இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics)பகுதி – 4

ஆனால், பரந்துபட்ட பொது மக்களின் நலன் கருதியும், பொருளாதாரரீதியில் பலயீனமான நிலையில் இருக்கும் மக்களின் நலன் கருதியும் அரசாங்கம் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற துறைகளிலும், அடிப்படையான உற்பத்தித் தொழிற் துறைகளின் அபிவிருத்தியிலும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகப்பிரதானமானவை எனவும், அத்துடன் சமூக பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொருளாதார விடயங்களில் அரசாங்கமே பொறுப்போடு செயற்பட வேண்டும் எனவும், மேலும் தொழிலாளர் பாதுகாப்பு, அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்தல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, போன்ற விடயங்களை கவனிப்பது அரசாங்கத்தின் கடமை எனவும் வலியுறுத்தப்படுவதை அனைத்து நாடுகளிலும் காணலாம்.

நவதாராளவாதியான ரணில் அவர்கள் 2015ம் ஆண்டு பிரதமரான போது தமது பொருளாதார கொள்கையானது சமூகம் சார் சந்தைப் பொருளாதாரக் கொள்கை என்றார். இப்போது ஜனாதிபதியாக ஆன போதும் அதனையே கூறுகிறார். ஆனால் அதன் முழுமையான உள்ளடக்கங்கள் என்ன, அதன் உண்மையான அர்த்தம் என்னவென்று இன்னமும் அவர் தெரிவிக்கவில்லை.

அவர் அந்நியச் செலாவணி நெருக்கடி நிலைமையின் காரணமாக இறக்குமதிகளை அவசியங்களின் அடிப்படையில் கட்டுப்பாடாக மேற்கொள்வதற்கு லைசன்ஸ் மற்றும் பெர்மிட் முறையை அறிவித்திருக்கிறார்.

இன்றைய நிலையில் இறக்குமதிகளை கட்டுப்பாடாக அனுமதிப்பதுவும் முறைப்படுத்துவதுவும் தவிர்க்க முடியாததெனினும் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது முக்கியமானதாகும். அதற்கு சட்டபூர்வமானதும் வெளிப்படையானதுமான ஒரு பொறி முறையை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதே சரியாகும்.

ஜனாதிபதி அறிவித்திருக்கும் முறையானது லைசன்ஸ் அல்லது பெர்மிட் ராஜ்யம் ஒன்றினை ஆக்கும் முயற்சியையே காட்டுகிறது. இது லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளையே பெருக்கும். ஏற்கனவே ஏற்றுமதிகளிலும், இறக்குமதிகளிலும் துறைமுகங்களிலும் வியாபார மற்றும் முகவர் மாபியாக்கள் நிறைந்துள்ளன.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள லைசன்ஸ் மற்றும் பெர்மிட் முறையானது
அரசாங்கத்தின் ஆதரவாளர்களாக உள்ள வர்த்தகர்களுக்கு வசதிகளையும்
வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகவே அமையும் என்பதோடு லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் மேலும் பல மடங்காக அதிகரிப்பதற்குமே வழிவகுக்கும். அத்துடன் இறக்குமதியாளர்கள் தமது விருப்பத்திற்கேற்ப பொருட்களின் விலைகளை கட்டுப்பாடற்ற ரீதியில் உயர்த்தி கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கும் ஊக்கம் அளிக்கும்.

13. பொருட்களின் வியாபாரங்கள் தொகைரீதியாக மிகவும் குறைந்திருந்தாலும் வர்த்தகர்களின் இலாப உழைப்பு குறைந்திருக்க வாய்ப்பே இல்லை என சந்தை நிலவரங்களோடு தொடர்பு பட்டிருக்கும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஏனென்றால், அவர்களுக்கு விலைக் கட்டுப்பாடு என்று எதுவும் இல்லை.
வர்த்தகர்கள் அன்றன்றைக்கு எந்த விலைக்கு எந்தப் பொருளை விற்றால்
வியாபாரமாகும் என கருதுகிறார்களே அந்த விலைக்கே வியாபாரங்கள்
நடக்கின்றன. இந்த விடயத்தில் வியாபாரிகளுக்கிடையில் ரகசியக் கூட்டுகள் செயற்படுகின்றன என்றே தெரிகிறது.

அரசாங்கம் கட்டுப்பாட்டு விலை என்று சிலவற்றிற்கு அறிவித்திருந்தாலும் அந்த விலைகளில் வியாபாரங்கள் நடைபெறுவதில்லை.

நுகர்வோரின் நலன்களை சட்டப்படி பாதுகாக்க வேண்டிய நுகர்வோர் அதிகார சபை என்ற ஒன்று செயற்பாட்டில் இல்லை எனும் வகையான ஒரு நிலைமை காணப்படுகின்றது. அதனால் பொருட்களின் விற்பனை விலை தொடர்பாக வியாபாரிகளுக்கு எந்தவொரு நெருக்குதலோ கட்டாயமோ இல்லை என்னும் வகையாக அரசாங்கம் வர்த்தகர்கள் விடயத்தில் மிகத் தாராளமாகவே நடந்து கொள்கிறது.

இந்த தாராளங்களுக்கு மாற்றுப் பரிசுகளாக லஞ்சங்களும் ஊழல் மோசடிகளும் பல்வேறு அரச மட்டங்களிலும் நடைபெறுகின்றன என்பதனை புரிந்து கொள்வதொன்றும் சிரமமில்லை. ஆனால் அவை எங்கெங்கே என்னென்ன அளவில் எந்தெந்த அரசாங்க பிரிவினரோடு நடைபெறுகின்றன என்று அக்கறை கொண்டுள்ள சமூக அவதானிகளால் கூட தெரிந்து கொள்ள முடியவில்லை.

அந்தளவுக்கு அவை உயர்மட்ட விவகாரங்களாக உள்ளன. இவை தொடர்பாக சமூக நிறுவனங்களால் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலைமையே இங்கு உள்ளது. 2022ல் 3 தடவைகள் நிதி அறிக்கைகள் 2023க்கும் அதே கெதியோ!

14. நிதி அமைச்சராகவும் இருக்கின்ற ஜனாதிபதி கடந்த ஆகஸ்டில்
பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 2022ம் ஆண்டுக்கான குறை நிரப்பு நிதி
அறிக்கையில் இந்த வருடம் முழுவதுக்குமான அரச செலவு 4,42,700 கோடி
ரூபாக்களாக இருக்கும் என்றும், அரசாங்கத்தின் வருமானம் 2,10,000
கோடிகளாக இருக்கும் என்றும் மிகுதி சுமார் 2,35,000 கோடி ரூபாக்களை
உள்நாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்தும், திறைசேரி உறுதிப் பத்திரங்களை வழங்கியும், மத்திய வங்கியிடமிருந்தும், மற்றும் வெளிநாடுகளிடமிருந்தும் கடனாகப் பெறுவதாகவும் கணக்குக் காட்டியிருக்கிறார். ஆனால் அவ்வளவுக்கு வருமானமும் வராது: அவ்வளவுக்கு கடனும் பெற முடியாது.

 இனி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதமளவில் மத்திய வங்கியினால் வெளியிடப்படும் ஆண்டறிக்கை வரும் பொழுதே முழு உண்மைகளும் தெரியவரும். புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மறைமுக வரிகளையும் சரி, வருமான வரிகளையும் சரி அறிவித்துள்ள அளவுக்கு அறவிடுவதற்கு இன்னமும் தொடங்கவே இல்லை.

அதேவேளை, அரசாங்கம் செலவிட உள்ளதாக கூறிய சில சமூக பாதுகாப்பு செலவுகள் இன்னமும் நடைபெறவில்லை. அரசாங்கம் எதிர்பார்த்துள்ள அளவுக்கு இந்த ஆண்டுக்கான வருமானம் கிடைக்கப் போவதில்லை என்பதோடு, வெளிநாட்டுக் கடன்களுக்காக இந்த ஆண்டு கொடுக்க வேண்டிய வட்டியையும், இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் முதலையும் திருப்பிச் செலுத்துவதற்கும், அத்தியாவசியமான இறக்குமதிகளுக்கும் தேவையான அந்நியச் செலாவணிக்காகவும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற முடியாத நிலையில் இருக்கிற அரசாங்கம், தனது வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுகட்ட யாரிடமிருந்து வெளிநாட்டுக் கடனைப் பெறப் போகிறது? உள் நாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து போதிய அளவுக்கு கடன் பெறுவதற்கான வாய்ப்பும் மிக மிகக் குறைந்ததாகி விட்டது. அரசின் திறைசேரி பத்திரங்கள் மீது முதலிடுவோரும் அரசின் மீது நம்பிக்கை இழந்த நிலையில் உள்ளனர்.

உள்நாட்டில் பெற்ற கடன் தொகை ஏற்கனவே 12 லட்சத்து 50 ஆயிரம் கோடி
ரூபாவைத் தாண்டி விட்டது. வட்டித் தொகையாக இந்த ஆண்டு அரசாங்கம் செலுத்த வேண்டிய பண அளவு சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாக்களாகும். இந்த நிலையில் பண நோட்டுகளை அச்சடிப்பதனை
அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகும்.

இந்த ஆண்டு துண்டு விழுந்துள்ள பற்றாக்குறையை சமாளிக்க
சத்தமெதுவுமின்றி 90 ஆயிரம் கோடி ரூபாக்களுக்கு மேல் அச்சடித்து
விட்டார்கள்.

ராஜபக்சாக்களின் ஆட்சி 2020 ஜனவரி தொடக்கம் 2022ம் ஆண்டு மார்ச் வரையான காலகட்டத்தில் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாக்கள் பணத்தை அச்சடித்தனர். மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால் வீரசிங்க அவர்கள் பதவியேற்று 6 மாதத்தில் சுமார் 70000 கோடி ரூபாக்களை அச்சடித்து விட்டதாக பொருளியல் நிபுணர்கள் கணக்கொன்றை வெளியிட்டுள்ளனர். அடுத்த ஆண்டு அரசாங்கம் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடி அளவுக்கு பணத்தை அச்சடிக்கும் போலத் தெரிகிறது. ஆக மொத்தத்தில் பொருட்களின் விலையேற்றமும் பணப் பெறுமதியின் இறக்கமும் ஒரு தொடர் கதைதான் என்பது நிச்சயமாகிறது. வளர் நெருப்பாய் உயரும் வட்டிக் கடன்

15. இலங்கை இந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய சுமார் 6
பில்லியன் டொலர்களில் ஒரு சிறு தொகை மட்டுமே கொடுக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் அரசு இலங்கையை வங்குரோத்து நாடு என அறிவித்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கு வட்டியாகவும் திருப்பிச் செலுத்த வேண்டிய முதலாகவும் கொடுக்க வேண்டியவற்றை கொடுக்கவில்லை. மார்ச் மாத முடிவில் இலங்கையின் மொத்த வெளிநாட்டுக்கடன் கிட்டத்தட்ட 50 பில்லியன் டொலர்களாகும்.

இந்த ஆண்டு முடிவில் இத் தொகை 55 பில்லியின் டொலர்களைத் தாண்டி விடும். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்தால் இந்தியா, யப்பான் மற்றும் மேலைத் தேச நாடுகள் அடுத்த ஆண்டு ஓரளவு கடன் கொடுக்கக் கூடும்.

அதற்கும் இந்த நாடுகள் ஏற்கனவே கொடுத்த கடன்கள் தொடர்பாக ஒரு திருப்தியான மறுசீரமைப்பு உடன்பாடு ஏற்பட வேண்டும். அது இன்னமும் நடைபெறவில்லை. இதனால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கூட இவ்வாண்டு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

சீனாவோ தனக்கு தர வேண்டிய வட்டியையும் இந்த ஆண்டு திருப்பிச் செலுத்த வேண்டிய முதலுக்காகவும் கிட்டத்தட்ட 2 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு புதிய கடனாக தரத் தயாராக இருக்கிறது. ஆனால் இதன் மூலம் இலங்கைக்கு அந்நியச் செலாவணியாக பணம் எதுவும் வரமாட்டாது.

புத்தகத்தில் பழைய கடன் அழிக்கப்பட்டு புதிய கடனாக எழுதப்படும். இந்தப் புதிய கடனை என்ன வட்டியில் பெற வேண்டி இருக்குமோ என்ற பிரச்சினையும் அத்தோடு இது சீனாவுக்குக் கொடுக்க வேண்டிய மொத்தக் கடனை மேலும் அதிகரிக்கும் என்பதனாலும், அரசாங்கம் இது தொடர்பாக வாயே திறக்காமல் இருக்கின்றது.

சீனாவுக்கான கடன் தொடர்பான மறுசீரமைப்புத் திட்டம் இந்த நிலையில் இருக்க. இந்தியா எவற்றிற்கு உடன்படும் என்பது இன்னமும் வெளிவரவில்லை. இந்த நிலையில் அடுத்த ஆண்டு வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பாக இலங்கை பெரும் நெருக்கடிகளைச் சந்திக்க உள்ளதே தவிர ஒரு கணிசமான அளவுக்குக் கூட வெளிநாடுகளிடமிருந்து கடன் வாங்கக் கூடிய எந்த நிலைமையையும் இதுவரை காணவில்லை. இது பற்றி மக்கள் எதுவுமே அறிந்து விடாதபடி அரசாங்கம் எல்லாவற்றையும் கமுக்கமாக அமுக்கி வைத்திருப்பதில் மிகவும் கெட்டித் தனமாகவே செயற்படுகிறது.

(பகுதி 5ல் தொடரும்)