பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 30)

குச்சவெளியில் பரமசாமி என்றொருவர் இருந்தார்.அவர்தான் கட்டாக்காலி நாய்களைச் சுடுபவர்.இவருக்கு துப்பாக்கி,தோட்டாக்கள் மற்றும் பணமும் வழங்கப்படும்.இவர் நாய்களை அதிகம் சுடுவதில்லை. நாய்களைச் பிடித்து வால்களை வெட்டி கொன்றதாக பொய் சொல்லி பற்குணத்திடம் காட்டி பணம் பெறுவார்.உண்மையில் கிராம சேவையாளர் மூலமாகவே அவர் போக வேண்டும்.கிராம சேவையாளருக்கு இவரின் பொய்கள் விளங்கும்.அதனால் அவர் அவரிடம் போவதில்லை .பற்குணம் தெரிந்தும் விளங்காததுபோல நடந்துகொள்வார்.அவருக்கு மிருகங்களைக் கொல்வது,அடிப்பது விருப்பம்இல்லாத விசயம்.

தனது நிர்வாக எல்லைக்குட்பட்ட மக்களைச் சந்திப்பதுபோல எல்லைக்குட்பட்ட காடுகளையும் மலைகளையும் பார்வையிட்டார்.இவ்வாறாக சலப்பை ஆற்றங்கரையை அண்டிய வெள்ளாச்சி மலைக்கு போயிருந்தார்.அந்த மலையில் மனித நடமாட்டம் காணப்பட்டது.அது அடர்ந்த காட்டுப்பிரதேசம்.அந்த மலையில் ஒரு சிறுவாசல் ஊடாக குகை தெரிந்தது.மிகவும் துப்பரவாகவும் இருந்தது.பயமாக இருந்தாலும் அங்கே யார் நடமாடுகிறார்கள் என அறிய விரும்பி குகைவாசலில் சத்தம் போட்டார்.கூட சென்றவர்கள் பயப்பட்டனர்.ஆனால் எந்த பதிலும் வராததால் உள்ளே செல்ல முடிவு எடுத்தார்.கூட வந்த ஒருவர் தான் போவதாக கூற அவரைதல் தடுத்து தான் மட்டும் தவழ்ந்து உள்ளே சென்றார்.மற்றவர்களை தான் திரும்பிவரும்வரை உள்ளே நுழையக் கூடாது என எச்சரித்துவிட்டு நுழைந்தார்.

உட்பகுதி வீடுமாதிரி இருந்தது.சமையல் நடந்திருக்குறது.கோழிகள் நின்றன.விளக்கு எரிகிறது. யாரும் இல்லை.ஒரு கொப்பி பென்சில் இருந்தது.அதில் யாராவது உள்ளே வந்தால் பெயர்களைப் பதியும்படி எழுதப்பட்டிருந்தது.இவர் பற்குணம் டி.ஆர்.ஓ குச்சவெளி என எழுதிவிட்டு வந்தார்.இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

சில மாதங்களின் பின்பு குமார் ரூபசிங்க குச்சவெளிக்கு வந்தார்.அவர் அப்போது சுனேத்திராவின் கணவர்.பற்குணத்தை சந்திக்கவில்லை.தன்னை யாரென்று எவரிடமும் சொல்லவில்லை.திரும்பிப் போகும்போது சலப்பை ஆற்றங்கரையில் இந்த மலை அவரின் கண்ணில் பட்டது.அங்கே போக விரும்பி அதற்கு ஒரு தமிழ் தெரிந்த ஒருவர் உதவியைக் கேட்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்.எந்தவிதமான பந்தாவையும் அவர் காண்பிக்கவில்லை.

அவருக்கு உதவியாக எங்கள் அண்ணன் இரத்தினசிங்கத்தை அனுப்பினார்.அந்த மலை என்றதும் போகிற பாதையைக் சொல்லி அந்தக் குகை பற்றியும் விளக்கினார்.குமார் ரூபசிங்கவும் அண்ணனுடன் போனபோதும் அந்தக் குகைக்குள் தானே முதல் நுழைந்தாராம்.

திரும்பிவரும்போது கடும்மழையில் அவரது வாகனம் புதைந்துவிட்டது.ஒருவாறாக மீட்டு எங்கள் அண்ணனை திரும்ப கொண்டுவந்துவிட்டு அம்மாவை வணங்கிவிட்டு குமார் ரூபசிங்க அந்த குகையில் வாழும் மனிதரைப் பற்றிக் கேட்டார்.அதற்கு அங்கே இருப்பவர் ஆபத்தான மனிதராக உணரமுடியவில்லை.எனவே நான் கவலைப்படவில்லை என்றார்.

பற்குணம் திருமணமாகி வந்தபோது அந்த மர்ம மனிதர் நிறைய முட்டைகள் பழங்கள் சகிதம் வீட்டுக்கு வந்தார்.அவர் ஒரு இஸ்லாமிய பெரியவர்.குடும்பத்தை வெறுத்து அந்த குகையில் தனிமையில் வாழ்ந்தார்.பற்குணம் விருந்து கொடுத்து அனுப்பினார்.

(விஜய் பாஸ்கரன்)
(தொடரும்….)