சொல்லிச் சொல்லி தமிழைத் திருத்த வேண்டிய துர்ப்பாக்கியம்

எனினும், இந்த ஆட்சியைப் பொறுத்தமட்டில், தமிழ்மொழியை மழுங்கடிக்கச்செய்தல், சீர்குலைத்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தெரிந்தும் தெரியாததைப்போல கவனத்தில் எடுக்காமல் விடுதல், மிக இலாவகமாக சிங்கள உச்சரிப்புக்காக சீர்திருத்திவிடுதல் போன்றவை மூலம் தமிழ் மொழியை புறக்கணிப்பதற்கு கனகச்சிதமாகக் காயை நகர்த்திவருகின்றது. 

இது, அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வீதி சமிக்ஞைகள், பெயர் பலகைகள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் அப்பட்டமாக மீறப்படுகின்றது. இவை தொடர்பில் அதிகாரத்தில் இருப்பவர்களும், அரசாங்கத்தில் இருக்கும் தமிழ்மொழி பேசுவோரும் வாயைத் திறப்பதே இல்லை.

நாட்டின் அரசியலமைப்பை பொறுத்தமட்டில், தமிழும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. அது, ‘ஏட்டு சுரக்காய் போலவே உள்ளது’. மிக முக்கியமான தருணங்களில், உலகத்தின் பார்வை திரும்பக்கூடிய நிகழ்வுகள் இடம்பெறும் போதெல்லாம், தவறுதலாக அல்ல, திட்டமிட்டே தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகின்றது. அதனை அதிகாரிகளின் இனவாதமெனக் கூறினால் தவறில்லை.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி,  கொழும்பு துறைமுக நகரில் சில திட்டங்களை ஜனவரி 9 ஆம் திகதியன்று திறந்துவைத்தார். அங்கு காட்சிப்படுத்தப்பட்ட பதாகையில், ஆங்கிலம், சீன மொழிகள் மட்டுமே பயன்படுத்தி வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

துறைமுக நகரில், திறந்துவைக்கப்பட்ட பகுதிகளில், மருந்துக்குக்கூட தமிழ்மொழியைக் காணக்கிடைக்கவில்லை. தமிழ்மொழியைப் புறக்கணித்து, சீன மொழியை உள்வாங்கியது இது முதல் தடவையல்ல; இறுதியாகவும் இருக்கமுடியாது. ஏனெனில், அரசியலமைப்பை கடைப்பிடிக்கவேண்டிய அதிகாரிகளே, அவற்றைக் கண்டும் காணாதது போல இருக்கின்றனர்.

சட்டமா அதிபர் திணைக்களத்தில், சீனாவின் உதவியில் நிர்மாணிக்கப்பட்ட பெயர் பலகைகளில் சீன மொழி உள்வாங்கப்பட்டு, தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டபோது, சமூக வலைத்தளங்களில் பாரிய எதிர்ப்பலைகள் கிளம்பின. அதன்பின்னரே, தமிழ்மொழியும் சேர்த்துக்கொள்ளப்படுமென உறுதியளிக்கப்பட்டது. 

மொழியை அழிப்பதன் ஊடாக, இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படும். பல்லின மக்கள் வாழும் நாட்டில், மொழி,கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து சமமாக மதிக்கவேண்டும். தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வது மனக்கசப்புகளை ஏற்படுத்தும்.

தமிழை சொல்லிச் சொல்லி திருத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலையொன்று ஏற்பட்டுள்ளமையால், ஆளும் தரப்பிலிருக்கும் தமிழ்பேசுவோர், அழுத்தம் திருத்தமான, அறிவுரைகளை அரசாங்கத்துக்கு வழங்கவேண்டுமென நாமும் வலியுறுத்துகின்றோம். 

(Tamil Mirror) 12.01.2022