ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் வரவு செலவுத் திட்டம் 2024

ஜனாதிபதித் தேர்தல் நோக்கி பரந்துபட்ட மக்கள் மத்தியில் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கு அவர் இங்கு சில அறிவிப்புகளை – ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளபோதிலும், அவருடைய விருப்பங்களையும் மீறிய வகையில் இருக்கும் தடைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டே அவற்றை தன்னுடைய இலக்கில் அவர் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் அவர் மேற்கொண்டுள்ளவைகள் மிகச் சிலவே.

1) அரச ஊழியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்று இளைப்பாறுபவர்களாக சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர் இவர்களையும் இவர்களது குடும்ப அங்கத்தவர்களாக உள்ள வாக்காளர்களையும் தனது வாக்கு வங்கியாக உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்குடன், சேவையிலுள்ள அரச ஊழியர்களுக்கு ரூபா 10000 சம்பள உயர்வாக அறிவித்துள்ளார். அதேபோல ஓய்வு பெற்றுள்ளோருக்கு ரூபா 5000 உயர்த்தியுள்ளார்.

2) நாட்டின் மோசமான பொருளாதார நிலைமையின் காரணமாக அதிகரித்த வறுமையின் காரணமாக அரசாங்கம் அஸ்வேசும (ASWESUMA) என்னும் விசேட உதவித் திட்டத்தை தொடங்கியது. அதன் கீழ் வெவ்வேறு வகைப்பட்ட சுமார் 17 லட்சம் பேருக்கு ரூபா 2000 தொடக்கம் ரூபா 5000 வரை மாதாந்த கொடுப்பனவு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. மிக மோசமான வறுமை நிலையில் உள்ளோரென கிட்டத்தட்ட 60000 பேருக்கு ரூபா 15000 வழங்கி வருகிறது. இப்போது ஜனாதிபதி ரணில் அவர்கள் மேற்குறிப்பிட்ட ஒவ்வொருவருக்குமான மாதாந்த கொடுப்பனவை ரூபா 2500 ஆல் உயர்த்தியிருக்கிறார்.

ஆக மொத்தத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி நாட்டு வாக்காளர்களில் சுமார் 37 லட்சம் பேருக்கு ருபா 2500 தொடக்கம் 15000 ரூபா வரை மாதாந்த முன் கொடுப்பனவுகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டம் மூலம் ஏற்பாடு செய்துள்ளார். இந்த அதிகரிப்புக்காக 2024ம் ஆண்டு சுமார் 20000 கோடி ருபாக்கள் செலவிடப்பட உள்ளன. இது தேர்தல் தந்திர ஒதுக்கீடா அல்லது நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஈடு செய்வதற்காகவே மக்களுக்கு இந்த ஒதுக்கீடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அரசியல் பொருளாதார அறிவுடையோரால் பகுத்தறிய முடியும்.

சுதந்திரமடைந்த காலம் தொட்டு, குறிப்பாக 1977ம் ஆண்டு தொடக்கம் அடுத்தடுத்து ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் ஒவ்வொன்றும் மேற்கொண்ட தப்பான பொருளாதார நிர்வாகம் காரணமாக நாட்டின் பிரதானமான பொருளாதார அமசங்கள் ஒவ்வொன்றிலும் பெருகி வந்த நெருக்கடிகள் 2022ம் ஆண்டு ஒரு பெரும் அரசியல் நெருக்கடியாக – பரந்துபட்ட மக்கள் எழுச்சியாக – அறகலய கிளர்ச்சியாக வெடித்தது. நாட்டின் பொருளாதாரம் வங்கிரோத்தானது – அந்நிய நாடுகள் முன்னால் மண்டியிட வேண்டிய நிலைக்கு உள்ளானது. இதையெல்லாம் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கா வெற்றி கொண்டு விட்டார் – நாட்டை நெருக்கடிகளிலிருச்து மீட்டு முன்னேற்றப்பாதையில் செலுத்தி விட்டார் என்றெல்லாம் அவர் பற்றி கூறப்படுகிறது – அவ்வாறு அவரது அரசாங்க சார்பானவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். அவ்வாறு கூறுவது – கருதுவது சரியானதல்ல என்பதை இந்த வரவு செலவுத் திட்டம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.

தொடர்ந்து கடனில் மூழ்கும் நாடு
கணக்கு விடும் விக்கிரம சிங்கன்

2022ம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத வங்கிரோத்து நாடென இலங்கையை அரசாங்கம் அறிவித்த நாளிலிருந்து இன்று வரை வெளிநாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடனின் எந்தவொரு பகுதியும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. இதனால் வெளிநாட்டுக் கடன்கள் மட்டும் இலங்கையில் தேசிய வருமானத்தோடு ஒப்பிடுகையில் 65 சதவீதத்துக்கு மேலாகி உள்ளது. உள்நாட்டுக் கடன்களையும் சேர்த்தால் அது 140 சதவீதத்தை அண்மிக்கிறது. 2024ம் ஆண்டுக்கு அரசாங்கம் வட்டியாக கட்ட வேண்டிய தொகை மட்டும் இரண்டு லட்சத்து அறுநூற்று ஐம்பது கோடி (2650 பில்லியன்கள்) ரூபாக்கள். இது 2024ம் ஆண்டில் கிடைக்குமென அரசாங்கத்தின் திட்டமிடப்பட்டுள்ள மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமாகும். இவ்வாறு வட்டி கட்டும் வீதாசாரம் வருடாவருடம் வேகமாக அதிகரித்துச் செல்கிறதே தவிர குறைவதாக இல்லை.

அபிவிருத்திக்கு மூலதனமில்லை
அலங்காரத்துக்கு அமைச்சர்கள்

2024ம் ஆண்டுக்கான மொத்த செலவீனமாக கிட்டத்தட்ட ஏழு லட்சம் கோடி ருபாக்கள் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க அரசாங்கம் மேலும் சுமார் 2 லட்சத்து எண்ணூற்று ஐம்பது கோடி (2850 பில்லியன்) ருபாக்களை கடன் வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டு அனுபவத்தைக் கணக்கிலெடுத்தால், இந்த கடன் வாங்கல் குறைந்த பட்சம் மேலும் 10 சதவீதத்தால் அதிகரிக்கும். அல்லது அரசாங்கம் அபிவிருத்தக்கென ஒதுக்கியுள்ள மூலதன செலவுகளையே திட்டமிட்ட தொகையிலிருந்து குறைக்க வேண்டும். இரண்டாவதே பெரும்பாலும் நடக்கும். ஆக் அபிவிருத்தித் திட்ட செயற்பாடுகள் எதுவுமின்றி அரசாங்கம் வெறுமனே 1) அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கூலிகள் கொடுத்தல்,
2) கடன்களுக்கு வட்டி கட்டுதல், மற்றும்
3) சமூக பொருளாதார உதவிகள் என வழங்கப்படும் மான்யங்கள் மற்றும் கொடைகள் கொடுத்தல் என்பவற்றோடு காலத்தை ஓட்டுவதே 2024ம் ஆண்டில் அரசாங்கம்.

அரசாங்க வருமானத்தை திட்டமிடப்பட்டுள்ள அளவுக்கு அரசாங்கத்தால் திரட்ட முடியாது என வரவு செவலவுத் திட்டம் வெளிவந்து சில மணி நேரங்களிலேயே பொருளாதார அறிஞர்கள் கூறி விட்டனர். கடந்த ஆண்டு ஜனாதிபதி திட்டமிட்ட வருமானத்தில் சுமார் 15 சதவீதம் குறைவாகவே திரட்ட முடிந்தது. இந்த வருடமும் அதே அளவு வீதாசாரம் குறைவாகவே அரச வருமானம் அமையும் என்பது நிச்சயமே. அதை ஈடு கட்ட அரசாங்கத்தினால் உள்நாட்டிலிருந்தும் சரி வெளிநாடுகளிலிருந்தும் சரி மேலதிகமாக கடன் வாங்க எந்த வாய்ப்பும் இல்லை. ஒரே வழி செலவுகளைளக் குறைப்பதுதான். நடைமுறைச் செலவுகளைப் பொறுத்த வரையில் இதற்கு மேல் குறைக்க முடியாது. மிகக் கட்டாயமான செலவுகளையே அறிவித்துள்ளது. ஆக, அரசாங்கத்தால் கை வைக்கப்பட உள்ள ஒரே இடம் அபிவிருத்திகளுக்கான மூலதனங்களே.

அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தமது அமைச்சின் மூலம் சாதிக்கப் போவதாக எதனையும் எத்தனையும் சொல்லலாம். அவர்கள் எவருக்கும் திறைசேரியிலிருந்து மூலதனச்செலவுகளுக்காக வெறும் கண்துடைப்புக்காக மிகச் சிறு தொகைகளே கொடுக்கப்படும். பெரும்பாலும் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அமைச்சுக்களையே கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான அமைச்சுகளின் 2024ம் ஆண்டுக்குரிய நடைமுறைச் செலவுகளுக்கான ஒதுக்கீடுகள் கூட குறைக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.

வயிற்றைக் கட்டி வாழ மக்கள்
தேர்தல் பந்தயத்தில் ஜனாதிபதி

சரவதேச நாணய நிதியம் நான்கு ஆண்டுகளில் 3000 மில்லியன் டாலர்கள் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தது. 2023ம் ஆண்டு குறைந்த பட்டம் 1000 பில்லியன் அமெரிக்க டொலராவது கிடைக்கும் என அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 300 மில்லியனோடு நிறுத்தப்பட்டு விட்டது. ஏனெனில் அரசாங்கத்துக்கு அவை விதித்த கடப்பாடுகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. 2024ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கணிசமான தொகை உதவியைப் பெறுவதற்கு இந்த வரவு செலவுத் திட்டம் வழி வகுக்க மாட்டாது என்பது இப்போதே தெரிகிறது. இறக்குமதி தடைகளையும் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் இறக்குமதி செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்து, ஏற்றுமதி வருமானத்தை மட்டும் வைத்து இறக்குமதிச் செலவுகளை சமாளிக்கும் வகையாக வெளிநாட்டு வர்த்தக நிதி நிர்வாக முறையையே இந்த அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது.

2021ம் ஆண்டு இறுதியோடு ஒப்பிட்டால், அனைத்து பொருட்களினதம் விலைகள் 100 தொடக்கம் 150 சதவீதம் அதிகரித்தாகவே உள்ளது. இப்போது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பெறுமதி கூட்டு (VAT வரியினை அரசாங்கம் 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அறிவித்துள்ளது. இது சந்தையில் அனைத்து பண்டங்களினதும் விலைகளை 20 சதவீதம் அதிகரிக்கும். ஏனெனில் பெறுமதி கூட்டு வரியானது விற்பனையாளர்களினூடாக நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் வரியாகும். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்று வரையில் நாட்டில் மாதாந்த சம்பள அடிப்படையில் ஊதியம் பெறும் ஊழியர்களில் எவரது வருமானமும் 25 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கவில்லை. இந்த வகையில் ரூ.2500, ரூ.5000, ரூ.10000 என மேலாதிகமாக வழங்கப் போவதான அறிவிப்பு வெறும் தம்மாத்துண்டு அளவான வருமான அதிகரிப்பே.

நாட்டு மக்களின் வாங்கும் திறனைக் குறைத்து, இறக்குமதி குறைப்பால் மற்றும் தடையால் நாட்டின் உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் குறைவாக சந்தைகளில் பண்டங்களின் வழங்கலில் (நிரம்பலில்) ஏற்பட்ட வீழ்ச்சியை ஒரு பொருளாதார நிர்வாகமாக கடைப்பிடிக்கும் தந்திரம் ஜனாதிபதி ரணிலின் பொருளாதார அணுகுமுறையாக ஆகிவிட்டது. மக்களும் அதனை சர்வசாதாரணமாக கடந்து செல்பவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

தமது கடன்களை திருப்பிச் செலுத்துவது தொடர்பான காலத்தை இரண்டு ஆண்டுகள் பின்தள்ளிப் போட ஒத்துக் கொண்டு நாடுகள் மீண்டும் தமது கடனை திருப்பித் தரும்படி கேட்க அடுத்த ஆண்டு தொடங்குவார்கள். அதற்கிடையில் நாட்டின் எந்தெந்த நிலப்பகுதிகள் வெளிநாடுகளுக்கு விற்கப்படப் போகின்றன என்பது தெரியவில்லை. அதற்கிடையில் அடுத்த தடைவை தேர்தல் மூலம் தான் ஜனாதிபதியாக வந்து விட்டால் பின்னர் சமாளித்துக் கொள்ளலாம் எனவுள்ள ஜனாதிபதியின் திட்டம்தான் இந்த வரவு செலவுத் திட்டமோ! விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.

அ. வரதராஜா பெருமாள்
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
17 – 11 – 2023