கோட்டா – பசிலோடு மோதும் மூவரணி

ஆனால், சுமார் ஐந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையிலேயே மூவர் அணியில் இருவரது பதவிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. தன்னுடைய பதவி பறிக்கப்படவில்லை என்கிற போதிலும், விமல், கம்மன்பில ஆகியோரின் பதவி பறிப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டு கோட்டா தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கெடுக்கப்போவதில்லை என்று வாசுதேவ அறிவித்திருக்கின்றார்.

கடந்த ஆண்டு நடுப்பகுதியில் அமைச்சரவையின் அனுமதியின்றி இரவோடு இரவாக கோட்டா, பசில் சகோதரர்கள் கெரவலப்பிட்டிய யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவுக்கு விற்றார்கள். குறித்த மின்நிலையத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்பட்ட போதும், ராஜபக்‌ஷ சகோதரர்கள் மின்நிலையத்தின் பங்குகளை விற்பனை செய்துள்ள அமெரிக்க நிறுவனம் தொடர்பில் எந்தவித அறிவிப்பும் விடுக்கப்பட்டிருக்கவில்லை.

பசில் ராஜபக்‌ஷ தனிப்பட்ட ரீதியில் ஆதாயம் அடைவதற்காக அமைச்சரவையில் ஆராயப்பட்ட நிறுவனத்துக்கு மாறாக இன்னொரு நிறுவனத்துடன் பங்குகளை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார் என்பதுதான் விமல், கம்மன்பில, வாசு மூவர் அணியின் குற்றச்சாட்டு. அவர்கள், குறித்த ஒப்பந்தத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நீதிமன்றத்தையும் நாடியிருக்கிறார்கள்.

அமைச்சரவைக்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியமை தொடர்பிலும் ஊடகங்களில் விமர்சனங்களை முன்வைத்தமை தொடர்பிலும் கோட்டா – பசில் சகோதரர்களுக்கு மூவர் அணி மீது பயங்கர கோபம். ஏனெனில் யாருக்கும் தெரியாமல் கோட்டா பசில் சகோதரர்கள் தங்களின் அமெரிக்க விசுவாசத்தை காட்டுகிறார்கள் என்கிற தோரணையிலான விமர்சனங்கள் தென் இலங்கையில் எழுவதற்கு மூவரணியின் எதிர்ப்பு நடவடிக்கைகள் முக்கிய காரணமாக இருந்தன.

அதுவும் எதிர்க்கட்சிகளைத் தாண்டி மிகுந்த குடைச்சலை மூவரணி கொடுப்பதாக கோட்டா பசில் சகோதரர்களுக்கு காய்ச்சல். அந்த நிலையை கையாளும் நோக்கிலேயே அத்தியாவசியப் பொருட்களில் விலை அதிகாரிப்பு தொடர்பில் ஊடகங்களில் பேசிய இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் பதவி பறிக்கப்பட்டது.

சுசிலின் பதவி பறிப்பு மூவரணிக்கான எச்சரிக்கையாக செய்யப்பட்ட நடவடிக்கை. ஆனால், மூவரணி அந்த எச்சரிக்கையை பொருட்டாக மதிக்கவில்லை. மாறாக, இன்னும் இன்னும் அதிகமாக அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே விமர்சிக்கத் தொடங்கினார்கள். அதற்கு முக்கிய காரணமொன்று அவர்களுக்கு இருந்தது.

அதாவது, தற்போது ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் இருந்தாலும் மூவரணி விரும்பிய மஹிந்த ராஜபக்‌ஷவோ அல்லது அவரது மகனான நாமல் ராஜபக்‌ஷவோ அரசாங்கத்தின் தீர்மானங்களை எடுக்கும் நபர்களாக இல்லை. மாறாக கோட்டா – பசில் சகோதரர்களே தீர்மானங்களை எடுக்கும் நபர்களாக இருக்கிறார்கள்.

மஹிந்தவின் பேச்சு, கோட்டா பசில் சகோதரர்களினால் கணக்கில் எடுக்கப்படுவதில்லை என்பதால், மஹிந்தவின் விசுவாசிகள் அரசாங்கத்துக்குள் ஓரங்கட்டப்பட்டார்கள். அதுதான், மூவரணியும் எதிர்கொண்ட மிகப்பெரிய சிக்கல்.

மூவரணி தங்களை அமெரிக்காவின் எதிரிகளாகவே தங்களின் அரசியல் வாழ்கை பூராவும் முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில், கோட்டா – பசில் சகோதரர்களின் அமெரிக்க விசுவாசம், தங்களின் எதிர்கால அரசியலை கேள்விக்குள்ளாக்கும் என்பது அவர்களது பயம். அதனால், அமெரிக்காவுக்கு மின்நிலைய பங்குகள் விற்பனை செய்யப்பட்ட விடயத்தை முக்கிய விடயமாகவும் மாற்றினார்கள்.

மூவரணிக்குப் பின்னால் இலங்கையை கடன்பொறிக்குள் மாற்றும் நோக்கத்தோடு இயங்கும் சீனாவின் கரங்கள் இருப்பதாகவும் தென் இலங்கையில் நம்பப்படுகின்றது. ஏனெனில், தங்களின் கட்டுப்பாடுகளில் இருந்து கோட்டா – பசில் சகோததர்கள் விலகி, இந்தியாவையும் அமெரிக்காவையும் நோக்கி சாய்வதாக சீனா கருதுகின்றது.

அண்மைய நாள்களில் பசிலின் தொடர் இந்திய விஜயங்களும் அதனையே வெளிப்படுத்துகின்றன. இதனால், சீனா எரிச்சலடைந்திருக்கின்றது. அதனாலேயே, மூவரணியைக் கொண்டு மூர்க்கமான எதிர்ப்பை கோட்டா – பசிலுக்கு எதிராக சீனா முன்னெடுப்பதாகவும் பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் இருப்பதையே சீனா விரும்புகின்றது. ஆனால், அமெரிக்காவுக்கு கடப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற கோட்டா – பசில் கட்டுப்பாட்டில் இலங்கையின் ஆட்சி இருப்பது தங்களுக்கு பாதிப்பானது என்பது சீனாவின் எண்ணம்.

அதனாலேயே, மஹிந்த ராஜபக்‌ஷவினை பலப்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டியேற்பட்டிருக்கின்றது. மூவரணியைப் பொறுத்தளவின் மஹிந்தவின் தீவிர விசுவாசிகள். விமல், கம்மன்பில ஆகியோரின் பதவிகள், மஹிந்தவின் வேண்டுகோள்கள் கோட்டாவினால் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே பறிக்கப்பட்டிருக்கின்றன.

இன்னொரு பக்கத்தில் நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது பாரதூரமானது. ராஜபக்‌ஷர்களின் அரசியல் வரலாற்றில் என்றைக்கும் இல்லாதளவுக்கு தென் இலங்கை மக்களினால் வெறுக்கப்படுகிறார்கள். கடந்த தேர்தலில் ராஜபக்‌ஷர்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியை பரிசளித்த மக்கள், இன்றைக்கு தேர்தலொன்று நடைபெறுமாக இருந்தால், மாற்றி வாக்களிக்கக் கூடிய நிலையே காணப்படுகின்றது. அப்படியான நிலையில், அரசாங்கத்தின் மீதான கோபம் தங்களின் மீதான கோபமாகவும் மாறிவிடக்கூடாது என்பதில் மூவரணி கவனமாக இருந்தது.

பதவி பறிக்கப்பட்டதன் பின்னர், ஊடக சந்திப்பை நடத்திய மூவரணி வெளிப்படுத்திய கருத்துகள் அதனையே வெளிப்படுத்தின. அத்தோடு, ராஜபக்‌ஷர்கள் மீதான மக்களின் தற்போதைய கோபத்தை, கோட்டா – பசில் சகோதரர்கள் மீதானதாக மாற்றும் வகையிலான கருத்துகளையே வெளிப்படுத்தினார்கள்.

தங்களது அரசியல் எதிர்காலம் என்பது ராஜபக்‌ஷர்களில் நிழலிலேயே படர வேண்டியிருக்கின்றது என்கிற உண்மையை மூவரணி தெளிவாகவே உணர்ந்து கொண்டிருக்கின்றது. அவர்களினால் எந்தவொரு தருணத்திலும் சஜித் தலைமையிலான பிரதான எதிரணியோடோ அல்லது இன்னொரு தரப்புடனோ இணைய முடியாது. அப்படியான நிலையில், ராஜபக்‌ஷர்களின் தலையாய ராஜபக்‌ஷவான மஹிந்தவையும், நாமலையும் தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது.

மஹிந்தவைப் பொறுத்தளவிலும் கோட்டா – பசில் சகோதரர்களின் பிடியில் இருந்து ஆட்சியை மீட்டு, நாமலிடம் கையளிப்பதற்கு விமல், கம்மன்பில போன்ற இனவாத சக்திகளின் ஆதரவு அவசியமானது. ராஜபக்‌ஷர்களைச் சுற்றி தேசத்தின் காவலர்கள், மீட்பர்கள் என்கிற ஒளிவட்டத்தை வரைந்தவர்களில் விமலும் கம்மன்பிலவும் முக்கியமானவர்கள்.

ராஜபக்‌ஷர்களின் மீள் எழுச்சிக்காக மூவரணி தென் இலங்கை பூராவும் இனவாதத்தை நாளும் பொழுதும் வளர்த்தார்கள். அப்படியான நிலையில், இனவாதமே அரசியலை வெற்றி கொள்வதற்கான ஆயுதமாக நம்பியிருக்கின்ற மஹிந்தவினால், மூவரணியை விட்டுக்கொடுத்துவிட முடியாது.

விமல், கம்மன்பிலவின் பதவி பறிப்பு தென் இலங்கையில் தங்களுக்கு எதிராக பெரிய அதிர்வை உண்டு பண்ணும் என்பது கோட்டா – பசில் சகோதரர்கள் அறியாதது இல்லை. ஆனால், மூவரணிக்கு ராஜபக்‌ஷர்களைத் தாண்டினால் போக்கிடம் ஏதுமில்லை என்பதும் நன்றாகவே தெரியும். அதுதான், பதவி பறிப்பை சாத்தியமாக்கியிருக்கின்றது.

அத்தோடு, இனியும் அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கத் துணிபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் எண்ணப்பாட்டிலியே பதவி பறிப்பு காட்சி அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.