பற்குணம் (பகுதி 107)

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இந்திய இராணுவம் இலங்கை வந்தது.இதன் பின்னர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.இவரகளில் ஒரு தொகுதியினர் திருகோணமலை வந்தடைந்தனர்.இவர்களை இந்திய உளவுப்படையினர் பயன்படுத்தி ஆயுதங்களை கையில் கொடுத்து நகரையும் நகரை அண்மித்து வாழ்ந்த சிங்கள மக்களையும் விரட்டியடிக்க ஆலோசனை வழங்கினார்கள்.

அப்போது வந்தவர்கள் சிறையில் வதைப்பட்டவர்கள் என்பதால் மிகவும் ஆக்குரோசமாக அங்கே குடியேறிய சிங்கள மக்களை கந்தளாய்வரை ஓட விரட்டியடித்தனர்.வடகிழக்கு மாகாண சபை அமைந்தபின் சட்டரீதியாக குடியேறியவர்கள் தவிர ஏனையவர்களை மீள குடியமர்த்த வடகிழக்கு மாகாண நிர்வாகம் சம்மதிக்கவில்லை.மேலும் மீன்சந்தை பஸ்நிலையம் போன்றவற்றை ஆக்கிரமித்த சிங்கள வியாபாரிகளையும் வெளியேற்றினார்கள் .இது தொடர்பாக புனர் வாழ்வு அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் வின்சன்ட் பெரேரா வடகிழக்கு மாகாண அரசுடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் நிராகரித்து விட்டனர்.

பாராளுமன்ற பொதுதேர்தல் நெருங்குவதால் அதற்கு முன்பாக விரட்டப்பட்ட சிங்கள மக்களை எப்படியாவது திருகோணமலையில் மீள குடியேற்ற முயன்றார்.சாத்தியப்படவில்லை.

இந்த சூழ்நிலையை மாற்றவே பற்குணத்தை சந்திக்க விரும்பினார்.சில நாட்களின் பின் பற்குணம் என்னைக் காணவந்தார்.பின் நான் அவருடன் வின்சன்ட் பெரேராவை சந்தித்தேன்.பற்குணம் பற்றிய சகல தகவல்களையும் அவர் தெரிந்து வைத்திருந்தார்.

நாங்கள் சென்றதும் அவரே வந்து வரவேற்றார்.பின்பு எனது நலன்களை விசாரித்தார்.என்னை அமெரிக்கா செல்வதற்கு விசா எடுத்துத் தரமுடியும் .தனக்கு தெரிந்தவர்கள் வர்த்தக தொடர்புகள் வைத்திருக்கிறார்கள் எனக் கூறினார்.என்னையும் ஒரு பந்தாக்கும் முயற்சியே அது.பின்னர் என்னைப் போகச் சொன்னார்.

அதன்பின் பற்குணத்திடம் எப்படியாவது வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களை குடியேற்ற வரதராஜபெருமாளிடம் அனுமதி பெற்றுத் தருமாறு வேண்டுதல் விடுத்தார்.பொதுவாக மந்திரிகளே லஞ்சம் வாங்குவார்கள்.ஆனால் அவரோ பற்குணத்துக்கு பணத்தாசை, பதவி ஆசை இரண்டையும் காட்டிப் பேசினார்.ஜனாதிபதி மூலமாக நல்ல பதவிகளை பெற்றுத் தருவதாக கூறினார்.பற்குணம் தன்னை விட்டுக் கொடுக்கவில்லை .அமைதியாக பதிலளித்தார்.

நான் இப்போது வடகிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் அதிகாரி.அவரகளின் நிர்வாகத்துக்கு கட்டுப்பட்டவன்.இது பற்றி அவர்கள் மட்டுமே முடிவெடுக்க முடியும் என பதிலளித்தார்.அவர் எவ்வளவோ கீழிறங்கியும் பற்குணத்தின் பதில் அதுவாகவே இருந்தது.மறுநாள் தன்னுடைய அலுவலகத்துக்கு வந்து சந்திக்கும்படி கூறி பற்குணத்தை அனுப்பினார்.

யாரோ ஒருவர் பற்குணம் சொன்னால் வரதராஜபெருமாள் கேட்பார் என்ற தகவலையும் அவருக்கு வழங்கியுள்ளார்கள்.மறுநாள் அலுவலக சந்திப்பில் இதையும் தெரிவித்தார்.அதற்குப் பற்குணம் அவர்களுக்கு சொந்தமான செயற்பாடுகள் உண்டு. எனக்காக அவர்கள் முடிவுகளை மாற்றமாட்டார்கள்.அப்படி இருந்தாலும் நான் தலையிடமாட்டேன் என கூறிவிட்டு வந்தார்.இந்த தகவலை என்னிடம் சொன்னார்.

அதன் பின்னரும் வின்சன்ட் பெரேராவை காண்பேன்.அவர் இதுபற்றி எந்தவிதமான வெளிப்பாடுகளையும் எங்களிடம் காட்டவில்லை.ஒரு தடவை என்னை அழைத்து இத்தாலி செல்ல விருப்பமா எனக் கேட்டார்.விருப்பம் இருந்தபோதும் அண்ணனை நினைத்து இல்லை என சொல்லிவிட்டேன்.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)