கொஞ்சம்தான் நீளம். படித்துவிடுங்கள்…

புரட்சி முடிந்து

ரஷ்யாவில் போல்ஷிவிக்குகளின் அரசாங்கம்.

பக்கோமோவ் ஒரு விவசாயி.

புரட்சித்தலைவர் லெனினைப் பார்த்தே ஆகவேணுமென்று
மாஸ்க்கோவிலிருந்த அவரது ஸ்மோல்னி அலுவலகத்துக்கு
வந்தேவிட்டார்.

“கூப்பிடுவாங்க …இப்படி உக்காருங்க…”
என்று ஒரு நாற்காலியில் உட்காரவைத்தாள்
செயலாளப் பெண்.

‘லெனினைப் பார்க்காமல் இந்த இடத்தைவிட்டு நகரக்கூடாது…’
பக்கோமோவ் கண்ணில் பட்டது அந்த வாசகம் :
‘இங்கே புகை பிடிக்கக்கூடாது’

கோட்டுப் பையிலிருந்து உறையை எடுத்தார். நிதானமாக சிகரெட் தாள் ஒன்றை எடுத்து நன்றாக நீவிவிட்டு
அதில் கொஞ்சம் புகையிலைத் துளை விரவிச் சுருட்டி, உருளையின் ஒரு ஓரம் நாவினால் எச்சில்படுத்தி மூடினார். சிகரெட்டை பற்ற வைத்து – நாற்காலியில் சரிந்து உட்கார்ந்து புகையை ஆழமாக உள்ளிழுத்து விட…

எதிரே வந்து நின்ற ஒருவர்…”மன்னிக்கணும் ?”

“மன்னிச்சுட்டேன்.சொல்லுங்க…” என்று அவர் முகத்தில் புகையை ஊதினார் பக்கோமோவ்.

“அங்கே என்ன எழுதி இருக்குதுன்னு பார்த்தீங்களா?”

“பார்த்தேன் பார்த்தேன்”

“அப்புறம் எதற்காகப் புகை பிடிக்கிறீங்க?”

“நம்ம நாட்டில எத்தனையோ சட்டங்கள் இருக்குது.
அதுல பாதியக் கடைப்பிடிக்கனும்னு ஆரம்பிச்சாக்கூட
ஆயுசு முடிஞ்சிடும்.”

“ ஒத்துக்கறேன். ஆனா நிறைய கெடுபிடிச் சட்டம் இருந்தது பழைய ஆட்சியில. இப்ப இருக்கிறது புது ஆட்சியில்லையா?”

“ஆமாம், புது ஆட்சி ….”
பேச்சை முடிக்காமலேயே பக்கோமோவ்
சிகரெட்டை அனைத்து பத்திரமாகப்
புகையிலை உறையில் வைத்துக் கொண்டார்.

“இது எப்படி… நல்ல அரசாங்கமா, கெட்ட அரசாங்கமா? உங்களுக்கு என்ன தோணுது ?”

“நல்ல அரசாங்கமாத்தான் தோணுது. எல்லாருக்கும் நிலம் விநியோகம் பண்றாங்கள்ல? ஆனா இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கணும்னு நெனைக்கிறேன்…”

வந்தவர் சிரித்தபடி போக –

கொஞ்சம் நேரம் கழிந்தது.
பொறுமை இல்லாத பக்கோமோவ்
லெனினின் அறைக்குள் நுழைந்தேவிட்டார்.

அங்கே-

சிகரெட் பிடிக்கலாமா என்று பக்கோமோவிடம் கேட்ட நபர் ஓட்ஸ் கஞ்சியைக் குடித்துக்கொண்டிருந்தார் .

“கிராமத்துலேருந்து நில ஆணைகள் பத்தித் தெரிஞ்சிக்கணும்னு வந்திருக்கிற பக்கோமோவ்த்தானே நீங்க? நான்தான் லெனின். உக்காருங்க….”

அதிர்ந்தார் பக்கோமோவ்.

“நீங்கதான் லெனின்னு தெரியாம ….”

“அதவிடுங்க. சாப்பிடறீங்களா? ஒரு ஸ்பூன் குடுங்க
தோழர் பக்கோமோவுக்கு…”

“இல்ல தோழர். நான் சாப்பிட்டுட்டேன்…
எப்படி வெண்ணெய்கூட இல்லாம
ஓட்ஸ் சாப்பிடறீங்க…ஒருமாதிரி இருக்குமே…”

“இப்போதைக்கு இப்படித்தான்…”

சிரித்தார் லெனின்.

நிலப் பங்கீடு குறித்த அந்த அப்பாவி விவசாயியின்
கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் பதில் சொன்னார் லெனின்.

பக்கோமோவ் இறுதியாகத் தயங்கியபடி கேட்டார் :

“அதெல்லாம் சரி. நம்மது என்ன மாதிரி அரசாங்கம்.
ஒரு அதிகாரிக்கு மேசைகூட இல்ல.
தலைவர் நீங்க என்னடான்னா வெண்ணெய் வெச்சுக்காம ஓட்ஸ் சாப்பிடறீங்க ?”

“அதுவும் வழுக்கை மண்டையோட?” என்று
தன் தலையைத் தடவிச் சிரித்தார் லெனின்.

“வெறுங்கஞ்சி குடிக்கறவர் ஒரு அரசாங்கத்தை
நடத்தறார்னா ….” என்று பக்கோமோவ் இழுத்தார்.

“இதோ பாருங்க பக்கோமோவ்.
உங்களை சோவியத்துக்குத் தேர்ந்தெடுத்தால் நீங்கள்தானே அரசாங்கம். நைஞ்சுபோன மரப்பட்டை ஷூ , கிழிஞ்ச துணிக் கோட்டு, கயிறு பெல்ட்டு போட்ட நீங்கள்தான் அரசாங்கம். உங்க கிராமத்துல ஒவ்வொருத்தரும் சொல்வாங்க, எகோர் பக்கோமோவ்தான் சோவியத் பிரதிநிதி…இல்லையா?”

கண்கள் நிரம்பின அந்த எளிய விவசாயிக்கு.

அவரை வாசல்வரை வந்து வழியனுப்பினார் லெனின்.

பக்கோமோவின் வாய் முணுமுணுத்தது :

“நான்தான் அரசாங்கம்…
நான் சோவியத் பிரதிநிதி! ”

(Rathan Chandrasekar added)