பறிபோகும் மட்டு மாநகர தமிழ் கிராமங்கள் ?

மட்டக்களப்பு என்றதும் வெளிமாவட்ட மக்களுக்கு கல்லடி பாலமும், அதனை அடுத்துள்ள இராமகிருஷ்ண மிசனும், விபுலாந்தர் சிலையும் தான் நினைவுக்கு வரும். கல்லடி உப்போடை, மஞ்சந்தொடுவாய், நாவற்குடா, நொச்சிமுனை என நீண்டு செல்லும் தமிழ் பாரம்பரிய கிராமங்கள் தமிழர்களின் கைகளை விட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது

காலப்போக்கில் விபுலானந்தர் சிலை கூட உடைக்கப்பட்டு பள்ளிவாசலோ அல்லது மாட்டிறைச்சி கடையோ கட்டப்படலாம். ஓட்டமாவடியில் காளி கோவிலை இடித்து மாட்டிறைச்சி கடை கட்டியது போல இங்கும் நடைபெறலாம். இந்த காட்சிகள் நடைபெறுவதற்கு வெகுகாலம் செல்லாது என்பதற்கான நகர்வுகள் மிகக்கச்சிதமாக நடைபெற்று வருகிறது.

அதன் முதற்கட்டமாகவே மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக அஸ்மி என்பவர் நியமிக்கப்பட உள்ளார். மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக இருந்த உதயகுமார் கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்திற்கு அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளராக இருந்த அஸ்மி என்பவர் நியமிக்கப்பட உள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை தற்போது ஆணையாளரின் நிர்வாகத்திலேயே உள்ளது. ஏற்கனவே ஆணையாளராக இருந்த உதயகுமார் இடமாற்றம் பெற்று செல்வதால் அந்த இடத்திற்கு கிழக்கு மாகாண கலாசார திணைக்;கள பணிப்பாளராக இருக்கும் திருமதி வி.சிவப்பிரியா அவர்கள் நியமிக்கப்பட இருந்த வேளையில் அதனை மட்டக்களப்பு அரசாங்க அதிபராக இருக்கும் திருமதி சாள்ஸ் தடுத்து நிறுத்தியிருந்தார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளராக சிவப்பிரியா கடமையாற்றிய காலத்தில் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிரதேச செயலகத்திற்குள் புகுந்து உடமைகளை சேதப்படுத்தி அடாவடித்தனம் செய்திருந்தார். இது தொடர்பாக சிவப்பிரியா பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து அம்பிட்டிய சுமணதேரருக்கு ஆதரவாக செயற்படும் அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் பட்டிப்பளை பிரதேச செயலாளராக இருந்த சிவப்பிரியாவை திருகோணமலைக்கு இடமாற்றம் செய்திருந்தார்.

மீண்டும் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக சிவப்பிரியா நியமிக்கப்பட போகிறார் என்பதை அறிந்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் அதனை தடுத்து நிறுத்தியிருந்தார். இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளராக இருந்த அஸ்மி என்பவரை நியமித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் மொத்த சனத்தொகை 92 438பேராகும். இதில் தமிழர்கள் 85913 பேர் ஆகும். முஸ்லீம்கள் 1706 பேர் வாழ்கின்றனர். 90வீத தமிழர்களும், 5 வீத முஸ்லீம்களும் 5 வீத பறங்கி இன மக்களும் வாழ்கின்றனர். ஏற்கனவே அருகில் உள்ள காத்தான்குடி நகரசபையினால் மட்டக்களப்பு மாநகரசபை பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தது.

காத்தான்குடியை அண்டிய நொச்சிமுனை நாவற்குடா, போன்ற எல்லைக்கிராமங்களில் தமிழ் மக்கள் அச்சம் காரணமாக தமது காணிகளை முஸ்லீம்களுக்கு விற்றுவிட்டு வெளியேறி வரும் நிலையில் அக்கிராமங்களை தமது பிரதேசத்துடன் இணைத்து கொள்வதற்கு காத்தான்குடி நகரசபை முயற்சி எடுத்து வருகிறது. எல்லைநிர்ணய சபையிலும் இந்த கிராமங்களை காத்தான்குடி நகரசபையுடன் இணைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கல்லடி உப்போடை இராமகிருஷ்ணபுரத்திற்கு பின்புறம் ( கடற்கரை பக்கம் ) வரை முஸ்லீம்கள் குடியேறியுள்ளனர். இந்த பகுதிகளையும் காத்தான்குடி நகரசபையுடன் இணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் பலம் காரணமாக பூநொச்சிமுனை, நாவற்குடா, கல்லடி உப்போடை வரையான பகுதிகள் காத்தான்குடி நகரசபையுடன் இணைக்கப்படலாம் என்ற அச்சம் தற்போது அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவு காத்தான்குடி மற்றும் கல்லடி பாலம் வரையான கல்லடி உப்போடை, டச்பார், நாவலடி, நொச்சிமுனை, நாவற்குடா பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இக்கிராமங்களை காத்தான்குடி பொலிஸ் பிரிவுடன் இணைத்துக்கொண்டவர்கள் தற்போது காத்தான்குடி நகரசபையுடன் இப்பகுதிகளை இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இது எத்தகைய ஆபத்து நிறைந்தது என்பதை அப்பகுதி மக்கள் நன்கறிவர். மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக தமிழர் ஒருவர் பணிபுரிந்ததால் இந்த முயற்சிகளுக்கு தடை ஏற்பட்டிருந்தது.

காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட கழிவுகளை மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கொட்டுவதால் மட்டக்களப்பு மாநகர பகுதி சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதுடன் மட்டக்களப்பு வாவியும் மாசடைந்து வருகிறது. மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்திற்குள் காத்தான்குடியின் கழிவுகளை கொட்டுவதற்கு எதிராக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் சட்ட நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.

இதை விட மட்டக்களப்பு நகரை அண்டி இருக்கும் எருமைத்தீவை காத்தான்குடி நகரசபையுடன் இணைப்பதற்கும் சில அரசியல்வாதிகளின் உதவியுடன் காத்தான்குடி நகரசபை முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் எருமைத்தீவு மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் வருவதால் மட்டக்களப்பு மாநகரசபை இதற்கு இணங்கவில்லை.

முஸ்லீம் அரசியல்வாதிகளின் இந்த ஆக்கிரமிப்புக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் இடம் கொடுத்தாலும் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் உதயகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வெ.தவராசா ஆகியோர் இடம் கொடுக்காததால் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட தமிழ் கிராமங்கள் ஓரளவு காப்பாற்றப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக இருந்த மா.உதயகுமார் கொழும்பிற்கும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக இருந்த வெ.தவராசா கல்முனைக்கும் இடமாற்றப்பட உள்ளனர்.

ஆக்கிரமிப்புக்களுக்கு இருந்த தடைகள் அகற்றப்பட்ட நிலையில் காத்தான்குடி நகரசபையும் முஸ்லீம் அரசியல்வாதிகளும் விரும்பும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க கூடிய ஆணையாளர் மட்டக்களப்பு மாநகரசபைக்கு நியமிக்கப்பட உள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் உட்பட தொழில்நுட்ப உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் என 17க்கும் மேற்பட்ட முஸ்லீம் அதிகாரிகள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஆணையாளரின் நியமனத்தின் மூலம் காத்தான்குடி நகரசபையின் கழிவுகள் அனைத்தும் தங்கு தடை இன்றி மட்டக்களப்பு மாநகர பிரதேசத்தில் கொட்டப்பட உள்ளது. மட்டக்களப்பு வாவிக்கரைகளில் கழிவுகள் கொட்டப்படுவதால் வாவி முழுமையாக மாசடைந்து வாவியை நம்பி வாழும் சுமார் 3ஆயிரம் தமிழ் குடும்பங்கள் நிர்கதியாகும் நிலை ஏற்பட உள்ளது.

வாவி மாசடைவதால் வாவியை அண்டிய கிராமங்களில் மக்கள் வாழ முடியாத அவலமும் ஏற்படலாம். தொற்றுநோய்கள் ஏற்பட்டு நோய் உள்ள சமூகமாக மட்டக்களப்பு நகரில் உள்ள தமிழ் மக்கள் மாறலாம்.

அதை விட மட்டக்களப்பு மக்களின் உயிர்நாடியாக இருப்பது மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிசனும், விபுலானந்தர் சமாதியும், விபுலானந்தர் நினைவு தூபியுமாகும். கல்லடி உப்போடை வரை காத்தான்குடி நகரசபையின் ஆளுகைக்குள் சென்றால் இராமகிருஷ்ண மிசன் மட்டுமல்ல விபுலானந்தரின் சமாதியும் சிலையும் தரைமட்டமாகும் என்பது திண்ணம்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட எருமைத்தீவை தமது ஆளுகைக்குள் கொண்டுவர நீண்டகாலமாக காத்தான்குடி நகரசபை எடுத்து வந்த முயற்சி புதிய ஆணையாளரின் நியமனத்தின் மூலம் மிக விரைவில் கைகூடலாம். எருமைத்தீவு வாவியால் சூழப்பட்ட தீவாகும். இங்கு மக்கள் குடியிருப்புக்கள் இல்லையாயினும் வயல் நிலங்கள் உள்ளன. தமிழ் மக்கள் இந்த நிலங்களில் நெற்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எருமைத்தீவு காத்தான்குடி நகரசபையின் நிர்வாகத்தின் கீழ் சென்றால் தமிழர்கள் அத்தீவில் கால் வைக்க முடியாத நிலை ஏற்படும்.

மாநகரசபைகள் நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் மாகாணசபைகளின் கீழே உள்ளன. கிழக்கு மாகாண முதல்வர் தனக்கிருக்கும் அதிகாரத்தை பாவித்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதை தடுக்கும் வக்கற்றவர்களாகவே கிழக்கு மாகாணசபையில் ஆட்சி நிர்வாகத்தில் பங்கெடுத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளனர்.

7 உறுப்பினர்களை மட்டும் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் ஆட்சியை கைப்பற்றியிருக்கி;றார்கள். அக்கட்சியை சேர்ந்த நஷீர் அகமட் முதலமைச்சராக உள்ளார். 11 உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த ஆட்சிக்கு முண்டு கொடுத்து அதற்கு பிரதிஉபகாரமாக இரு அமைச்சுக்களை பெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சராலும் மாகாணசபை நிர்வாகத்தாலும் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்பட்டு அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போதிலும் அதை தட்டிக் கேட்க வக்கற்றவர்களாகவே கிழக்கு மாகாண ஆட்சியில் பங்குதாரர்களாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளனர்.

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெறும் பொம்மைகளாகவே செயல்படுகின்றனர் என்பதற்கு அண்மையில் மட்டக்களப்பில் நடந்த சம்பவத்தை குறிப்பிடலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்வீக தமிழ் பிரதேசங்களில் உள்ள அரச காணிகளில் முஸ்லீம் அரசியல்வாதிகள் தமக்கு வேண்டியவர்களை குடியேற்றி வருகின்றனர். வாகரை, மற்றும் செங்கலடி பிரதேச செயலகப்பிரிவுகளில் இக்குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றனர்.

வடமுனை வண்ணாத்தியாறு பகுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் ஏறாவூரைச்சேர்ந்த 150 முஸ்லீம் குடும்பங்களுக்கு காணிகளை வழங்கியிருந்தார். இந்த காணிகள் சட்டரீதியாக காணிக்கச்சேரி வைத்து வழங்கப்படவில்லை. சட்டவிரோதமாக வழங்கப்பட்ட இக்காணி;களை சட்டரீதியாக்கி கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் ஆடிய நாடகமே அண்மையில் செங்கலடி பிரதேச சபை மண்டபத்தில் நடத்தப்பட்ட காணிக்கச்சேரியாகும்.

திடீரென காணிக்கச்சேரி நடத்தப்போவதாக கிழக்கு முதலமைச்சர் நஷீர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அப்பிரதேச செயலாளருக்கோ அல்லது கிழக்கு மாகாண அமைச்சராக இருக்கும் துரைராசசிங்கம் உட்பட தமிழ் மாகாணசபை உறுப்பினர்களுக்கோ முறைப்படி அறிவிக்கப்படவில்லை. முதலமைச்சர் காணிக்கச்சேரி வைக்கிறார் என பொதுமக்கள் அறிந்தது போலவே கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம், மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான இந்திரகுமார் பிரசன்னா, துரைரத்தினம் ஆகியோர் அங்கு சென்றிருந்தனர்.

காணிக்கச்சேரி நடத்தப்படுவதாக அறிந்து 2ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர். அங்கு உரிய முறைப்படி காணிக்கச்சேரி நடத்தப்படாது அங்கு வந்த மக்களிடம் விண்ணப்பங்களை மட்டும் பெற்று திருப்பி அனுப்பிவிட்டனர்.

ஏற்கனவே காணி வழங்கப்பட்ட 150 குடும்பங்களுக்கும் சட்;டரீதியாக காணிக்கச்சேரி நடத்தப்பட்டு காணி வழங்கப்பட்டது என உறுதிப்படுத்துவதற்காக 2ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அன்று அலைக்கழிக்கப்பட்டனர்.

இவை எவற்றையும் தட்டிக்கேட்பதற்கு அல்லது தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு வக்கற்ற கையாலாகத்தனத்துடனேயே கிழக்கு மாகாணசபையில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும், பாராளுமன்றத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளும் உள்ளனர்.

முஸ்லீம் அரசியல்வாதிகள் அதிகாரத்தில் இருக்கிறார்கள், இதனால் எங்களால் எதனையும் செய்ய முடியவில்லை என சில தமிழ் அரசியல்வாதிகள் ஆதங்கப்பட்டு கொள்கின்றனர்.

அரசாங்கத்தில் இணைந்திருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகள் அந்த பலத்தை வைத்து கொண்டு சில விடயங்களை சாதிக்கிறார்கள் என்றால் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏன் எதனையும் செய்ய முடியாமல் இருக்கிறது. அவ்வாறு எதுவும் செய்ய முடியவில்லை என்றால் வரவு செலவு திட்டம் உட்பட அரசு கொண்டுவரும் பிரேரணைகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஆதரவளிக்க வேண்டும், எதிர்க்கட்சி தலைவர் பதவியில் எதற்காக ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் நியமன விடயம் கிழக்கு மாகாணசபை நிர்வாகத்திற்கு உட்பட்டதாகும். இந்த நியமனத்தை தடுத்து நிறுத்தி மட்டக்களப்பு மாநகரசபைக்கு ஆளுமை மிக்க தமிழ் அதிகாரி ஒருவரை ஆணையாளராக நியமிக்க முடியாவிட்டால் கிழக்கு மாகாண அமைச்சர்களாக இருக்கும் துரைராசசிங்கம், தண்டாயுதபாணி ஆகியோர் தமது பதவிகளை துறந்து ஆட்சிக்கு முண்டு கொடுப்பதிலிருந்து விலகவார்களா? மக்களை அணிதிரட்டி தமிழ் கிராமங்களை காப்பாற்ற முன்வருவார்களா?

(இரா.துரைரத்தினம் – தினக்கதிர் )