கு ஆரம்ப உரையை எழுத வைத்தது.

இலங்கைக்கான இந்திய படைகளின் வருகையும், பூரண கும்பத்துடன் புலிகளின் வரவேற்பும், புலிகள்அவர்களின் இராணுவ வாகனங்களில் முதலில் பவனி வந்த பந்தாவும் அத்தனையும் அக்காலத்தில் பொது மக்களும் அறிவர்

அமைய இருந்த இடைக்கால மகாண அரசிலும் முழுமையன பிரநிதித்துவம் இவர்களுக்கே வழங்கப்பட்டது.

இங்கு எங்கே பிழைக்கின்றது என்றால் 1986 இறுதியுடன் ஈழத்தில் சகல பகுதியிலும் ஏனைய விடுதலை அமைப்புகளின் போராடும் உரிமையை மறுத்து மாற்றுக் கருத்தளார்களை கொன்று குவித்து ஏக போகமாக ஆரம்பித்து கோலோச்சிய புலிகளை, வரமராட்சியில் இருந்து விரட்ட எடுத்த நடவடிக்கைக்கு எதிராக ஒப்பரேசன் பூமாலை என்ற உணவுப் பொட்டலப் போடுதல் என்றாக காப்பாற்றி இந்தி அரசின் செயற்பாடும்…

இதனைத் தொடர்ந்த இலங்கை இந்திய சமாதானப் பேச்சு 13 வது திருத்தச் சட்டம் என்றாக இணைந்த மாகாணசபை அதிலும் புலிகளே முதன்மை என்று அரம்பித்த வரைக்கும் எல்லாம் புலிகளுக்கு சுமூகம்தான்.

ஆனால் எவர் எவரை(மாற்று விடுதலை அமைப்புகளை) தடை செய்து அவர்களின் போராடும் உரிமைகளை மறுத்து மாற்றுக் கருத்துகளின் குரல் வளைகளை திருகிக் கொன்றார்களோ அவர்களின் அரசியல் செயற்பாடுகள் தமிழ் பிரதேசம் எங்கும் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசு அனுமதித்ததை பிரபாகன் புலிகள் ஒரு போது ஏற்கவில்லை.

இதுதான் இந்திய இராணுவத்துடன் ஒரு தலைப்பட்சமான தாக்குதல் என்று ஆரம்பித்து அமைதிப்படையை தாக்குதல் படையாக மாற்றிய செயற்பாடு ஆகும்

இதில் இருந்துதான் மகாணசபையை நடைமுறைப்படுத்த முற்பட்டவர்களை ஜனநாயக முறையில் சந்திக்காமல், துப்பாக்கி முனையில், கொலைகள் மூலம் மிரட்டல் அரசியலுக்கு புலிகளை நகர்ந்து போகச் செய்தது.

புலிகள் முதலில் மட்டக்களப்பில் ஆரம்பித்து புளட் 50 வரையிலான உறுப்பினர்களைக் கொலை செய்து, பின்பு ஈபிஆர்எல்எவ் உறுப்பினரில் ஒரு பகுதியை கொலை செய்த போது இந்திய அமைதிப் படை தடுக்காமல் புலிகளுக்கு எதிராக செயற்படாமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

இதன் பின்புதான் புலிகளின் பிரபாகனைக் கைது செய்ய நேரடியாக இந்திய இராணுவத்திற்கு உத்தரவு கிடைக்கிறது. எனது நினைவுப்படி மூன்று தடவைகள் பிரபாகரனை நெருங்கிய இந்தியப் படைகள், கைது செய்வதைத் தவிர்த்தாக அறிய முடிந்தது.

அந்த கொலைகள்தான் இந்தியாவின் அரசியலையும் ராஜீவின் பின்னரான நரசிம்ராவ் என்றாகி சங்க பரிவாரங்களின் அத்வானி தலமையிலான ரத யாத்திரை என்பதை சரியான முறையில் தடுத்து கையாளமல் பாமர்மசூதி இடிப்பு என்ற கர சேவை என்றாகி, அத்வானியின் ஆர்எஸ்எஸ் இன் எழுச்சிக்கு இந்துத்துவாவின் மதவெறி செயற்பாடுகளுக்கு தீனி போட்டது.

இந்த பெரு எழுச்சியின் காரணமாகதான் வாஜ்பாயி பிரதமர் என்றாகி இன்று மோதி வரை எல்லா நிகழ்வுகளும் நடைபெற்று இருக்கின்றன.
இதே அளவிற்கான தாக்கம் பத்மநாபாவின் கொலை ஈழத்து அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்கு ஈழப் போராட்ட உண்மையான வரலாற்றை தமிழ் நாட்டின் வரலாற்று ஆசிரியர்கள்….

ஊடகங்கள் போதியளவு வாதங்களை பொதுவெளியில் வைக்கவில்லை என்றாலும்………

பத்மநாபாவின் கொலை நிகழாது இருந்திருந்தால் ஈழத் தமிழர் அரசியல் பரப்பில் இறுதி யுத்தப் படுகொலைகள் தவிர்க்கப்பட்டு இருக்கும் என்பது எனது கணிப்பு.

எனவே சாந்தனின் கணிசமான பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கொலைகள் தனி இரு நபர்கள் அல்லது 13 பத்மநாபா தோழர்களின் கொலை ராஜீவ்காந்தி அவர்களுடன் மரணித்த சிலருடனான கொலைகள் என்பதாக மட்டும் சுருக்கிவிடக் கூடியது அல்ல.

மாறாக இந்தியாவின் இந்துத்துவா என்ற மதசார்பின்மையை மறுதலிக்கும் வளர்ச்சிக்கும் ஈழத்து தமிழ் மக்களின் முள்ளிவாய்கால் அழிவிற்கும் வித்திட்டு மீள முடியாத ஒடுக்கு முறைக்குள் ஈழத்தமிழர்கள் தள்ளப்படுவதற்கும் ஆதாரமாக அமைந்தது என்பதுதான்…

சாந்தன் போன்றவர்களின் இயற்கை மரணத்திற்கு பாடை கட்டி அழும் இயல்பான நடவடிக்கையைக் கூட நிராகரிக்கும் அளவிற்கு தெளிவான அரசியல் பார்வையை பலருக்கு ஏற்படுத்தியிருக்கின்றது

அந்த வகையில்தான் இந்த இயற்கை மரணம் அதிகம் பாடையில் வைத்து அழுது கொண்டாடப்பட வேண்டியது அல்ல. மாறாக உலகில் வாழ்ந்து காந்தியைக் கொன்று மடிந்த கோட்சே போன்றவர்களின் மரணம் போல்தான் பார்த்தாக வேண்டும்

2009 மே மாத்திற்கு பின்னர் அரசியலுக்கு வந்த சீமானுக்கு இம்மாதிரியான மரணங்களை அரசியலாக்கும் தேவைகள் இருக்கின்றது.அவருக்கான சில ஈழத் தமிழர்களின் டாலர்களின் வருகைகளை நிறுத்தப்படாமல் தொடர வேண்டிய தேவை அவருக்கு உண்டு.சினிமாவில் அதிகம் வருவாய் இல்லை அதனால் வருவாயை பெற அரசியலுக்கு போனார் என்ற அவரின் ஒளி ஒலிபரப்பு இடுகையின் உண்மைத் தன்மைக்கு இந்த டாலர்கள் வலுச் சேர்க்கும்.

திருமாவின் நிலை இன்று அவ்வாறு இல்லை. நீங்கள் சிறுத்தை என்று சிலிர்த்த காலம் போய் சமூக நீதி இட ஒதுகீடு இந்தியா கூட்டணி அடுத்த மாநிலங்களில் கூட்டங்களில் பேசுதல் வேட்பாளர்களை நிறுத்துதல் என்று இந்திய அளவில் அரசியல் செய்யும் நீங்கள்…. திமுக கூட்டணியில் முக்கிய தூண்களாக நிற்கும் நீங்கள்… தி காந்தி போல் உங்களை சிறுமைப்படுத்திய அரசிலை செய்தாதீர்கள்

சாந்தன் செய்த கொலைதான் இன்று இந்தியா கூட்டணி என்று பாஜகவை வீழ்த்துவதற்கு படாத பாடு படுத்தும் நிலையை ஏற்பட்டது என்ற அரசியலை நன்று ஆழ்ந்து பார்த்து புரிந்து கொள்ளும் அரசியல் அறிவுடையவர் நீங்கள்.

சாந்தன் தான் செய்த குற்றத்திற்கு ராஜிவ் கொலையில் தீர விசாரிக்கப்பட்டு தண்டனையை முழுமையாக அனுபவித்து விடுவிக்கப்பட்டவர். அவரை ஏதும் செய்யாத புனிதராக காட்ட முயலுவது வரலாற்றுத் திரிபு

அவருடன் அவரது கொள்கைகளுடன் பயணித்தவர்கள் அஞ்சலி செலுத்துவது இயல்பானது.

மகனை இழந்து நிற்கும் தாயின் துயரத்திற்கு யாரும் ஆறுதல் சொல்லி தேற்றமுடியாது.

இந்த வகையில் சாந்தனை இலங்கை அழைத்துவர அவரது குடும்பத்தினர் பல வகையில் முயன்றதையும், அதில் ஒரு அங்கமாக டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்ததையும் பார்க்க முடியும்.

ஈழத்தில் முடிவுற்றதோ கொடிய யுத்தம்.

சகல விடுதலை அமைப்புகளில் இருந்தும் போராடச் சென்று மரணித்த, காணாமல் போன, சிறையில் வாடிய. நீண்ட காலம் சேர முடியாது பிரிந்திருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட, ஆயிரக் கணக்கான உறவுகளின், பெற்றவர்களின் மன உளைச்சல்கள் ஆற்றுப்படுத்த முடியாத அளவிற்கு பாரியன.

இதில் புலிகள் தவிர்ந்த மாற்று இயக்க போராளிகளின் வலிகளும் கருத்தில் எடுத்தாக வேண்டும்

ஒரு பொறுப்புள்ள சமூகமாக நாம் மாற இந்த உறவுகளை எவ்வாறு அணுகலாம் என்று சிந்திப்பதற்கு பதிலாக, உண்மைத் தகவல்களை மறைத்து திரித்து அவர்களை மேலும் மேலும் மன உழைச்சலுக்கு உள்ளாக்குவது அறம் சார்த்த செயற்பாடு அல்ல

நாற்காலிக் கனவுகளில் மிதக்கும் மக்கள் நலன்களை முதன்மைப்படுத்தாத அரசியல் வியாபாரிகள் மரணத்தை வைத்து உசுப்பேத்தல்களைச் செய்ய முற்படுவர். இதனை நாம் இனம் கண்டு கண்டித்தாக வேண்டும்

இதில் யாழ் பல்கலைக் கழகத்தின் ஒரு பிரிவினரும் இணைந்து கெடு குடி அரசியல் செய்வது எமக்கு ஒன்றும் வியப்பானதல்ல.

இந்த தகவல்களை திரித்துப் பார்க்கும் அரசியலுக்குள் சமூக நீதி மதச்சார்பின்மை பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுகீடு என்றாக பயணிப்பதாக சொல்லப்படுபவர்கள் இணைந்து கொள்ள வேண்டாம்.