உடைக்கிறது தேங்காயவா? இல்லை மகிந்தவயா?

பாவியள் எப்பிடி இருந்த மனுசனை இப்பிடி ஆக்கிப்போட்டு திரும்பவும் விடுறாங்கள் இல்லை. சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை எண்டுற மாதிரி மகிந்தருக்கு சில வலக்கையள்.அதுகள் மகிந்தருக்கு தேங்காய் உடைச்சு ஆட்சி பிடிச்சு குடுக்கப் போகினமாம். என்னவொரு அறிவு. சும்மா சொல்லப்படாது. மகிந்தரைச் சுத்தி அப்பிடி அறிவான கூட்டம். கூட்டம் எண்டால் இரண்டு மூண்டு பேர்தான். ஆனால் பெரிய கூட்டம் மாதிரி சவுண்டு கேக்கும். ஆரால் கேடு, வாயால் கேடு எண்டுற மாதிரி. ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரிலை தேங்காய் உடைக்கப் போறம் எண்டுறினம். உடையுங்கோ! உடையுங்கோ! ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி எண்டுற கதைதான் மகிந்தருக்கு.


மகிந்தவை ஒரு வழி பண்ணாமல் விமலும் உதய கம்பன்பிலவும் ஓயமாட்டினம் போல கிடக்குது. சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி எண்டுற மாதிரி சங்கு ஊதுறதிலை நல்லாய் தெளிவாய்தான் இருக்கினம். புதுக்கட்சி புதுக்கட்சி எண்டு மகிந்தவை உசுப்பேச்சினம். அவரும் தான் விரும்பேல்லை மக்கள் புதுக்கட்சியை விரும்புறினம் எண்டார். போன ஜனாதிபதித் தேர்தலிலை மக்கள் மகிந்தவை விரும்பேல்லை. இப்ப அவர் புதுக்கட்சி உருவாக்கவேணும் எண்டு விரும்புறினமாம். ஏனெண்டால் சனங்கள் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கினம்தானே?

அதாலை மகிந்தவின்டை புதுக்கட்சியை எதிர்பாக்கினமாம். என்னத்துக்கோ பறந்து இருக்கிறதும் இல்லாமல் போகப்போகுது. கொஞ்சப்பேரை உடைச்சுக்கொண்டு போற கனவிலை இருக்கிறாராம் மகிந்தர். உந்த விமல் மின்சாரக் கதிரையிலை மகிந்தரை இருத்த முதல் சுதந்திரக் கட்சியின்டை விசாரணைக் கதிரையிலை இருத்த வைக்க முயற்சிக்கிறார் போல. நிலமை அப்பிடித்தான் போகுது. ஓ.. கட்சிக்கு எதிராக செயற்பட்ட கேசிலை மகிந்தருக்கு விசாரணை நடக்குமாம். உறுதி செய்தால் கட்சியிலை இருந்து நீக்குவினமாம். மகிந்தரை இல்லாமல் பண்ண ஒருத்தரும் வேண்டாம். விமலும் உதயகம்மன்பிலவும் காணும். உவங்கள் தேங்காயை உடைக்கிறாங்களே? மகிந்தவை உடைக்கிறாங்களே?

– யாழ்ப்பாணத்தம்பி –