பகத்சிங் சர்ச்சை : புரட்சிகரப் பயங்கரவாதி என்பது சரிதானா?

(அ.மார்க்ஸ்)

உலகத் தரமான அறிஞர்களால் எழுதப்பட்ட உலகத்தரமான பாடநூல்களை, குறிப்பாக வரலாற்று நூல்களை ஒழித்துக் கட்டுவது என்பது இந்துத்துவத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்று என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. இப்போது அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது மறைந்த டாக்டர் பிபன் சந்திரா அவர்கள் (1928 -2014) தலைமையில் மிருதுளா முகர்ஜி, ஆதித்ய முகர்ஜி, கே.என்.பணிக்கர், சுசேதா மஹாஜன் ஆகியோர் உருவாக்கிக் கடந்த 25 ஆண்டுகளாகப் பாடநூலாக உள்ள ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு’ (India’s Struggle for Independence, 1857-1947) எனும் நூல். இவர்கள் அனைவரும் புகழ் பெற்ற வரலாற்றறிஞர்கள். பிபன் சந்திரா நீண்ட காலம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராகவும், ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ டின் தலைவராகவும், இந்திய வரலாற்று மாநாட்டின் தலைவராகவும் (1985) இருந்தவர். இன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இந்நூலில் உள்ள 39 அத்தியாயங்களில்22 அத்தியாயங்களை எழிதியவர் பிபன் சந்திரா.


இந்த நூலின் 20வது அத்தியாயத்தின் தலைப்பு ‘பகத்சிங், சூரியாசென் மற்றும் புரட்சிகர பயங்கரவாதிகள்’ (Bhagat Singh, Surya Sen and the Revolutionary Terrorists) என்பது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த ‘பயங்கரவாதிகள்’ எனும் சொல்லை வைத்துக் கொண்டுதான் இன்றைய நாடகத்தைத் துவக்கியுள்ளனர் இந்துத்துவவாதிகள். சென்ற ஏப்ரல் 27 அன்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர் அனுராக் தாகூர் என்பவர் இப்படிப் பாட நூலில் நமது விடுதலைப் போராட்ட வீரர்களை’ பயங்கரவாதிகள்’ எனலாமா என ஒரு பிரச்சினையை எழுப்பினார். ஸ்மிருதி இரானி இப்படி மரணமடைந்த தியாகிகளைக் கூறுவது “ஒரு கல்வித்துறைப் படுகொலை” என்றார்.
பகத்சிங்கின் பேரன் முறையுள்ள யத்விந்தர் சிங் சந்து, அபேய்சிங் சந்து என்கிற இரு வழித்தோன்றல்களும் களத்தில் இறக்கப்பட்டனர். அவர்கள் டெல்லி பல்கலைக்கழகத் துணை வேந்தர் யோகேஷ் தியாகியை அணுகி அந்நூல் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தனர். பிபன் சந்திராவின் நூல் பாடநூலாக இல்லை எனவும், அது ஒரு reference book ஆகவே வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களின் புகாரைக் கவனிப்பதாகவும் பதிலளித்தார். இதுதான் இன்று இவர்கள் உருவாக்கியுள்ள பிரச்சினையின் சுருக்க வரலாறு.
பிபன் சந்திராவின் இந்நூல் இன்று தங்களின் கொலைவெறி இலக்காகத் தேர்ந்தெடுகப் பட்டுள்ளதன் பின்னணி என்ன?
பகத்சிங்கும் தோழர்களும் கொல்லப்பட்டபோது தந்தை பெரியார் உட்பட அதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து இந்தியா முழுவதும் இயக்கம் நடந்தபோதெல்லாம் இதில் இந்துத்துவவாதிகள் பங்குபெற்றதில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம். எந்த வகையிலும் பகத்சிங்கை நேசிக்க அவர்களுக்குக் காரணமில்லை. பகத்சிங் தன்னை ஒரு நாத்திகர் என அறிவித்துக் கொண்டவர். இறுதிக் காலத்தில் இடதுசாரிக் கொள்கை உடையவராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இன்றளவும் இந்திய இடதுசாரிகளே அவரது நினைவைப் போற்றி வருகின்றனர்.
பின் இவர்களுக்கென்ன இந்தத் திடீர்க் கரிசனம்?
1.இந்த நூல் மிக்க ஆழமாகவும், மாணவர்களுக்குத் தக எளிமையாகவும் எழுதப்பட்ட ஒன்று. நமது சுதந்திரப் போராட்டம் என்பது ஏதோ காந்தி மற்றும் இந்தியத் தேசிய காங்கிரஸ் ஆகியோரால் மட்டும் போராடிப் பெற்ப்பட்டதல்ல, காங்கிரஸ் போராடியுள்ளது. இடதுசாரிகள் போராடியுள்ளனர், தொழிலாளிகள், விவசாயிகள் போராடியுள்ளனர். படைவீரர்கள் போராடியுள்ளனர், ஏன் அன்னிபெசன்ட் போன்ற ஆங்கிலேயர்களும் கூட அதில் பங்களித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் மன்னர்களின் பங்கு மிக முக்கியமானது.
இப்படிப் பலதரப்பினரும் பங்குபெற்ற இந்திய சுதந்திரப் போரில் யாரேனும் ஒரு தரப்பு பங்குபெறவில்லை என்றால் அது இன்று ஆட்சியில் இருப்பவர்களின் அன்றைய அமைப்பினர்தான். ஆம் இந்துத்துவவாதிகள்தான். எனவே இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறே இவர்களுக்குக் கசப்பான ஒன்று. ஏதேனும் இந்த வரலாற்றில் அவர்களுக்குப் பங்கு உண்டென்றால் அது காட்டிக் கொடுத்தது, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தது இப்படித்தான் அமைகிறது. பிபன் சந்திராவின் நூல் உண்மைகளை அப்படியே சொல்வதால் இந்த நூலில் அவர்களுக்கு இடமில்லை. அவர்களால் வெறுக்கப்படும் காந்தி, நேரு, முஸ்லிம்கள், ஏன் சில ஆங்கிலேயர்கள் ஆகியோரே அதில் முக்கிய பங்கு பெறுகின்றனர். இதை இன்றைய ஆட்சியாளர்களால் சகிக்க இயலவில்லை.
2. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அவர்களுக்கு இடமில்லை என்பது மட்டுமல்ல, குறிப்பாக பாபர் மசூதிப் போராட்டத்திற்கு முன்னதாக அவர்கள் எந்த வெகுஜனப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. இந்நிலையில் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற சிலரை இன்று தம் வசமுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் கையகப்படுத்த முயல்கின்றனர். அந்த வகையில் அவர்கள் இப்போது வல்லபாய் படேல், அண்ணல் அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், சந்திரசேகர ஆசாத் ஆகியோரைக் கையில் எடுப்பதோடு அவர்களால் வெறுக்கப்படும் காந்தி, நேரு, முஸ்லிம் தலைவர்கள் ஆகியோருக்கு எதிராக அவர்களை மிகத் தந்திரமாக நிறுத்தவும் செய்கின்றனர். அந்த வகையில் இப்போது அவர்கள் கையில் எடுக்க முயற்சிப்பது புரட்சியாளர் பகத்சிங். அதன் ஒரு பகுதிதான் இன்று மறைந்த அறிஞர் பிபன் சந்திரா மீது இவர்கள் கல்லெறிவது.
பகத்சிங்கை Terrorist எனச் சொல்வது சரிதானா?
இதுவும் மிகவும் நுணுக்கமாகப் பரிசீலிக்க வேண்டிய ஒன்று. இந்நூல் எழுதப்பட்டு கால் நூற்றாண்டுக்கு மேலாகிறது. சொற்களின் பொருள்கள் காலந்தோறும் மாறி வருகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வரலாற்று அனுபவங்கள் சொற்களின் பொருள்களில் புதிய பரிமாணங்களைத் திணித்துக் கொண்டே கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் “பயங்கரவாதம்” எனும் சொல்லின் பொருளும், அதன் உள்ளடக்கமும் இப்போது பேரளவில் மாறியுள்ளது.
1857 ல் ஆங்கிலேய அரசுக்கு எதிராக நிகழ்ந்த ஆயுத எழுச்சி அப்போது ஆங்கிலேயரால் மட்டுமல்ல நம்மாலும், நம் வரலாற்று ஆசிரியர்களாலும் ‘சிப்பாய் கலகம்’ (Sepoy Mutiny) என்றே அழைக்கப்பட்டு வந்தது. பல காலம் இது நீடித்தது. எனினும் இப்போது நாம் அப்படிச் சொல்வதில்லை. “முதல் சுதந்திரப் போர்” என்கிறோம். அதன் உள்ளடக்கம் குறித்தும் கூட இப்போது கருத்து மாற்றம் வந்துள்ளது. மன்னர்களும் உயர்சாதிப் படை வீரர்களும் நடத்திய போராட்டம் என்பதைத் தாண்டி இப்போது தலித்கள், ஆடல் மகளிர், அடித்தள மக்கள் ஆகியோரின் பங்கு முதன்மைப்படுத்தப் படுகிறது.
இதே போலத்தான் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் இங்கு ‘பயங்கரவாதம்’ என்பதன் பொருள் மிகப் பெரிய அளவில் மாறியுள்ளது. இன்றைய பொருளில் அந்தச் சொல் அதற்கு முன் பயன்படுத்தப் பட்டதில்லை என்பதை நாம் மனம் கொள்ள வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இரு கட்டங்களில் வன்முறை என்பது ஒரு போராட்ட வடிவமாக இருந்தது, இக்கால கட்டங்களில் கொடுமை செய்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கொல்வது என்கிற வடிவில் கொலைகள் மேற்கொள்ளப்பட்டன. 1908 -18 காலகட்டத்தை இவ்வகையில் முதலாவதாகக் கொள்ளலாம். பிரஃபுல்லா சாகி, குதிராம் போஸ், மதன்லால் திங்ரா, சசின் சன்யால், ராஷ் பிஹாரி போஸ், வாஞ்சி நாதன் முதலானோரை இப்படிச் சொல்லலாம். இக்காலகட்டத்தில் 186 பேர் இக்குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர் என்பதை பிபன் சந்திராவின் நூல் பதிவு செய்கிறது. போராட்டக் களத்திற்குக் காந்தி வந்தபின் அவர் முன்வைத்த அகிம்சை எனும் கோட்பாட்டின் ஊடாக நம் விடுதலைப் போராட்டம் பெருந்திரள் மக்கள் போராட்டமாக மாறியது. எனினும் 1922 ல் காந்தி தன் புகழ் பெற்ற ஒத்துழையாமைப் போராட்டத்தைத் திடீரென முடித்துக் கொண்ட போது இதனால் வெறுப்புற்ற இளைஞர்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தினர். ருஷ்யப் புரட்சியும் (1917) இத்தகைய முடிவுக்கு அவர்கள் நகர்ந்ததில் முக்கிய பங்கு வகித்தது. 1925 ல் ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபகுல்லா கான், சந்திரசேகர் ஆசாத் முதலானோர் பணம் ஏற்றி வந்த ஒரு ரயிலை ஆயுதங்கள் வாங்குவதற்கென கக்கொரி என்னும் இடத்தில் கொள்ளையிட்டனர். 1928ல் பகத்சிங், ஆசாத், ராஜகுரு ஆகியோர் ஆங்கில போலிஸ் அதிகாரி சான்டர்சைக் கொன்றனர். 1929ல் பகத்சிங்கும் பாதுகேஷ்வர் தத்தும் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசினர். 1930ல் சூர்யா சென்னும் அவரது தோழர்களும் சிட்டகாங்கில் ஒரு ஆயுதக் கிடங்கைத் தாக்கினர். முதற்கட்டப் போராளிகள் கையில் கீதையுடன் தூக்கு மேடை ஏறினர் என்றால் இவர்கள் அனைவரும் “இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் முழக்கத்தோடு கயிற்றை முத்தமிட்டனர். இவை எல்லாமும் பிபன் சந்திராவின் நூலில் புரட்சிகர நடவடிக்கைகளாகவே முன்வைக்கப்படுகின்றன. நமது விடுதலைப் போராட்டத்தில் இவற்றுக்குரிய பங்கு அதில் சரியாக அளிக்கப்படுகிறது. “1931 மார்ச்சில் அவர் தூக்கிலிடப்பட்டப்போது நாடெங்கிலும் ‘பகத்சிங்’ என்பது வீடுகள்தோறும் உச்சரிக்கும் ஒரு பெயரானது…. அவர் தூக்கிலிடப்பட்ட செய்தி அறிந்து நாடு முழுவதும் ஏராளமானோர் கண்ணீர் சிந்தினர். உணவருந்தவும், பள்ளி செல்லவும், தினசரி வேலைகளைச் செய்யவும் மறந்தனர்..” என்கிறார் சந்திரா. இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அன்று இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ‘பயங்கரவாதம்’ என்றே அழைக்கப்பட்டன என்பதுதான். பகத்சிங் உட்பட அவற்றை மேற்கொண்டவர்களே தம் நடவடிக்கைகளை அப்படித்தான் குறிப்பிட்டனர்.
1929ல் வெளியிடப்பட்ட பகத்சிங்கின் ‘இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசுக் கழக’த்தின் (Hindustan Socialist Republican Association) கொள்கை அறிக்கை இப்படிக் கூறியது: “நமது பயங்கரவாதக் கொள்கைக்காக நாம் கடுமையாக விமர்சிக்கப் படுகிறோம். (ஆனால்) பயங்கரவாதத்தைக் கையிலெடுத்துத்தான் நாம் சரியான எதிர்வினை ஆற்ற முடியும் எனப் புரட்சியாளர்கள் சரியாகவே கருதுகிறார்கள் (We have been taken to task for our terroristic policy. No doubt, the revolutionaries think, and rightly, that it is only by resorting to terrorism that they can find a most effective means of retaliation)” காந்தி இவர்களை “குண்டுகளை வழிபடுபவர்கள்” என விமர்சித்தபோது பகவதி சரண் சர்மா, “குண்டுகளின் தத்துவம் புரட்சியின் ஓர் அங்கம்” எனவும். “பயங்கரவாதம் இல்லாமல் புரட்சி முழுமை அடைவதில்லை” எனவும் கூறினார். எதற்கு இதையெல்லாம் இங்கு சொல்ல வேண்டி வருகிறது என்றால் பிரெஞ்சுப் புரட்சி தொடங்கி கொடுங்கோல் அரசுகளுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகள் ‘பயங்கரவாதம்’ என்றே அழைக்கப்பட்டன என்பதையும் பகத்சிங்கும் தோழர்களும், அவர்களின் இயக்கத்தினருமே அப்படித்தான் அச்சொல்லைப் பயன்படுத்தினர் என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.
இந்தப் பின்னணியில்தான் பிபன் சந்திரா தனது நூலின் இருபதாம் அத்தியாயத் தலைப்பில் பயங்கரவாதம் எனும் சொல்லைப் பயன்படுத்தினார். இந்தப் புத்தகம் எழுதப் படும்போது ‘பயங்கரவாதம்’ எனும் சொல்லுக்கு இன்றைய பொருள் கிடையாது என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்த வேண்டி உள்ளது. அப்போது பயங்கரவாதம் என்பது கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான ஒரு போராட்டவடிவம் என்பதுதான் அதன் புரிதலாக இருந்தது.. குறிப்பான கொடுங்கோலர்களைத் திட்டமிட்டுக் கொல்வது, இதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது என்பதுதான் அன்று அதன் பொருள்.
இன்றோ அடையாளம் தெரியாத அப்பாவி மக்களைக் கொல்வதாகவும் மக்களை அச்சுறுத்துவதாகவும் ‘பயங்கரவாதம்’ எனும் சொல்லின் உள்ளடக்கம் மாறியுள்ளது. இது குறித்து 2007ல் பேசும்போது இன்று அச்சொல்லின் பொருள் மாறியுள்ளது என்பதையும், இனி புரட்சிகரமான நடவடிக்கைகளைப் ‘பயங்கரவாதம்’ என்கிற சொல்லால் குறிப்பிட இயலாது எனவும் பிபன் சந்திரா குறிப்பிட்டார். 2006 ல் பகத்சிங்கின் ”நான் ஏன் நாத்திகன் ஆனேன்?”, “கனவுலகம்” எனும் இரு நூல்களின் தொகுப்பு ஒன்றிற்கு முன்னுரை எழுதியபோது ‘புரட்சிகர பயங்கரவாதம்’ எனும் சொல்லை சந்திரா கையாளவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
இறுதியாக ஒரு கேள்வி நமக்கு எழலாம். இன்றுதான் ‘பயங்கரவாதம்’ எனும் அச்சொல்லின் அந்தப் பொருள் மாறியுள்ளதே, பின் எதற்காக அந்தச் சொல்லுடன் எழுதப்பட்டுள்ள அந்தப் புத்தகத்தை இன்னும் பாடநூலாக வைத்துக் கொள்ள வேண்டும்? அல்லது அந்தச் சொற்களை நீக்கிவிட்டு அந்த நூலைப் பயன்[படுத்த வேண்டியதுதானே? இந்தக் கேள்விக்கு புகழ்மிக்க வரலாற்றாசிரியர் ரொமிலா தாபர் சொல்வது இதுதான்; “ஒரு ஆசிரியனின் எழுத்தை மாற்றி அமைக்க அதைப் பாடபுத்தகமாக வைத்திருக்கும் துணை வேந்தர் உட்பட யாருக்கும், உரிமை இல்லை. ஆசிரியர் உயிருடன் இருந்து, அவர் விரும்பினால் அப்படிச் செய்யலாம். ஆனால் அப்படிச் செய்வது சரியான ஒன்றல்ல. வேண்டுமானால் அந்நூலில் முதல் முறையாக அந்தச் சொல் தோன்றும் இடத்தில் அடிக்குறிப்பாக, அந்த நூலை எழுதும்போது அந்தச் சொல் என்ன பொருளில் கையாளப்பட்டது, இன்று எப்படி அது மாறியுள்ளது என்றொரு விளக்கத்தைப் பதிவு செய்யலாம்.”
அப்படிச் செய்ய வேண்டியதுதானே என்றால் பிபன்சந்திராவே அதைச் செய்து முடித்துவிடார் என்பதுதான் பதில். புத்தகத்தின் 142 ம் பக்கத்தில் ,”இச்சொல் எந்த மரியாதையற்ற பொருளுடனும் பயன்படுத்தப்படவில்லை. வேறு சரியான சொல் இல்லாமையால் இது பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். தவிரவும் பேரா பிபன் சந்திரா இந்தப் ‘பயங்கரவாதம்’ எனும் சொல்லை எப்போதும் ‘புரட்சிகர பயங்கரவாதம்’ என்றே பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பின் குறிப்பு
பயங்கரவாதம் குறித்த தன் கருத்தை இறுதிக் காலத்தில் பகத்சிங் மாற்றிக் கொண்டாரா?
ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை வழிக்கு மக்கள் மத்தியில் இருந்த பெரும் ஆதரவு, இன்னொரு பக்கம் அரசின் அடக்குமுறை ஆகியவற்றுக்கிடையே புரட்சிகரப் பயங்கரவாதப் பாதையைத் தேர்வு செய்த பகத் சிங் முதலானோர் தம் இறுதிக் காலத்தில் தங்களின் கருத்துக்களை மறு பரிசீலனை செய்தனர். வன்முறைப் பாதையைக் கைவிடுவது என்பதை நோக்கி நகர்ந்தனர் என்பதுதான் வரலாறு. இவர்களில் மூத்தவரான ராம்பிரசாத் பிஸ்மில் தூக்கிலிடப் படுவதற்கு முன்னர், “ரிவால்வரையும் பிஸ்டல்களையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையைக் கைவிடுங்கள்” என இளைஞர்களை வேண்டிக் கொண்டார். பதிலாக “வெளிப்படையான இயக்கங்களில்” சேருமாறும் கேட்டுக் கொண்டார்.
பகத் சிங் மிக இளம் வயதில் தூக்கிலிடப் பட்டவர். ஆயினும் அவரது சிந்தனைகளும் அரசியலும் தொடர்ந்து முதிர்ச்சியடைந்து வந்தன. அவரது எந்த ஒரு குறிப்பிட்ட கால அரசியலையும் வைத்து அதுதான் பகத் சிங் என அடையாளப் படுத்துவது சரியில்லை. 1929 வாக்கில் அவரது கருத்து மார்க்சீயத்தைச் சார்ந்தும் அகன்ற வெகு மக்கள் இயக்கமே புரட்சிக்கான சரியான பாதை என்பதை நோக்கியும் நகர்ந்தது. தனி நபர் சாகசம் பயனளிக்காது என்கிற முடிவுக்கும் வந்தார்.
1931ல் சிறையிலிருந்தவாரே அவர் தோழர்களுக்குச் சொன்ன அறிவுரை இப்படியாக அமைந்தது: “வெடி குண்டுகளின் பாதை தொடக்க நிலையில் சில பயன்களைத் தரலாம். ஆனால் அது போதாது. உலகமெங்கும் அது தோற்றுத்தான் போயுள்ளது. அதன் தோல்வியின் விதைகள் ஏகாதிபத்தியவாதிகளின் புரிதலில் இப்படி அமைகிறது: ’30 கோடி மக்களை ஆள ஆண்டுக்கு முப்பது பேர்களைத் தூக்கிலிடுவது போதுமானது’. நாம் பயங்கரவாதத்திலிருந்து முற்றாக நம்மைத் துண்டித்துக் கொள்ளவில்லை. தொழிலாளர் புரட்சி என்கிற பார்வையிலிருந்து அதை முழுமையாக மதிப்பிட விரும்புகிறோம். ஒரு புரட்சிகரக் கட்சியின் தயார் நினென்பது அவர்களின் ஆதரவு வலிமையுடன் ஒன்றிணைக்கப்பட்டிருக்க வேண்டும்”
ஆக மக்களின் முழுமையான ஆதரவு இல்லாத சாகசங்களால் பயனில்லை என்பதுதான் பகத்சிங்கின் இறுதிக் கருத்தாக இருந்தது.