தோழர் அமரர் க. பத்மநாபா பிறந்த தினம் 19.11.2017

19.11.2017 இன்று தோழர் பத்மநாபாவின் 66 வது பிறந்த தினம். தோழர் பத்மநாபா 1951 ம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ம் திகதி பிறந்தார், அவர் பாசிச்டுக்களினால் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு வயது 39 மாத்திரமே. அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் அவர் சந்தித்த மனிதர்களிடம் அவர் ஏற்படுத்திய தாக்கம், எமது மக்களின் நியாயமான, உரிமைகளுக்காக தீர்க்கதரிசனத்துடன் அவர் வகுத்துக்கொண்ட அணுகுமுறைகள், வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது படிப்படியாக வெளிச்சத்துக்குவந்து கொண்டிருக்கின்றது.

1950 களில் பிறந்தவர்களுக்கு தெரியும் அன்றைய சூழ்நிலை எவ்வாறு இருந்ததென்பது. தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் குறிப்பாக 60 களில் சத்தியாகிரகப்போராட்டம் பலனற்றுப்போயிருந்தமையும் 70 பதுகளில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு மரணங்கள் ஏற்படுத்திய தாக்கம், கல்வியில் தரப்படுத்தும் முறை ஏட்படுத்தப்பட்டமை, இவ்வாறான தொடர் சம்பவங்களும் ஒரு விதமான எழுச்சியை அன்றைய இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது.

அப்போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஏதோ விதத்தில் தீவிர வாதத்தை நோக்கி பயணிக்க தொடங்கினர். அவ்வாறான சாதாரண இளைஞர்களில் ஒருவரே தோழர் நாபா. அவர் ஒரு தத்துவ வாதி என்றோ , யுத்தத் தந்திர விற்பன்னர் என்றோ ஒருநாளும் தன்னை காட்டி கொண்டவருமல்ல அவ்வாறான உருவகப்படுத்துதலை விரும்பியவரும் அல்ல அவர்.ஆனால் அவர் ஒரு வசீகரமும் ஆளுமையும் உள்ள தலைவர் என அவரது எதிரிகளும் ஏற்றுக்கொள்ளுவர். அவரது பலம் அவரது மனித நேயமும், நேர்மையும் அதீத துனிச்சலுமே.

இவ்வாறான சாதாரண இளைஞனாக போராட்டத்தில் பிரவேசித்த தோழர் நபா எமது போராட்டத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பது பற்றி இளைய தலை முறையினர் தெரிந்து கொள்வதற்க்காகவேனும் அவரது அறுபதாவது பிறந்த தினத்தில் சில தகவல்களை பகிர்ந்து கொள்வதே இக்குறிப்பின் நோக்கமாகும்.

தோழர் நாபா முதலில் தமிழ் மாணவர் பேரவையிலும் பின்னர் தமிழ் ஈழ விதலை இயக்கத்திலும் ஒரு முன்னணி செயற்ப்பாட்டளராக இருந்து 1976 இல் மேற்படிப்புக்காக லண்டனுக்கு பெற்றோர்களினால் அனுப்பி வைக்கப்பட்டார்.

லண்டனில் ஈரோஸ் ஸ்தாபகர் தோழர் ரட்னாவை சந்தித்தார். தோழர் ரட்னா பாலஸ்தீனிய இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். தோழர் நாபா ரட்னாவை சந்தித்தபோது ஏற்கனவே சங்கர் ராஜி, அருளர் போன்றவர்கள் பாலஸ்தீனம் சென்று திரும்பியிருந்தனர்.1977 இல் ஈரோசுடன் இணைந்து தோழர்கள் நாபா, ரட்னா, ராஜி, உட்பட ஒரு குழு பாலஸ்தீனம் சென்று பயிற்சி பெற்றனர்.

1977 இல் லண்டனில் ஈழமாணவர் பொதுமன்றத்தை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்க்கான ஆயத்தவேலைகளை முடித்துவிட்டு, தோழர் நாபா இந்தியா ஊடாக ஸ்ரீ லங்கா திரும்பினார்.இலங்கையில் இளைஞர்களுக்கு போலீஸ் கெடுபிடிகள் ஆரம்பித்திருந்த வேளையில், ஓரளவு வசதியுள்ள பெற்றோர்கள் பிள்ளைகளை எப்படியாவது வெளி நாடுகளுக்கு அனுப்பவேண்டும் என்று சிந்திக்க தொடங்கிய காலத்தில், தோழர் நாபாவும் ஏனையோரும், வெளிநாடு, வாய்ப்புக்களை உதறிவிட்டு நாடு திரும்பியிருந்தனர்.

தோழர் நாபா ஸ்ரீ லங்காவில் ஈரோஸ்ஊடாக வெகுஜன அமைப்பு வேலைகளை ஒரு புதிய பரிமாணத்துக்கு எடுத்துச்சென்றார்.தன்னுடன் முன்னமே இளைஞர் இயக்கத்தில் தொடர்பு கொண்டிருந்த தோழர்கள் வரதன், குணசேகரன், பாலகுமார், சின்ன பாலா, பிரான்சிஸ், சோமு, நல்லையா, குகன், ரவி, கைலாஸ், அங்கயர்க்கண்ணி போன்ற பலரை ஈரோஸ் இயக்கத்துடன் தொடர்பு படுத்திக்கொண்டார்.

ஈழ மாணவர் பொதுமன்றத்தை ஆரம்பிக்கும் வேலைகள் வடக்கில் முடுக்கி விடப்பட்டது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணையத்தொடங்கியதுடன் பல வெகுஜனப்போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. பல இளம் தலைவர்கள் உருவாகினர். போலீஸ் இராணுவ கெடுபிடிகளும் கூடிக்கொண்டே இருந்தன. சமூக அநீதிகளுக்கு எதிராகவும், சமூகத்தில் நிலவும் ஊழல்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் ஆரம்பித்தன.பல பரிமாணங்களில் போராட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டன.

சம காலத்தில் 1978 கிழக்குமாகாணத்தில் ஏற்பட்ட புயல் அழிவுகளின் போது வடக்கிலிருந்து சென்ற மாணவர்களுடன் சிரமதான பணிக்காக தோழர் நாபாவும் சென்றிருந்தார். கிழக்கிலும் மாணவர் அமைப்பும், வெகுஜன அமைப்புக்களும் விஸ்தரிக்கப்பட தொடங்கின. EPRLF இன் கிழக்கு மாகான தலைவர்கள் பலர் இந்த கால கட்டத்தில் தான் இணைந்து கொண்டனர்

இதேவேளை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரச்சார வேலைகள் நடைபெற்றதுடன் பல எதிர்ப்பு போராட்டங்களும் இடம்பெற்றன.இராணுவ வேலை திட்டங்கள் ஆரம்பிப்பதில் பல தடங்கல்கள் ஏற்ப்பட்டன. எனினும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன.

ஈரோஸ் இயக்க தலைமையின் ஜனநாயக மத்தியத்துவம் இன்மையும், வெகுஜன அமைப்புக்களை கட்டுவது தொடர்பான உறுதியான வேலைதிட்டமின்மையும், தலைமையில் நிலவி வந்த குழு வாதமும், மக்கள் இயக்கமாக பரிணாமம் பெறுவதற்கு தடையாகவே இருந்தது.

இந்த பின்னணியில் தான் 1981 ம் ஆண்டு கும்பகோணத்தில் EPRLF இன் அமைப்பாளர் மகாநாடு நடைபெற்றது தோழர் நாபா EPRLF இன் செயலாளர் ஆக தெரிவுசெய்யப்பட்டார் அதன் பின்னர் 1984 ம் ஆண்டு கட்சியின் முதலாவது காங்கிரஸ் நடைபெற்றது அதிலும் அவர் கட்சியின் செயலாளர் நாயகமாக தெரிவு செய்யப்பட்டார்.

1990 இல் கட்சியின் புதிய சூழ்நிலைகளில் வகுக்க வேண்டிய வேலைகள் அரசியல் திட்டங்கள் பற்றியும் முடிவுகள் எடுப்பதற்கு இரண்டாவது காங்கிரஸ் ஜ கூட்டும் ஆரம்ப வேலைகளை தொடங்கியிருந்தார். அப்பொழுதுதான் அவர் பாசிச்டுக்களால் படுகொலை செய்யப்பட்டார்.

தோழர் நாபா தான் பழகுபவர்களுடன் எவ்வாறான மனப்பதிவுகளை ஏற்படுத்தி இருக்கின்றார்? முக்கியமாக அவர் படுகொலை செய்யப்பட்டபோது, அவர் சந்தித்த, சந்திக்காத அரசியல் தலைவர்கள் என்ன கூறினார்கள் என்பதையும் முன்னைய பதிவுகளிலிருந்து பார்ப்போம்.

மறைந்த பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி:

என்னுடைய தாயாரும் (திருமதி இந்திரா காந்தியும்) திரு நாபாவும் ஒரே பிறந்த தினங்களை கொண்டவர்கள் இருவருமே உன்னத இலட்சியங்களுக்காக உயிரை தியாகம் செய்தவர்கள் என்றும், கூறியதுடன் அவரை ஒரு சில திங்களுக்கு முன் டெல்கியில் சந்தித்ததை நினைவு கூர்ந்ததுடன் இளமையும், துடிப்பும் உள்ள தனது மக்களுக்கு எவ்வளவோ பணிகள் செய்ய இருந்த ஒருவர் எம்மத்தியில் இல்லாமல் போனமை துர்ப்பாக்கியமே என்றும் குறிப்பிட்டிருந்தார

தோழர் ஏ.நல்லசிவன் CPI(M)

எங்கள் கட்சி அலுவலகத்தில் வைத்து அவரை ஒருமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இளம் வயதிலேயே ஒரு தீர்க்கமான சிந்தனையும், நிதானமாக பிரச்சினைகளை எடுத்து வைப்பது என்ற அவரது பாணியும் எங்களைக் கவர்ந்தது. ஒரு புரட்சியாளனுக்குரிய அத்தனை அம்சங்களையும் நிரம்பப் பெற்றவராக திகழ்ந்து வந்தார். இடைவிடாத போராட்ட வாழ்க்கையில், அன்றாடப் பிரச்சினைகளில் சக போராளிகளுக்கு வழிகாட்டியாகவும் விளங்கி, இந்த அமைப்பை உருவாக்கியதில் முன்னணியில் நின்றார் என்பதை அனைவரும் அறிவர்.

அனைத்துப் பிரச்சினைகளையும் சர்வதேச கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்து, இலங்கையில் தமிழர் விடுதலைக்காகப் போராடும் இதர அமைப்புகளுடன் சாத்தியமான அனைத்து வழியிலும் ஒற்றுமையைப் பேணிக்காக்க முயற்சிப்பது, நடைமுறைச் சாத்தியமான ரீதியில் பிரச்சினைகளைப் பரிசீலிப்பது ஆகிய ஆரோக்கியமான அம்சங்களை அவரது பேச்சிலும், நடைமுறையிலும் நம்மால் பார்க்க முடிந்தது.

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் திரு. பத்மநாபா அவர்களுடைய நினைவையொட்டி சிறப்பு மலர் வெளியிடுவது மன ஆறுதலை தருவதாகும். அதற்கு கட்டுரை வழங்குவதும் எனது தவிர்க்க முடியாத கடமையாகும்.

திரு. பத்மநாபாவை ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனா உடன்படிக்கைக்கு பிறகுதான் அதிகமாக அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர்தான் தொலைக்காட்சியில் அவரை அடிக்கடி தரிசிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

ராஜீவ்-ஜெயவர்த்தனா உடன்படிக்கைப்படி உருவான தமிழ் மாகாணத்திற்கு திரு. பத்மநாபாதான் முதலமைச்சராக வந்திருக்க வேண்டுமென்று பத்திரிகை செய்திகளில் அறிந்து கொண்டேன். ஆனால் திரு. பத்மநாபா பதவிப் பொறுப்பு ஏற்க மறுத்துவிட்டார்.

அது அவருடைய தியாக உணர்வைக் காட்டுகிறது. என்னைப் பெரிதும் கவர்ந்தது. அதன்பின்னர்தான் அவரை அதிகமாக நேசிக்கலானோம்