தேவானந்தா காட்டிய பாதையில்….

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் திடீரென தேர்தற் கால ஞானோதயம், அருளோதயம், சிந்தனாதோதயம் என்ற எதோ ஒன்றைப் பெற்று விட்டதைப்போல, ஊரூராகச் சென்று வீதி அபிவிருத்திப் பணிகளைச் செய்கிறார்கள். குளங்களைப் ஆழப்படுத் வேண்டும். வாய்க்கால்களையும் வடிகால்களையும் சீரமைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். கிராம அபிவிருத்திச் சங்கம், சனசமூக நிலையம் போன்றவற்றைப் புனரமைக்க உதவுகிறார்கள். விளையாட்டுக் கழகங்களுக்கு உபகரணங்களை வழங்குகிறார்கள். இப்படிப் பல நற்பணிகள் அவசர கதியில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் ஊரூராகவும் தெருத்தெருவாகவும் நிற்கிறார்கள். பிரதமரின் அமைச்சின் கீழ் கிராம அபிவிருத்தி விசேட செயற்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மூலமாக இவற்றில் சில பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. (மகிந்த காலத்தைப்போலத்தான் இதுவும். கணக்குக் காட்டவே முடியாத அபிவிருத்திப் பணிகள்)

“நாங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் அரசியலமைப்பு உருவாக்கத்துக்கும் அபிவிருத்திக்கும் சம நிலையில் இடமளித்திருக்கிறோம்” என்று கூறுகிறார் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர். “அபிவிருத்தியில்லாமல் அரசியல் இல்லை” என்றும் அவர் மேலும் விளக்குகிறார்.

இப்படி அபிவிருத்தி அரசியல் செய்வதை ஒரு காலம் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை) எதிர்த்தும் கேலி செய்தும் வந்தது இந்தத் தரப்பு.

“அபிவிருத்தி அரசியல் என்பது சலுகை அரசியலாகும். சலுகை அரசியலுக்காக எமது மக்கள் தங்களுடைய உயிரைக் கொடுக்கவில்லை. தங்களுக்கு வீதி வேணும் என்று மக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவில்லை. தங்களுக்கு வேலை வாய்ப்பு வேணும் என்று கேட்டு யாரும் கரும்புலியாகி வெடிக்கவில்லை. மின்சாரம் வேணும் என்று கேட்டு யாரும் போராடவில்லை. இதையெல்லாம் செய்ய வேண்டியது, அரசாங்கத்தின் கடமையாகும். இதெல்லாம் போராட்டத்துக்கு முன்பும் இருந்தவைதான். அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இதுதான் அரசியல் உரிமையாகவும் காட்ட முடியாது. மக்கள் தங்களுடைய உரிமைக்காகவே உயிர்களை இழந்தனர். அதற்காகவே தம்மைத் தியாகம் செய்தனர். ஆகவே அதை அபிவிருத்தி என்ற சலுகை அரசியலின் மூலமாகக் கொச்சைப்படுத்த முடியாது” என்றெல்லாம் அன்றைய தேர்தல் மேடைகளில் வலியுறுத்தப்பட்டது.

“கொள்கையும் இலட்சியமும் முக்கியமே தவிர, இந்த மாதிரி அரசாங்கக் காசைச் செலவழித்துக் காட்டப்படும் படங்கள் முக்கியமல்ல என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், இன்று?

எல்லாம் தேர்தல் படுத்தும் பாடே….

(நாளைய தமிழ் Mirror கட்டுரையிலிருந்து)

(கருணாகரன் சிவராசா)