தன் திண்ணைக்குள் நடாத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள்.

(சாகரன்)
 
1981 மே 31 யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்த சுதந்தர மாணவர் அமைப்பு (இதில் அனேகர் சிங்கள் மாணவர்கள் அங்கம் வகித்தனர்) யாழ் இற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். தமக்கான உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் அவர்கள் மேற்கொண்ட சுதந்திரமான விஜயம் இது. இந்த விஜயத்தின் நோக்கம்; யாழ்ப்பாணத்தில் நூலக எரிப்பு யாழ் சந்தை எரிப்பு சுன்னாகம் சந்தை எரிப்பு போன்ற விடயங்களின் உண்மைத் தன்மையை அறிந்து புகைப்படங்களின் உதவியுடன் இதனை கொழும்பு பல்கலைக் கழத்திலும் அதனூடு எனைய சிங்கள் மக்கள் மத்தியிலும் இலங்கை அரசின் செயற்பாட்டினை அம்பலப்படுத்துவதாகும்.

இதற்கென வந்திருந்த சிங்கள் மாணவர் குழுவை யாழ் பல்கலைக் கழகத்தின் பெரும்பான்மையான மாணவர்கள் வரவேற்கும் மனநிலையில் இருக்கவில்லை. இதற்கு அவர்கள் யாழ் பல்கலைக் கழகத்தில் கல்விகற்ற சிங்கள் மாணவர்கள் தம்மை தமிழ் மக்கள் துன்புறுத்தியவர்கள் என்ற அனுராதபுரத்தை தாண்டியவுடன் செய்த பிரச்சாரமே 1977 ம் ஆண்டு இனக்கலவரம் உச்சநிலையை அடைந்தது என்று தாங்கள் நம்பும் காரணங்களை கூறினர். இதேபோலவே இவர்களும் செயற்படுவார்கள் சிங்களவனை நம்பமுடியாது என்றனர்.
 
ஆனால் கொழும்பு மாணவர்கள் சகல தகவல்களையும் திரட்டி கொழும்பு சென்றதும் தமது பல்கலைகழகத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விடயங்கள் பற்றிய உண்மைத் தன்மையை எடுத்துக் கூறினர். சுவரொட்டிகள் மூலம் இலங்கை அரசை அம்பலப்படுத்தினர். போராட்டங்கள் நடாத்தினர். யாழ் நூல்நிலையம் உட்பட்ட எரிப்புக்களில் அன்றைய யூஎன்பி அரசு தமது அமைச்சர்களை யாழ் அனுப்பி அவர்களின் நேரடிக் கண்காணப்பின் கீழ் இலங்கை இராணுவத்தைக் கொண்டு எவ்வாறு எரிப்பில் ஈடுபட்டனர் என்தை அம்பலப்படுத்தினர். இந்த மாணவர் குழாத்தினை எனது யாழ் பல்கலைக் கழகத்தின் பாலசிங்கம் விடுதியின் 14ம் இலக்க அறையில் தங்கவைத்து யாழ் குடாநாட்டில் எரிப்புக்கள் நடைபெற்ற இடங்கள் எல்லாம் யாழ் பல்கலைக் கழகத்தின் ஜீப்பில்(அப்போது 75 ரூபாய் செலுத்தி மாணவர் மன்றத்தின் ஊடு ஒருநாள் முழுவதும் பாவிக்க சாரதியுடன் இந்த வாகனத்தை பெறமுடியும்) எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்ற அனுபவம் இன்றும் பசுமையாக இருக்கின்றது.
 
இதற்கு சிங்களவனை தனது அறையில் வைத்திருக்கின்றான் (அப்போது துரோகி என்ற பதம் அவ்வளவாக பாவிப்பதில்லை) என்ற வசைகள் என்னை நோக்கி வந்தாலும் எனக்கு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மத்தியில் இருந்த ஆதரவும்(சிறப்பாக கிழக்கு மாகாண மாணவர்கள்) வெளியிலும் இருந்த அரசியல் பின்புலமும் எம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை.
 
 
அன்றைய காலகட்டத்தில் பிரதான பீடங்கள் அமைந்த வளாகத்தில் விஞ்ஞான கலைப் பீட மாணவர்களின் போராட்டங்கள் இணைந்தே நடைபெற்றன. இதில் ‘யதார்தன்’ தற்போது கூறுவதைப்போல் மருத்துவ பீட மாணவர்கள் அன்றும் கலந்து கொள்வதில்லை. தாங்கள் ‘உயர்ந்தவர்கள்’ என்ற மனநிலையில் அவர்கள் இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மருத்துவ பீடம் எமக்கு அறிவிக்காமல் ஈடுபடும் அவர்களுக்கான போராட்டங்களில் செய்தி அறிந்ததம் என்னைப் போன்ற சிலர் தனி மாணவர்களாக அப்போராட்டங்களில் இணைந்தே செயற்பட்டோம். இந்த பீடங்கள் இடையேயான ஏற்றத்தாழ்வு சிந்தனை இன்றுவரை தொடர்வது யதார்தனின் பதிவிலிருந்து அறிய முடிந்தது.
 
 
அண்மையில் யாழ்பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைகிளில் பயணிக்கும் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூடும் இதனை அடுத்த போராட்டங்குளும் நடைபெற்றன. இதற்கான ஆதரவுப் போராட்டங்களை தென் இலங்கை எங்கும் முன்னெடுத்தவர்கள் அனைத்து பல்கலைக் கழக மாணவர்கள். யாழ் பல்கலைக் கழகம் ‘திண்ணை’யைத் தாண்டி இந்த போராட்டத்தை விஸ்தரிக்க முயலவில்லை… முடியவில்லை. அனேக மாணவர்கள் மத்தியில் புரையோடி இருக்கும் குறும் தேசியவாதமும் இதனைப் தனது தேர்தல் வெற்றிகளுக்கு பாவிக்க முற்படும் தமிழ் அரசியல் கட்சிகளின் உசுப்பேத்தல்களும் இந்த போராட்டங்கள் ‘திண்ணை’க்குள் முடங்க காரணமாக இருந்தன.
 
அப்போது எனது பதிவுகள் பலவற்றிலும் இந்த போராட்டம் அனைத்து இலங்கை பல்கலைக் கழக மாணவர்கள் தலமையில் நடாத்தப்பட வேண்டும். அப்படி செயற்படுவதன் மூலமே இதற்கான தீர்வை அடைய முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டியதாக அறிய முடியவில்லை. இன்று அந்த போராட்டமும் இதற்கான தீர்வும் ‘நீர்த்துப் போன’ நிலைக்கே தள்ளிவிடப்படடிருக்கின்றது.
 
 
தற்போது நடைபெற்று வரும் மாலபேயில் அமைந்துள்ள சயிட்டம் மருத்துவக் கல்லூரியை உடனடியாக மூடக்கோரியும், இலவசக் கல்வியை உறுதி செய்யக் கோரியும், கல்விக்கு பட்ஜட்டில் 6% தத்தை ஒதுக்கும் படி கோரியும் பல்கலைக்கழக மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் கடந்த ஒருவருடமாக தொடர்ச்சியாக நடைபெற்று வருவதுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து போராடி வருகின்றனர். பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் பல்கலைக்கழகங்களினால் இலவச கல்விக்கு ஏற்படவுள்ள கழுத்தறுப்பு குறித்து பல பாதயாத்திரைகள், பிரச்சாரங்கள் மூலமாக மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்
 
இந்த பல்கலைகழக மாணவர்களின் போராட்டத்தின் ஒரு அங்கம் யாழில் நடைபெற்றதை செய்திமூலம் அறிய முடிந்தது. இதற்கான ஆதரவை யாழ்பல்கலைக் கழக மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் வழங்கவில்லை என்பதை அறிய முடிகின்றது. யாழ் பல்கலைக்கழக கலைப் பீடமாணவன் யதார்தனின் பதிவு திண்ணைக்குள் முடங்கிக்கிடக்கும் யாழ்பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டை இவ்வாற கூறிநிற்கின்றது:….. சுதேச மருத்துவ முறைகளான சித்த மருத்துவ , யுனானி மருத்துவ துறைகள் பல்கலைக்கழகத்திலும் சரி , வெளியில் வேலை செய்வதிலும் சரி பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. பட்டம் பெறுவதில் தொடங்கின் தொடர்ச்சியாக தங்களின் பிரச்சினைகளுக்கு வலிமையான குரலற்று இருக்கின்றன, அவற்றிற்கு நீங்கள் குரல் கொடுத்து இருக்கின்றீர்களா ? இப்போது எந்தமுகத்தை வைத்துக்கொண்டு அந்த மாணவர்களின் முன் போய் நின்று போராட வாருங்கள் என்பீர்கள் ?
 
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து செயற்படும் முயற்சிகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் நிராகரித்தே வருகின்றனர். இது எதிர்காலத்தில் யாழ்பல்கலைக் கழக மாணவர்கள் மேலும் தனித்துப் போகும் நிலமைகளையே ஏற்படுத்தி நிற்கப்போகின்றது. யாழ் பல்கலைக் கழக மாணவர்களே கிண்ணையை விட்டு வெளியே வாருங்கள் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணையவேண்டிய காலம் இது இதுவே எம்மை மேலும் ஒரு பலமான சக்தியாக உருவெடுக்க ஆவன செய்யும்.