காஷ்மீர் இடைத்தேர்தல் காட்டும் நிதர்சனம்!

காஷ்மீரின் ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் ஏப்ரல் 9-ல் நடந்த இடைத்தேர்தலில், போராட்டக்காரர்களின் வன்முறை காரணமாக வெறும் 7% வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர். 130-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, ஏப்ரல் 12-ல் நடக்கவிருந்த அனந்த்நாக் தொகுதி இடைத்தேர்தலைத் தள்ளிவைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். நகர் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழல் இல்லை எனும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையைப் புறந்தள்ளிய தேர்தல் ஆணையம், அனந்த்நாக் தொகுதியில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை இருப்பதாக மாநில நிர்வாகம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இப்போது அந்தத் தொகுதியில் தேர்தலைத் தள்ளிவைத்திருக்கிறது.

ஸ்ரீநகர் சம்பவத்தின் பின்னணி என்னவாக இருந்தாலும், முடிவில் பெரும்பாலான வாக்காளர்கள் வாக்குச்சாவடி பக்கமே வராத அளவுக்கு மிக மோசமான வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒரு வாக்குச்சாவடி தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, பெரும்பாலான வாக்குச்சாவடிகள் மூடப்பட்டன. ஆட்சி மாற்றத்துக்குச் சாத்தியம் உள்ள பொதுத் தேர்தல்களுக்குத் தரும் முக்கியத்துவத்தை, இடைத்தேர்தலுக்கு வாக்காளர்கள் தருவதில்லை. வாக்காளர்களைப் பொறுத்தவரை, அரசியல் விளைவுகளைக் காட்டிலும் ஆபத்துகளைத் தவிர்ப்பதே முக்கியமான விஷயம்.

கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் வாக்குப் பதிவு விகிதம் அதிகமாகவே இருந்துவந்த நிலையில், நகர் இடைத் தேர்தல் வாக்குப் பதிவில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி தற்போதைய அரசியல் சூழலை எடுத்துக்காட்டுகிறது. கடந்த ஜூலை மாதம் ஹிஜ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதியாக இருந்த புர்ஹான் வானி கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, காஷ்மீரில் தொடங்கிய வன்முறைச் சம்பவங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதையே கல்வீச்சு சம்பவங்களும், பெல்லட் குண்டு துப்பாக்கிச் சூடுகளும் உணர்த்துகின்றன. இதுபோன்ற தருணங்களில் இடைத்தேர்தல்களுக்கு எந்த விதமான அரசியல் அர்த்தமும் இல்லை.

ஏப்ரல் 13 அன்று மறு தேர்தல் நடந்த 39 வாக்குச் சாவடிகளில் இரண்டு சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இத்தேர்தலில் அம்மாநிலத்தின் வரலாற்றிலேயே மிகவும் குறைவாக வாக்குகள் பதிவாகியிருப்பது, அக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

ஏப்ரல் 15 அன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், நகர் தொகுதிக்கு ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா வெற்றிபெற்றிருக்கிறார். மாநிலத்தை ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இது பின்னடைவு என்றே கருதப்படுகிறது. அதேநேரத்தில், இந்த அளவுக்கு வாக்குப் பதிவு குறைந்திருப்பது ஆளும் கட்சிகள், அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தியின் சமிக்ஞை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மத்தியிலுள்ள பாஜகவின் கூட்டணி அரசே மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் சூழலில், இந்த விவகாரத்தில் பாஜகவுக்குக் கூடுதலான பொறுப்புகள் உண்டு. காலம் மட்டுமே மக்களின் காயங்களை ஆற்றிவிடாது. அரசின் அணுகுமுறை அதைச் செய்யும்!

(The Hindu)