குடிகளிலாக் கோயில்களும் குருட்டுத்தனங்களும்.

ஊருக்குப்போனாய் ஒன்றுமே சொல்லவில்லையே என்று அங்கலாய்ப்பவர்களுக்கு “என்னத்தைச் சொல்வது ?” என்பதைத் தவிர வேறு எதைச் சொல்லமுடியும். வாய்திறந்தால் வம்பை விலைக்குவாங்குவது உனக்கு இடப்பட்சாபம் என்று சின்ன வயதில் யாரோ சொன்னதும் ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது.

முதலில் ஒரு விடயத்தை தெளிவாக்கவேண்டும். சாதாரண கேள்விதான்: நான் கடவுளை நம்புபவனா ?. ஆமாம் என்பதே உறுதியான விடை. இறைவழிபாடு என்பது ஆத்மீக அனுபவங்களின் அடிப்படையில் பிரக்ஞை”பேரிருப்புடன்” ஏற்படுத்திக்கொள்ளும் சந்திப்பும் சங்கமமுமே என நான் நம்புகிறேன். எந்த மதங்களின் தேவையும் அற்ற, குருக்களோ வழிகாட்டிகளோ அன்றில் இடைத்தரகர்களோ அற்ற இறைவழிபாடு சாத்தியமானது மாத்திரமல்ல அதுவே சிறந்ததும் என் நான் நம்புகிறேன்.
அப்படியானால் மதங்கள் ?
அவற்றை மருத்துவத் தேவைக்கு வேண்டுமானல் சிறிய அளவில் பயன்படுத்தலாம் என்பதே என் அபிப்பிராயம். மதங்களை அச்சமூட்டுவதற்கான, அரசியலுக்கான கருவிகளாக பயன்படுத்தியவர்களின் உளவியற் பொறிமுறை உலகின் எல்லாப் பாகங்களிலுமே வலுவுற்றுத்தான் இருக்கிறது.

ஆனால் என் கிராமத்திலோ அது “குருட்டுத்தனத்ததின்” குறியீடாகி விட்டது. பெருமளவிலான குடியானவர்கள் வெளிநாடுகளில் வாழ்வதால் வெறுமையுற்றிருக்கும் ஒரு கிராமத்தில் கோயில்களின் எண்ணிக்கையும் அதன் அபிவிருத்தியும் சகிக்க முடியாத அளவு பெருகியுள்ளது. கோவில்களுக்காகக் கொட்டப்படும் பணம் அந்தக் கிராமத்தின் எத்தனையோ அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படலாம்.
உபயம் செய்து கடவுளிடம் அபயம் கோருவோர் கடவுளை ஒரு வியாபாரியாகவோ அல்லது அரசியல்வாதியாகவோதான் அறிந்திருக்கவேண்டும். வேறு வகையான கடவுள்களை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அறிவுத்தேடலும், ஆன்மீக அனுபவமும்தான் மனிதரைக்கடவுளிடம் அழைத்துச் செல்லும் என்ற ஞானம் சுவடின்றி அழிந்து போய்விட்டது. அறிவு புகட்டப்படவேண்டிய பாடசாலைக்குள் எல்லாம்தற்போது கோவில் கட்டுகிறார்கள்.

ஊருக்குப் போனேன். கிட்டத்தட்ட வெறுமையாக்க கிடக்கும் என் கிராமத்தின் கோவில்களுக்கெல்லாம் கோடிக்கணக்கில் செலவழித்து உயர்ந்த கோபுரங்கள் கட்டியிருக்கிறார்கள். கோவில்கள் விஸ்தீரணம் அடைந்து கொண்டேயிருக்கிறது. புதிய கோபுரங்கள் எழுந்துகொண்டேயிருக்கின்றன. இந்தியாவிலிருந்து கலைஞர்களும், உபகரணங்களும் வந்து குவிகின்றன.

நான்படித்த வேலணை மத்திய மகாவித்தியாலத்தின் உள்ளே பல இலட்சம் செலவில் கோவில் நிர்மாணிக்கப்பட்டு “கும்பா அபிசேகமும்” செய்யப்பட்டது. அறிவு புகட்டுவதற்கான உயர் பீடத்தின் எல்லைக்குள் கோவில் கட்டுவது கல்வியூட்டலின் அடிப்படை நிபந்தனையையே தகர்த்துவிடுகிறது. நான் அந்தப்பக்கமும் தலைகாட்டவில்லை. வேதனையாக இருந்தது. ஆனால் யாருக்கும் அது தொந்தரவான விடயமாக இருப்பதாகவும் படவில்லை. என்னை நான் அந்நியனாய் உணர்ந்தேன்.

முப்பது வருட யுத்தத்தின் பின்னரும், இத்தனை பெறுமதி மிக்க உயிர்களின் இழப்புகளுக்குப் பின்னரும் என் சமூகம் எந்தப்பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை உணரும்போது வேதனையாக இருக்கிறது.

(Vasu Devan)