இறுதி நொடி! இறுதி வெடி!

நிலம் பூராவும் எதிரிகள். கந்தக மணம். சிறுபற்றைகள். அவற்றுக்கப்பால் நம் நிலம் பூராயும் எதிரிகள். எதிரிகள் பேசும் சத்தம் கேட்கிறது.

வானம் வெளித்ததும் அவர்கள் முழுமையாக பிடித்துவிடுவார்கள். சிலவேளை இறுதியாய் இருப்பது நாம் இருவராக இருக்கலாம்.

எங்கள் தரப்பின் துப்பாக்கி வேட்டுகள் பூராகவும் ஓய்ந்துவிட்டது.

திடீரென ஏற்பட்ட புவி அதிர்வில் உதிர்ந்த கோட்டைபோல் ஆகிவிட்டது எங்கள் தேசம்.

அருகே கபிலன். அவன் கட்டாய ஆட்சேர்ப்பில் வந்த பிள்ளை. ஆனால் கடைசிவரை என்னோடு வந்துவிட்டான். நீ போய்விடு என்றால் அடம்பிடித்துவிட்டான். என்னோடு ஒரு வருடமாகத்தான் இருந்தான். சரணடைய மறுத்தேவிட்டான். எத்தனையோ போராளிகளை சந்தித்தேன். இவன் வாழ வேண்டிய பிள்ளை. ‘அண்ண உங்களுக்கு என்ன முடிவோ அதுவே எனக்கும்’ என்கிறான். கபிலன் அறிவான பிள்ளைகூட. ஒரு முழுமையான போராட்ட வாழ்வில் என் இறுதி கணம் கபிலன் அருகில் முடியப்போகிறது. எம்மை உயிரோடு எதிரி பிடிக்க முடியாது.

இரண்டு குப்பிகள், இரண்டு கைத்துப்பாக்கி. இதுபோதும்.

நளாவும் வீரச்சாவு என்று அறிந்தேன். அவளை இந்த இறுதி நேரத்தில் நினைக்கவேண்டும். என் மனம்போல இருந்தாள். பிள்ளைகளை உறவுகளுடன் விட்டுவிட்டு களமுனையில் கடைசிவரை நின்ற தாயாக நளா இருப்பாள். அது யாருக்கும் தெரியாமல் இருக்கட்டும்.

நானே ஒருமுறை, ‘நீ பிள்ளைகளோடு வெளியேறு’ என்றபோது, மறுத்துவிட்டு கோள்சறோடு களமுனை சென்றாள்.

அன்பு நளா! உன் திண்மை என்னிடம் இல்லை. உனக்கு என் நன்றி. உன் உடல் எங்கிருக்கிறதோ நானறியேன். ஆனால் இந்த நிலத்தில் மிக அருகில் எங்கோ வீழ்ந்திருப்பாய். சூரியன் வரமுதல் உன்னை என் ஆன்மா சந்திக்கும். மறுமுறை பூரண வாழ்வுகிடைத்தால் உன்னோடு வாழவேண்டும்.

ஓ.. என் பிள்ளைகள்! ஆகரன்! சிந்துசை! நீங்கள் இப்போது வவுனியா அகதி முகாமில் இருப்பீர்கள். என் பிள்ளைகள் என்று இராணுவம் கண்டுபிடிக்காமல் இருக்கவேண்டும்.

ஆனால் அப்பாவையும், அம்மாவையும் நினைத்தபடியே இருப்பீர்கள். உங்களை அனாதையாக்கிவிடப்போகிறோம். இந்த பாவப்பட்ட பெற்றோரை மன்னியுங்கள்.

எப்போதும் உங்களை பேரன்போடு வருடும் உங்கள் அம்மா நேற்று மாலை இறந்துவிட்டார். உங்கள் அப்பா இன்னும் சிறிது நேரத்தில்.

அப்பா, அம்மாவின் கனவுகளை மறக்க மாட்டீர்கள். எப்படியும் உங்களை என் தம்பி லண்டன் அழைத்துவிடுவான். நீங்கள் உறுதியோடு வளருங்கள். நம் மக்கள் உங்களை கைவிடமாட்டார்கள். அந்த நம்பிக்கையில்தான் நாம்போகிறோம்.

ஓ.. எத்தனை தியாகங்கள்? எத்தனை உயர்ந்த வீரபுருசர்கள்? எத்தனை தியாகங்களால் தேசம் உருவானது. இதோ.. இதோ.. எல்லாம் முடியப்போகிறது. இந்த முடிவு வேறொன்றின் தொடக்கம் ஆகலாம். ஆனால் இந்த உலகு அதர்ம அச்சிலே சுழல்கிறது.

விடமாட்டார்கள்! எங்கள் மக்கள் விடமாட்டார்கள்! நம் தமிழக உறவுகள் கொதித்தெழுவார்கள்!புலம்பெயர் உறவுகள் சேர்ந்தெழுவார்கள்.

இந்த இழப்பு. இன்னொன்றை பிறப்பிக்கும். நிச்சயம் நம் மக்களின் கொடிய வாழ்வு முடிவுக்கு வரும்.

எங்கள் மக்களே! சென்று வருகிறோம். மண்ணே! உன் மடியில் நீண்ட ஓய்வெடுப்கப்போகிறேன்.

‘’கபிலன்! கபிலன்! வானம் வெளிக்கிறது.. தயாராகு… இதோ நான் தயாராகிவிட்டேன். குப்பியை வாயில் கடித்ததும் காதுக்குள் பிஸ்ரலால் சுட்டுவிடு. அடுத்த நொடி உடல் மட்டும் மிஞ்சும்.’’

மண்ணே என்னை தின்றுவிடு.

இருவரும் தயாரானார்கள்.

குப்பி கொடுப்பில் வைக்கப்பட்டது.

வலக்கையில் இருந்த பிஸ்ரல் காதோரம் வந்தபோது, இடக்கை அருகே இருந்த அறுகம்புல்லோடு சேர்ந்த தாய்மண்ணை அள்ளி நெஞ்சில் வைத்துக்கொண்டு தளபதி ஜெயம் 1994இல் தலைவரால் மீண்டும் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை தன் காதோரம் வைத்து விசையை அழுத்தினார்.

பட்ட்டீர்ர்…. பட்ட்டீர்ர்..!

‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்‘ என்று கூற அதன் பிறகு அந்த நிலத்தில் யாரும் இருக்கவில்லை.